கண்டி யாத்திரையும் இம்புல்கொடே வீரயாவும்

முதலாவது பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கையை எதிர்த்த சிங்களப் பேரினவாதிகள் எல்லாரும் ஒரே நோக்கத்திற்காக எதிர்த்ததாகக் கூற இயலாது. அதற்கு வெவ்வேறு நோக்குகள் இருந்தன. ஆனால், எதிர்ப்பில் ஒன்றுபட்டு பேரினவாதத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது சிங்களப் பேரினவாத சிந்தனைக்குட்பட்ட எல்லாருமே அவ்வுடன்படிக்கையை எதிர்த்தனர் என்று சொல்ல முடியாது. 

வெறித்தனமாக சிங்களப் பேரினவாதத்தை முன்னெடுத்த கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜி.சேனநாயக்க போன்றவர்களும் தீவிரவாத புத்த பிக்குமாரும் இலங்கையில் சிங்கள பௌத்த ஆதிக்கத்திற்கு மறுப்பான முறையில் சிறுபான்மைச் சமூகங்கட்கு எவ்விதமான சலுகைகளும் வழங்கப்படலாகாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

இவர்களது நிலைப்பாடு சிங்கள பௌத்த நாடாக மட்டுமே இலங்கை திகழ வேண்டும் என்பதே. அவர்களது பிரதான நோக்கம் பண்டாரநாயக்கவைத் தமக்கு உடன்பாடாகச் செயற்படவைப்பதே. இதற்கு பேரினவாதத்தைப் பயன்படுத்தினார்களே தவிர அவர்கட்கு வேறு நோக்கங்கள் அப்போதைக்கு இருக்கவில்லை. 1956இல் பண்டாரநாயக்கவின் வெற்றி முதன்முறையாக உயர்குடி அல்லாத மற்றோருக்கு அரசியல் செல்வாக்கைச் சுவைப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. அதைத் தவறவிட அவர்கள் தயாராக இல்லை. பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்த கொஞ்சக் காலத்திலேயே இவர்களிடையே முரண்பாடுகள் தோன்றின. இந்நிலையில், பண்டாரநாயக்கவை கட்டுக்குள் வைக்க இந்த உடன்படிக்கையை பயன்படுத்த அவர்கள் தயாரானார்கள். 

மறுபுறம் 1956 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த படுதோல்வி கட்சியின் இரண்டு பெரும் தலைவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டியது. ஒருவர் டட்லி சேனாநாயக்க, மற்றவர் ஜோன் கொத்தலாவல. இந்நிலையில், ஊசலாடிக்கொண்டிருந்த கட்சியை யார் காப்பாற்றுவார்கள் என்ற வினா எழுந்தது. அடுத்த நிலைத் தலைவர்களில் மூத்தவரான ஜே.ஆர்.ஜயவர்த்தன இதைப் பயன்படுத்தினார். ஜே.ஆர்.ஜயவர்த்தன சிங்கள மக்களிடையே பண்டா-செல்வா உடன்படிக்கை பற்றி இருந்திருக்கக் கூடிய ஐயங்களைப் பயன்படுத்தி உடன்படிக்கையை எதிர்ப்பதன் மூலம் பண்டாரநாயக்காவைப் பலவீனப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதுடன், தன்னையும் கட்சிக்குள் பலப்படுத்திக் கொள்ள இதை நல்ல வாய்ப்பாகக் கண்டார். பண்டா- செல்வா உடன்படிக்கை பற்றி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் கவனம் கொள்ளவில்லை என்பதும் கவனிப்புக்குரியது. 

இந்நிலையில், உடன்படிக்கையை எதிர்த்து கண்டி யாத்திரையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒழுங்கு செய்தார். ஐக்கிய தேசியக் கட்சி கண்டிக்கு பேரணியாக சென்று தலதா மாளிகையில் உடன்படிக்கைக்கு எதிராக சத்தியப்பிரமாணம் செய்ய தீர்மானித்தது. கொழும்பு-கண்டி வீதியில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை கட்டம் கட்டமாக அணிவகுத்து 72 மைல் தூரத்தை கடந்து அதனை ஒரு மாபெரும் காட்சியாக்க ஐக்கிய தேசியக் கட்சி விரும்பியது.

