ஈரானின் ஏவுகணை: இஸ்ரேலுக்கு மரணம்!

நேற்றுக் காலை ஈரான் இஸ்லாமியக் குடியரசு தனது தேசிய இராணுவ தினத்தை மிகக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளது. சகல படையணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான இராணுவ வீரர்களுடன் இராணுவ அணி வகுப்பு நடைபெற்றது. அதில் ஈரானின் முக்கியமான பல ஏவுகணைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாகச் சென்றன. அதிலொரு ஏவுகணையில் ‘இஸ்ரேலுக்கு மரணம்’ என்று பாரசீக மொழியில் எழுதப்பட்ட பதாகை தொங்கிவிடப்பட்டிருந்தது.

யுத்த தாங்கிகள், கவச வண்டிகள், போர் விமானங்கள், துப்பாக்கிகள், ராடார் சாதனங்களின் அமைப்புகள், மேலும் நவீன யுத்த ஆயுதங்களென அணிவகுப்பு ஊர்வலம் ஈரானின் தலைநகரமான தெஹ்ரானில் மிக விமரிசையாக நடந்து முடிந்தது. இதனை இலட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்து,மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் அதாவுல்லாஹ் ஸலாஹி , இராணுவ ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் ஹுசைன் பக்கீரி , ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் ஹுசைன் டெஹகான் ஆகியோரும் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளும் பங்கேற்ற இந்த நிகழ்வில் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி நீண்ட உரையொன்றை ஆற்றினார்.

(எஸ். ஹமீத்)