போராளி விஜயனின் மரணம்

19 வயது இளைஞனாக எனது முதல் நேரடி அரசியற் செயற்பாடும் விஜயனுடனேயே ஆரம்பித்தது. 1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி இலங்கை குடியரசாக ஆக்கப்படவும் அதற்கான அரசியல் யாப்பை நிறைவேற்றவும் தயார் செய்து கொண்டிருந்த வேளை. அதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே நாங்கள் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் யாப்புக்கு எதிராக எம்மளவிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.

என்னோடு விஜயன் மேலும் எமக்கு அயல் நண்பர்களான சிவாத்மன் மற்றும இன்னுமொருவர் ஆக நான்கு பேர் ஒரு குழுவாக செயற்பட்டோம். யாழ்ப்பாணத்தின் கொட்டடி, வண்ணார்பேட்டை, யாழ் இந்துக்கல்லூரி சூழலில் இருந்த சுவர்கள் மற்றும் கட்டிடங்களெல்லாம் கறுப்பு மை எழுத்துக்களால் உணர்ச்சி கிளப்பும் உசுப்பேத்தும் வசனங்களால் நிறைத்தோம்.21ம் திகதி இரவு சுமார் யாழ் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் பொலிஸார் விரித்து வைத்த வலையில் அகப்பட்டுக் கொண்டேன்.

இலங்கை குடியரசான விடியல் வேளை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய கைதிகள் கூண்டில் முடமாக்கப் பட்டவன் போல் கிடந்தேன். ஆனால் சில மணி நேரங்களுக்குள் பல இளைஞர்கள் அடுத்தடுத்து பொலிஸ் நிலையம் கொண்டு வரப்பட்டனர். எனக்கு எதிர்கால அரசியல் நண்பர்கள், தோழர்கள் பலரை அரசாங்கம் இணைத்து விட்டது.

பின்னர் தமிழ் இளைஞர் பேரவை என செயற்பட்ட வேளையில் சில காலம் யாழ் நகர மட்டத்தில் அரசியல் நண்பனாக துணையாக இருந்த விஜயன் சில ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து விட்டார். 1984லிலும் 2010ம் ஆண்டும் விஜயனை பிரான்ஸ் நாட்டிலேயே சந்தித்தேன்.

நான் சிரமப்பட்ட இளம் வயதுக் காலங்களில் விஜயனின் தாயார் அவர்களது வீட்டுக்குச் சென்ற ஒவ்வொரு வேளையிலும் தனது பிள்ளைகளில் ஒருவனாகவே அன்பு காட்டினார். அடுத்த தடவை பிரான்ஸ் செல்லும்போது விஜயனைச் சந்திப்பேன் என்றிருந்தேன். அந்த வாய்ப்பை இயற்கை எனக்கு மறுத்து விட்டது.

நல்ல மனிதனாக வாழ்ந்து சென்றுள்ள விஜயனின் ஆத்மா சாந்தி அமையட்டும்.

Siva Murugupillai //…யாழ் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் பொலிஸார் விரித்து வைத்த வலையில் அகப்பட்டுக் கொண்டேன்…// – இவ்வேளையில் வரதராஜப்பெருமாளுடன் அறிமுகம் பழக்கம் ஏதும் இல்லாத சூழலிலும் இந்த நிகழ்விற்கு ஆதரவாக யாழ் இந்துக் கலலூரி விடுதியில்(அப்போது நான் யாழ் இந்து மணவன்வன், 9ம் வகுப்பு)) தங்கியிருந்த நாங்கள்(அப்போது கர்த்தால் இனால் பாடசாலைகள் பூட்டு) பாடசாலையின் கேற்றில் நின்று இந்த கறுப்பு மை எழுத்துகளுக்கு ஆதரவாக எமது கையால் எழுதிய சுவரொட்களை ஓட்டிக் கொண்டிருந்த வேளை பொலிஸ் வர சாறத்துடன் நின்றபடியால கல்லூரிக்குள் ஓடி விடுதிக்குள் ஓடி பொலிசின் பிடிபடுதல்… லத்தி அடியில் இருந்து தப்பி கொண்டோம். வரதரின் இந்தப் பதிவு இப்போதுதான் 38 வருடங்களுக்கு பின்னர் இணைத்துப் பார்க்க வைக்கும் வரலாற்று சம்பவமாகி எனக்கு ஏற்பட்டு இருக்கின்றது விஜயனுக்கு எமது ஆழந்த இரங்கல்கள். நட்பு, தோழமை, சக போராளி என்று பல பரிணாமங்களுடன் இருந்து உறவை தொலைந்த வலியை நாமும் வரதருடன் இணைந்து அனுபவிக்கும் உணர்வு எனக்கு ஏற்படுகின்றது விஜயனுக்கு எமது அஞ்சலி