நடைபயணத்தின் இறுதியில் ‘பட்டிருப்புவ’வில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1957ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி கண்டியில் ஒன்றுகூடி, பண்டாரநாயக்காவுக்கும் செல்வநாயகத்துக்கும் இடையிலான உடன்படிக்கையின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்துவதைத் தடுப்பதாகத் தலதா மாளிகையின் முன் சபதம் எடுக்குமாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களின் மகாநாயக்கர்கள் பகிரங்க அழைப்புக் கடிதம் ஒன்றை வழங்குமாறு வற்புறுத்தப்பட்டனர். அக்டோபர் 8ஆம் திகதி பௌர்ணமி போயா நாள்.

அந்நாளே இதற்குத் தேர்தெடுக்கப்பட்டது. அக்டோபர் 3ஆம் திகதி  ஆறு நாள் அணிவகுப்பைத் தொடங்கி, அக்டோபர் 8ஆம் திகதி  வெகுஜன பேரணிக்கு சரியான நேரத்தில் கண்டியை அடைவது ஜே.ஆரின் திட்டமாக இருந்தது. அணிவகுப்பவர்கள், தங்களை யாத்ரீகர்கள் என்று வர்ணித்து, ஒவ்வொரு நாளும் 12 மைல்கள் நடக்க வேண்டியிருந்தது.

முதல் நாள் ஊர்வலத்தில் ஓய்வில் இருந்த டட்லி சேனாநாயாக்கா, இளந்தலைவரான ரணசிங்க பிரேமதாச ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். முதல் நாள் நடைபயணம் வெற்றிகரமாக நிறைவேறியது. அத்தனகல்லை தேர்தல் தொகுதியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் நடைபயணத்தின் இரண்டாம் கட்டத்தை முடிக்க ஜே.ஆர் திட்டமிட்டார்.

அத்தனகல்லை பண்டாரநாயக்காவின் சொந்தத் தொகுதி. அப்பிரதேசத்தின் பூர்வ குடிகள் பண்டாரநாயக்க குடும்பத்தினர். எனவே தங்களது சொந்தப் பகுதியிலேயே ஜே.ஆர் அணிவகுத்து வந்து இரவு தங்க அனுமதிப்பது அரசியல் சவாலாகவும் தனிப்பட்ட அவமானமாகவும் பார்க்கப்பட்டது. அதேவேளை அரசாங்கத்தில் இருந்த முற்போக்குச் சக்திகள் இந்தக் கண்டி யாத்திரை இனமுரண்பாட்டை இன்னும் கூர்மையடைய வைக்கும் என்று நம்பினர். அதில் முதன்மையானவர் எஸ்.டி.பண்டாநாயக்க. 
எஸ்.டி.பண்டாரநாயக்க, பிரதமர்  எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் உறவினர்.

இருவரும் பண்டாநாயக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை நிறுவிய முதன்மையாளர்களில் எஸ்.டி.பண்டாநாயக்கவும் ஒருவர். 1952இல் பாராளுமன்றுக்குத் தெரிவான ஒருசில ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர்களில் இவரும் ஒருவர். அக்காலத்தில் பாராளுமன்றில் ஆங்கிலத்தில் பேசும் வழக்கம் இருந்தது.

ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்ட எஸ்.டி.பண்டாநாயக்க தனது கன்னிப் பேச்சைச் சிங்களத்திலேயே நிகழ்த்தினார். உரை முடிய சபைத்தலைவர் இவரை ஆங்கிலத்தில் உரையாடும்படி கேட்டார். அதற்கு பதிலளித்த எஸ்.டி. பண்டாநாயக்க தன்னால் தமிழில் உரையாட முடியாததை இட்டு வருந்துவதாகவும் நாட்டில் பெரும்பான்மையோரால் விளங்கிக் கொள்ளப்படாத ஒரு அந்நிய மொழியான ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் என்று கேள்வி எழுப்பி சபையை சலசலப்புடைய செய்தவர். எஸ்.டி.பண்டாநாயக்க தனிச்சிங்கள கொள்கையை எதிர்த்தார். அது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் எல்லோரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.   

