வெள்ளை மாளிகையைவிடப் பிரமாண்டமான துருக்கி அதிபரின் மாளிகை! ஒரு தேநீர்க் கிண்ணத்தின் விலையோ….?

(எஸ். ஹமீத்)

கடந்த 100 வருடங்களில் இப்படியொரு ஆடம்பரமானதும் பிரமாண்டதுமான மாளிகை உலகில் எங்கேயேனும் கட்டப்படவில்லையெனக் கூறுகின்றன சர்வதேச ஊடகங்கள். அமெரிக்க அதிபரின் வாசஸ்தலமான வெள்ளை மாளிகையைவிட 30 மடங்கு பெரிய அந்த மாளிகையில் 1100 அறைகள் இருக்கின்றன. அதில் 250 அறைகள் துருக்கிய அதிபர் எர்டோகனின் முழுமையான பாவனைக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இரண்டொரு தினங்களுக்கு முன்னம்தான் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் எர்துகான் தனது அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையிலான சர்வசன வாக்கெடுப்பை நடாத்தி அதில் வெற்றியும் பெற்றார். ஆனாலும், அத்தேர்தல் மிக மோசடியான வகையிலேயே நடந்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. தற்போது ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரிக்கான அதிகாரங்கள் அவருக்குக் கிடைத்துள்ளன.
இது ஒருபுறமிருக்க, அதிபர் எர்துகானின் ஆடம்பர மாளிகை பற்றிய செய்திகளும் இப்போது பெரிதாகப் பேசப்படுகின்றன.
துருக்கியின் தலைநகரமான அங்காராவுக்கு வெளியே அமைந்துள்ள இந்தப் பிரமாண்டமான மாளிகை நேர்மையாக வரி செலுத்துவோரின் பணத்தைக் கொண்டேயல்லாமல் அதிபரின் சொந்தப் பணத்தில் கட்டப்படவில்லையென்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2014 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இம்மாளிகையின் ஒவ்வொரு பகுதியும் சிரத்தையோடும் மிகுந்த கலைநயத்தோடும் செதுக்கப்பட்டுள்ளன. எல்லாச் சுவர்களும் தரைகளும் சலவைக் கற்களினால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏக்கர் கணக்கான அளவு சிவப்புக் கம்பளங்கள் விரிக்கப்பட்டுள்ளன. கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தங்க முலாம் பூசப்பட்டு ஜொலிக்கின்றன. அத்தனை அறைகளிலும் கூடங்களிலும் விலை மதிப்புமிக்க விளக்குகள் வெளிச்சம் வீசுகின்றன. அறைகள் முழுவதும் விழிகளைச் சொக்க வைக்கும் அலங்காரப் பொருட்கள் மின்னுகின்றன.
ஒரு மலை போன்ற உயர்ந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகையிலிருந்து நகரத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். அதன் முன் பகுதி மிக நீண்டதும் அகலமானதுமானதுமாகும். அதன் நடுவே நீர் நிறைந்த அழகிய தடாகம் காணப்படுகிறது.
முக்கிய விருந்தினர்களுக்கு ஒவ்வொன்றும் நம்நாட்டுப் பெறுமதிக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் கொண்ட தங்கக் கிண்ணங்களில்தான் தேநீர் வழங்கப்படுகிறது. அந்தத் தேநீர் தயாரிக்கும் தேயிலையின் ஒரு கிலோ கிராம் நிறைக்கான விலையொன்றும் அதிகமல்ல… வெறும் மூன்று இலட்சம் ரூபாய்கள்தான்.
இன்னுமொரு விடயம்…அதிபர் எர்டோகனின் வருடாந்த சம்பளம் ஒரு கோடி ரூபாய். ஆனால் அவரின் சொத்து மதிப்பு ஏறத்தாழ இருபதினாயிரம் கோடி ரூபாய் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
ம்ஹூம்….பெருமூச்சு விட்டுவிட்டு நம் வேலையைத் தொடர்வோம்!