ஐரோம் ஷர்மிளா பெயரில் இருக்கும் அழகியல் வசீகரம்

நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் பெரும் வெற்றியை ஈட்டியதன் மூலம் மற்றைய மாநிலங்களில் அது தவறவிட்ட செய்தியை இல்லாமல் ஆக்கியிருக்கிறது பிஜேபி. இந்த வெற்றி குறித்து தெரிவிக்கப்படுவது அச்சம் என்றால், மணிப்பூரின் ‘ஐரோம் ஷர்மிளா’ வெறும் தொண்ணூறு வாக்குகள் மட்டுமே வாங்கி தோல்வியைத் தழுவியிருப்பது நாடு முழுக்க ஆழ்ந்த கசப்பை உருவாக்கிவிட்டிருக்கிறது.

அவரது தோல்வி ஏன் இந்தியா முழுக்க விவாதத்தைக் கிளப்புகிறது என்றால் அதுவொரு லட்சியவாதத்தின் தோல்வி என்பதால்தான். இத்தகைய போராட்டங்கள் எல்லா காலத்திலும் குறியீட்டுத் தளத்தில் மட்டுமே நிகழும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதும் அது அரசியல் வெற்றியாகக் கனியாமல் போவதும் மற்றொரு காரணம். இந்த தோல்வியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இங்கு தேர்தல் வெற்றி என்பதன் பொருள் என்ன, அரசு என்பதன் ‘இருப்பு’ எதில் பொதிந்திருக்கிறது என்பவற்றிலிருந்து உரையாடலைத் தொடங்கவேண்டும்.

இங்கு ‘அரசு’ என்பதை நிர்வாக அமைப்பு என்பதாக மட்டும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். அந்த புரிதல் ஒற்றைப்படையானது. நமது ஒவ்வொருவரது மனதிலும் அரசு என்பது குறித்த சித்திரம் என்ன? அரசு என்றால் அது வலுவானதாக, நிலைத்ததாக, நீடித்த அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதுதான். ஆக அரசு என்று வருகிறபோது மூர்க்கமானதொரு ஒழுங்கை ஏற்படுத்தும் அதிகார அமைப்பாக நம்முள் அது விரிந்து நிலைத்திருக்கிறது. இப்படியான ஒரு கருத்தாக்கத்தை நாம் ஏன் வரித்துக்கொள்கிறோம் என்றால் நாம் நிறைய அச்சமடைபவர்களாக இருக்கிறோம் என்பதுதான் காரணம். யார் மீது அச்சம்? ஒவ்வொரு தனி மனிதரும் மற்ற தனிமனிதர்கள் மீது கொள்ளும் அச்சம்தான் அது.

இந்த அச்சத்தில் இருந்து விடுபடுவது அத்தனை எளிதானது அல்ல. ஏனென்றால் அரசு, ராணுவம், போலீஸ் போன்ற நிர்வாக அமைப்புகளை பாதுகாப்பு வழங்கும் புற அமைப்புகளாக நாம் நம்பத்தொடங்கி நூற்றாண்டுகள் ஆகின்றன. ஏனென்றால் நமது நாகரிக வளர்ச்சி என்பது நமது பழங்குடி மனநிலையின் அமைப்பு முறையில் இருந்து விலகி வந்து அவற்றை வேறு ஒரு அமைப்பிடம் கையளிப்பது என்பதாக இருக்கிறது. எந்த பெரிய அமைப்பும் அவ்வாறுதான் உருவாகிறது. போலீஸ் என்ற அமைப்பு உருவாகிறபோது நமது தனிப்பட்ட பாதுகாப்பை அவர்களிடம் கையளித்துவிட்டு நாம் சற்று உறங்க முடியும் என நினைக்கிறோம். ராணுவம் என்று வருகிறபோது ஒரு பழங்குடி அமைப்பின் தற்காப்பு முறைகளைக் களைந்துவிட்டு நாம் குறைந்தபட்ச சுதந்திர தனிமனிதர்களாகிவிட முடியும் என்று நம்புகிறோம்.

ஆக, இங்கு அமைப்பு என்பது தன்னளவில் இருவேறு தோற்றம் கொண்டதாக நம்முள் இருக்கிறது. நமக்குத் தேவையான ஒன்று மற்றும் நாம் வெளியேற நினைக்கும் ஒன்று. அதே சமயம் நாம் நம்மீது செலுத்தப்படும் அதிகாரத்தை வெறுப்பவர்களாக இருக்கிறோமே தவிர அதிகாரத்தையே வெறுப்பவர்களாக இல்லை. இங்குதான் நாம் மற்றவர்கள் மீது செலுத்தும் அதிகாரத்தின் முனை இருக்கிறது.

இதுதான் ஐரோம் ஷர்மிளாவின் தோல்வியைப் புரிந்துகொள்ளும் புள்ளி. ஷர்மிளாவின் போராட்டம் என்பது இராணுவ அத்துமீறலை எதிர்ப்பதன் வழியாக குறியீட்டு ரீதியிலான அதிகார நீக்கத்தை மக்களிடம் கோருகிற ஒன்றும் கூட. ஆக ராணுவத்தை ஒரு தரப்பாகவும் மணிப்பூரின் மக்களை மற்றொரு தரப்பாகவும் புரிந்துகொள்ளும் தன்மையில் இருந்து நாம் முதலில் வெளியேற வேண்டும். அப்படி ஒரு இருமை அங்கு இல்லை.

