மே – 18 ஆம் திகதி என்பது எனன?

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டுமொரு தடவை முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறார். வடக்கு மாகாண சபையின் நடவடிக்கையை தவிர மிகுதி அனைத்து விடயங்களிலும் சதிராடுகின்ற தனது சம்பிரதாய கூத்துக்களில் ஒரு பகுதியாக இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளிற்குள் தனியாக நின்று காவடியாடுவதற்கு அறிவிப்பு விடுத்திருக்கிறார்.

இவருக்கு சரியானதொரு நிர்வாகத்தை கொண்டுநடத்துவதற்குத்தான் தெரியாது என்று பார்த்தால் இறந்தோரை நினைவுகூருவதற்குரிய அடிப்படைப்பண்புகூட புரியாத அளவுக்கு அதிகார மமதை கொண்டவராக தன்னை மீண்டும் மீண்டும் போட்டுடைத்திருக்கிறார். நினைவேந்தல் நிகழ்வை அரசியலாக்குமளவுக்கு தான் கம்பு சுத்தினாலும்கூட தன்னை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் அவர் காணப்படுகிறார்.

மே – 18 ஆம் திகதி என்பது எனன?

ஈழத்தில் இன அழிப்புக்கு உள்ளானவர்களை நினைவுகூருகின்ற தினம். இதனை ஒட்டுமொத்த தமிழர்களும் இணைந்து – உணர்வுபூர்வமாக – அனுட்டிப்பதுதானே சரியான முறையாக இருக்கமுடியும். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதிலும்கூட சமூகத்தின் சகல மட்டத்தினரும் இணைந்துகொண்டால்தானே அது ஒரு பொது நிகழ்வாக இருக்க முடியும்.

ஆனால், திருவாளர் விக்னேஸ்வரன் நேற்று, வடக்கு மாகாணசபைதான் முள்ளிவாய்க்காலில் அந்த நிகழ்வை நடத்தும் என்று அறிவித்திருக்கிறார். அதிலும் தனது திட்டத்தை யாரும் குழப்பிவிடலாம் என்ற அச்சத்தில், முள்ளிவாய்க்கால் பகுதி வடக்கு மாகாணசபையின் பிரதேச சபை அதிகாரத்தின் கீழ் வருகின்ற காரணத்தினால் தாங்களே – வடக்கு மாகாணசபையே – அந்த நிகழ்வை அனுட்டிப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறியிருக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில் – கடந்த நான்கு வருடங்களாக வடக்கு மாகாணசபையே இந்த நிகழ்வை நடத்திவருவதாகவும் ஆகவே இம்முறையும் தாங்கள்தான் இதனை நடத்துவதாகவும் வேறு யாராவது இந்த நிகழ்வை நடத்துவதற்கு விரும்பினால் தங்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தையும்கூட தனக்கு கீழ் வந்து சென்று சுட்டி பிடிக்குமாறு சொல்லியிருக்கிறார்.

இவர் உண்மையிலேயே அசடரா, அல்லது அசடர் போல நடிக்கிறாரா – என்று தெரியவில்லை

ஒரு இனத்தின் ஒட்டுமொத்த அழிவை நினைவு கூரும் நிகழ்வு தொடர்பில் சமூகத்தின் சகல மட்டத்தினரையும் ஒன்றிணைந்து – உள்வாங்கி – ஏற்பாடு செய்து அதனை அனுட்டிப்பதில் திரு.விக்னேஸ்வரனுக்கு என்ன பிரச்சினை? செங்கோலை தூக்கிக்கொண்டு ஓடிய சிவாஜிலிங்கத்தைப்போல முள்ளிவாய்க்கால் நிகழ்வை தூக்கிக்கொண்டு தனியாக ஓடவேண்டும் என்று ஏன் ஒற்றைக்காலில் நிற்கிறார்?

