போராளி விஜயனின் மரணம்

(Varathar Rajan Perumal)
எனது பால்ய வயது நண்பன் விஜயன் இன்று இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டு சில நிமிடங்கள் எனது நெஞ்சுக்குள் ஒரு வலி. விஜயனும் நானும் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் பக்கத்து வீடுகளில் சில நாட்கள் இடைவெளியில் பிறந்தவர்கள். எங்களது 17/18 வயதுகளில் நாதன் என்ற இன்னொரு நண்பனும் நாங்கள் மூவருமாக பல்வேறு வகையான உடற்பயிற்சிகளில் ஆர்வம் கொண்டிருந்தோம். எங்களது வீடுகளுக்கு அண்மையில் கெற்றப்போல் அடிப்பதில் கெட்டித்தனம் கொண்ட சில சிறு பையன்கள். அவர்களிடம் 10 சதத்துக்கு ஒரு அணில். 20 சதத்துக்கு ஒரு வௌவ்வால் என பல தடவைகள் வாங்கி ரகசியமாகி உரித்து சுட்டுத் தின்ற நினைவுகள்.