ராணுவம் என்கிற கருத்தாக்கத்தை இல்லாதொழிப்பதும் அதன் அத்துமீறலை இல்லாதொழிப்பதும் ஒன்றின் மீது ஒன்று தம்மைப் பொருத்திகொண்டு கலந்துபோயிருக்கிறது அங்கு. இந்த முரண்களை அரசியல் ரீதியாக புரிந்துகொள்வதில் ஐரோம் தோற்றிருக்கிறார் என்பது இந்த தோல்வியின் பின்னுள்ள காரணங்களில் ஒன்று. மேலும் அரசியல் என்பதை புனிதத்துவத்துக்கு எதிரான பாவமாக வரித்துக்கொண்டிருக்கும் மக்களின் மனநிலையும் முக்கியமான ஒரு காரணம். ஆச்சர்யமாக இருந்தாலும் இதில் உண்மை இருக்கிறது. உனக்கு ஏன் இந்த வேலை…? நீ புனிதவதி இல்லையா…? என்கிற எண்ணம்தான் அது.

ஐரோமுக்காக நம்மிடம் கசியும் கண்ணீரில் இருப்பதும் இந்த பரிதாபம்தான். இந்த அவமதிப்பில் இருந்து முதலில் ஷர்மிளாவை நாம் விடுவிக்கவேண்டும். இந்த தோல்விக்காக நாம் வருந்துவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் எந்த அமைப்பின் வன்முறைக்கு எதிராக அவர் போராடினாரோ அந்த அமைப்பின் பகுதியாக அவர் மாறுவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கிறார் அவர். இதை மிகவும் எளிதான மொழியில் சொல்வதானால், சுதந்திரத்துக்குப்பிறகு காந்தி பிரதமராகியிருந்தால் அவர் மீதான நேர்மறை சித்திரங்களை அழித்துவிட்டே அவர் இறந்துபோயிருக்கக்கூடும். காந்தியின் இடம் என்பது அரசியல் அதிகாரத்துக்கு வெளியில் மட்டுமே பொருள் கொள்ளக்கூடியது. அதிகாரத்தின் மையத்தில் அது ஆவியாகிவிடும். வெளியில் இருக்கும் வரைதான் அது அறம் சார்ந்த உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கும். அத்தகைய போராளிகளின் உச்சபட்ச சாத்தியமும் அவசியமும் அதுவே.

ஷர்மிளாவுக்கும் இது பொருந்தும். ஐரோம் ஷர்மிளாவின் குறைந்த வோட்டு என்பது இரண்டாவது. முதலில் அவரது தோல்வி உறுதியாவது அவர் யாரை எதிர்த்து நின்றார் என்பதில் இருக்கிறது. முதலைமச்சர் ஒக்ரம் இபோபி சிங்கை எதிர்த்து நிற்கிறார் ஐரோம் ஷர்மிளா. அந்த வகையில் மக்களை மிகுந்த தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் ஒரு காரியத்தை செய்தவராகிறார் அவர்.

அவரது பதினாறு ஆண்டுகால போராட்டம் என்பது ஒரு எளிய மனுஷியின் பிடிவாதம். அதுவொரு அரசியல் அறிதல் முறையாகக் கனியவே இல்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த லட்சியவாத மூர்க்கத்தை அவரது தோல்வியாகக் கருதவேண்டியதில்லை. மாறாக அந்த குறியீட்டு இருப்பை கவுரவிப்பதன் மூலம் அவரை மதிக்கவேண்டும். அப்படியான குரல்களை மேலும் மேலும் உருவாக்கி நிறுத்துவதிலேயே ஜனநாயகத்தின் உயிர் இருக்கிறது. இதில் சோர்வடைய ஒன்றுமில்லை.

அப்படி என்றால் அவரை தோற்கடித்ததன் மூலம் அந்த மக்கள் செய்த துரோகம் இல்லையா என்று கேட்கலாம். இல்லை என்றே நாம் நம்புகிறேன். ஏனெனில் ஐரோம் ஷர்மிளாவின் இடமும் இருப்பும் இதற்காக அல்ல என்று அந்த மக்கள் நினைத்தால் அது சரியாகவே இருக்கும். தொண்ணூறு பேர் ஷர்மிளாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். நூற்று நாற்பத்து மூன்று பேர் நோட்டா பட்டனை அமுக்கியிருக்கிறார்கள்.

ஒக்ரம் இபோபி சிங்கை அந்த மக்கள் ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் எப்படி? சிங்கை எதிர்த்துப் போட்டியிட்ட பிஜேபியின் வேட்பாளரை விட இரண்டு பங்கு வாக்குகளை அவருக்கு அளித்து. என்ன சொன்னாலும் சரி, ஐரோம் ஷர்மிளா எனும் பெயரில் இருக்கும் அழகியல் வசீகரம் மிக்கது. காலத்தால் நிலைத்திருக்கும் கருத்துநிலை அது!
(Karl Max Ganapathy)