முள்ளிவாய்க்காலுக்கு சென்று நினைவேந்தலில் பங்கெடுக்கவேண்டும் என்று விக்னேஸ்வரன் எண்ணுவதிலும் மக்களுக்கு தானொரு முன்னுதாரணமாக செயற்படவேண்டும் என்று நினைப்பதிலும் எந்த தவறும் இல்லை. அது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் கடமை. அந்த வகையில் உணர்வோடு முன் நிற்கும் அவர் பாராட்டுக்குரியவரே. ஆனால், இதற்குள் வடக்கு மாகாணசபையை இழுத்துக்கொண்டுவந்து அவர் காவடியாடுவதும் ஒரு முதலமைச்சராக கையில் பிரம்போடு நின்றுகொண்டு நினைவேந்தலை யார் செய்யவேண்டும், யார் செய்யக்கூடாது என்று வகுப்பெடுப்பதும்தான் இங்கு எரிச்சலை கிளப்பும் விடயங்கள்.

வடக்கு மாகாணசபை என்பது என்ன? வட பிராந்தியத்தை நிர்வகிப்பதற்கான சிறிலங்கா அரச கட்டுமானத்தின் ஒரு பகுதி. அந்த சிறிலங்கா அரசாங்கத்தின் படைகளினால் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களை நினைவுகூருவதற்கு அதே சிறிலங்கா அரசாங்கத்தின் நிர்வாக பகுதியான வடக்கு மாகாணசபை உத்தியோகபூர்வமான நிகழ்வை ஏற்பாடு செய்வது ஒட்டுமொத்த நிகழ்வையே கொச்சைப்படுத்துவது போல ஆகாதா?

இந்த நினைவேந்தலை வடக்கு மாகாணசபை செய்யவேண்டும் என்று முதலமைச்சர் முந்திக்கொண்டு நிற்பது – தாங்கள்தான் விடுதலைப்புலிகளின் பரிசுத்த வாரிசுகள் என்று கூறிக்கொள்ளும் கஜேந்திரகுமார் அணியினரிடமுள்ளது போன்ற – வரட்டு தேசியவாதத்தின் அடிப்படையிலா அல்லது தான் ஆரம்பிக்கவுள்ள கட்சிக்கு மக்கள் ஆதரவை கவ்விப்பிடித்துக்கொள்ளவேண்டும் என்ற வரட்டு சிந்தனையின் அடிப்படையிலா? மாவீரர் தினத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு எத்தனித்த சிறிதரன்போல முள்ளிவாய்க்காலை எதிர்காலத்தில் தானே குத்தகை எடுக்கலாம் என்று கணக்கு போடுகிறாரா?

உயிரோடுள்ள மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு வினைத்திறனுள்ள நிர்வாகத்தை செய்யத்தெரியாத விக்னேஸ்வரன், உயிரோடில்லாத மக்களுக்கு விளக்கேற்றுவதற்கு உரிமையை எடுத்துக்கொள்வதன் மூலம் தானொரு வித்தியாசமான வீரன் என்று யாருக்கு ஒழித்து விளையாடப்பார்க்கிறார்?

ஒன்று மாத்திரம் உண்மை.

விக்னேஸ்வரனின் ஆட்சியின் கீழ் வடக்கு மாகாணசபை எவ்வாறு இயங்கவேண்டும் என்ற உதாரணத்தோடு தன்னை காண்பிக்காவிடினும் எப்படி இயங்கக்கூடாது என்பதை இவ்வளவு காலத்தில் தெளிவாக காண்பித்துவிட்டது. அதன் கடைசி முயற்சியாக, இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வடக்கு மாகாணசபையை தேவையில்லாமல் இழுந்துவந்து கோர்த்துவிடுவதன் மூலம் எதிர்காலத்தில் இந்த அவைகளுக்கு இருக்கும் மிச்ச சொச்ச அதிகாரங்களை அரசாங்கம் பிடுங்கிக்கொள்வதற்கு மாண்புமிகு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழகான ஆப்புக்களை சீவி கொடுத்துவிட்டுப்போகப்போகிறார்.

தமிழர்களின் எதிர்காலம் “நினைவேந்தல்களாகவே” கடந்து சென்றுவிடப்போகிறது போலத்தான் தெரிகிறது!

(ப. தெய்வீகன்)