பறந்து கொண்டிருக்கையில் எரியத் தொடங்கிய விமானம்! கதறியழுத பயணிகள்!

எல்லாப் பரிசோதனைகளின் பின்னர்தான் அந்த விமானம் பறக்கத் தொடங்கியது. பறப்பதற்கு முன்னம் அந்த விமானத்தில் எந்தக் கோளாறுகளும் இருக்கவில்லை. ஆனால், அது வானில் கிளம்பிப் பறக்கவாரம்பித்த இருபது நிமிடங்களில் விமானத்திற்குள் புகை பரவ ஆரம்பித்துள்ளது. என்னவோ, ஏதோ என்று விமானப் பயணிகள் கதிகலங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போதுதான் விமானத்தின் எஞ்சின்கள் தீப்பற்றி எரிவதாக அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

அவசர காலங்களில் முகத்தைச் சுற்றிப் பொருத்திக் கொள்ளும் ஒட்ஸிசன் வாயு கருவிகளும் சரியாக இயங்கவில்லை. புகை மிக அதிகமாகப் பரவத் தொடங்கப் பயணிகள் பெருங்குரலில் கதறியழத் தொடங்கியிருக்கின்றனர். கூடவே அழுதழுது பிரார்த்தனைகளும் செய்திருக்கின்றனர்.

நிலைமை கட்டுக்கடங்காமற் போவதையறிந்து விமானிகள் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, விமானத்தை மிக அவசர அவசரமாகத் தரை இறக்கியுள்ளனர். பின்னர் பயணிகள் எவ்வித உயிராபத்துகளுமின்றி இறக்கப்பட்டுள்ளனர்.

53 பயணிகளுடன் போர்கொர்கோட் விமான நிலையத்திலிருந்து லாகோசுக்குப் பறந்து கொண்டிருந்த நைஜீரியாவுக்குச் சொந்தமான விமானத்திலேயே இந்த அசம்பாவிதம் இரண்டொரு தினங்களுக்கு முன்னம் நடந்திருக்கிறது. அது சம்பந்தமான ஒரு வீடியோவும் இப்பொழுது வெளியாகியுள்ளது.

(எஸ். ஹமீத்)