கண்டி யாத்திரை மிகவும் வன்மத்துடனும் உள்நோக்குடன் நடைபெறுகிறது என்பதை எஸ்.டி.பண்டாநாயக்க உள்ளிட்ட சிலர் உணர்ந்து கொண்டார். பிரதமரின் உதவியோடு எஸ்.டி.பண்டாரநாயக்க அதிர்ச்சியையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் வகையில் யாத்திரையைத் தடுப்பதற்கான ஒரு திட்டத்தை வகுத்தார். மறுநாள் காலை நேரத்தில் கொழும்பு-கண்டி வீதியில் இம்புல்கொடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அணிவகுப்பவர்கள் அடைவார்கள் என்று எதிர்பார்த்து தனது வியூகத்தை வரைந்தார். சாலையில் ஒரு குறிப்பிட்ட இடம் ‘கெரில்லா’ தாக்குதலுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. சாலை குறுகலானது மற்றும் ஒரு குறுகிய வளைவைச் சுற்றி இருபுறமும் கரைகள் அல்லது சிறிய குன்றுகள் இருந்தன. தாக்குதல் நடத்துவதற்கு இது ஒரு சிறந்த இடமாக இருந்தது. 

விடியற்காலையில் ஐக்கிய தேசியக் கட்சி அணிவகுப்பை மீண்டும் ஆரம்பித்தது. மூன்று மைல் தூர ஊர்வலத்தில் சுமார் 7:20 மணியளவில் ஐ.தே.க இம்புல்கொடையை அடைந்தது. ஒரு கட்டத்தில் இரண்டு வாகனங்கள் வீதியின் நடுவில் நிறுத்தப்பட்டிருப்பதை அணிவகுப்பவர்கள் கண்டனர். இரண்டு வாகனங்களுக்கும் இடையில் ஒரு மனிதன் சாலையில் படுத்திருந்தார். அது வேறு யாருமல்ல, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.பண்டாரநாயக்க. அவ்விரு வாகனங்களுக்குப் பின்னால் சுமார் 150 பேர் சாலையில் அமர்ந்திருந்தனர். 500க்கும் மேற்பட்டோர் சாலையின் இருபுறமும் அணிவகுத்துச் சென்றவர்கள் மீது வீசப்படும் பொருட்களுடன் நின்று கொண்டிருந்தனர்.

வீதியில் நின்ற வாகனங்களில் ஒன்று  எஸ்.டி.பண்டாரநாயக்கவுக்கு சொந்தமான வோக்ஸ்வேகன். கம்பஹா மக்கள் இதனை முன்னதாக அவருக்கு வழங்கியிருந்தனர். மற்றைய வாகனம் எஸ்.டியின் அரசியல் நண்பரான டாக்டர் எம்.சி.சந்திரசேனாவுக்கு சொந்தமானது. அவரும் அங்கிருந்தார். 

கண்டி யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது. அப்பகுதியின் பாதுகாப்புக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியான டி.எஸ்.தம்பையா வழிமறிப்பவர்களை விலகிக்கொள்ளும்படி கேட்டார். இதற்குப் பதிலளித்த  எஸ்.டி, தாங்கள் யாரையும் தடுக்கவில்லை என்றும் நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் இந்த யாத்திரைக்கு எதிராக அமைதி வழியிலேயே தாம் போராடுவதாக வாதிட்டார். வேறுவழியின்றி பஸ்களில் ஏறி ஜே.ஆரும் மற்றோரும் மீண்டும் கொழும்பு திரும்ப நேர்ந்தது.

இதனைத் தொடர்ந்து எஸ்.டி.பண்டாரநாயக்க ‘இம்புல்கொடே வீரயா’ என்று அழைக்கப்பட்டார். சுதந்திர இலங்கையின் வரலாற்றில் கண்டி யாத்திரை நிறுத்தப்பட்டமையானது முக்கியமான ஒரு நிகழ்வு. ஆனால், அதற்குரிய மரியாதை எமது வரலாற்றுப் பக்கங்களில் இல்லை.