ஸ்டிக்கர் ஒட்டுவதும் கமலுக்குப் பதில் சொல்வதும்தான் அரசின் கடமையா? – மருதன்

“சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. மக்கள் சகஜமாகத் தங்கள் பணிகளை மேற்கொள்ள தொடங்கி விட்டனர். சாலைகள் துடைத்து வைத்ததைப் போல் பளிச்சென்று இருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீர்மிகு ஆட்சி பெருமளவில் எதிர்கொண்டு சமாளித்துவிட்டது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான நிவாரண உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சீர்மிகு செயல்பாடுகளால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்“ – கதவை நன்றாக மூடிவிட்டு, கட்டிலில் படுத்துக்கொண்டு வேளாவேளைக்கு ஃபில்டர் காபியும் மசாலா தேநீரும் பருகியபடி ஜெயா டிவியை மட்டுமே 24 மணி நேரமும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே இந்த நிலவரத்தை நம்பி ஏற்க முடியும்.

மற்ற அனைவருக்கும் உண்மை தெரியும். காரணம் அவர்கள் ஜெயா டிவிக்கு வெளியில் விரிந்திருக்கும் நிஜ உலகில் 24 மணி நேரமும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அவர்களை இந்த மழை முற்றாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. அவர்களுடைய குடியிருப்புகளையும் வாழ்வாதாரத்தையும் வாழ்வின் மீதும் அரசின் மீதும் அவர்கள் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் இந்த மழை சிதைத்துப் போட்டிருக்கிறது. அவர்களுடைய குரலைக் கேட்க நீங்கள் உங்கள் காதுகளையும் கண்களையும் சற்று நேரம் திறந்து வைத்திருந்தாலே போதும்.

இதுவரை எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் எங்கள் பகுதிக்கு வரவில்லை என்கின்றனர் வட சென்னை, மத்திய சென்னை பகுதிகளைச் சேர்ந்த மக்கள்.

‘பிச்சைக்காரர்களைப் போல் மொட்டை மாடியில் ஹெலிகாப்டருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். இதுவரை அரசு எங்கள் பகுதியைச் சீந்தக்கூட இல்லை’ என்கிறது மாம்பலம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் ஒரு குடும்பம். வெள்ள அபாய எச்சரிக்கை இல்லை. ஏரிகள் திறந்துவிடப்படுவது குறித்து எந்தவித அறிவிப்பும் வந்து சேரவில்லை. உறக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது வீட்டுக்குள் முட்டிவரை வெள்ளம் பெருகிவிட்டது என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

உணவு, நிவாரணம் வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். இறந்துபோன ஒரு முதியவரின் சடலத்தை வீட்டுக்குள் வைத்துக்கொண்டு இரண்டு தினங்களாக ஒரு குடும்பம் தத்தளித்திருக்கிறது. கவுன்சிலரின் உதவியைப் பலமுறை நாடியபோதும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக வரவழைக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே சலித்துக்கொள்கின்றனர். எந்தப் பகுதிக்குச் செல்லவேண்டும், எத்தகைய உதவிகளை அளிக்கவேண்டும் உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்படவில்லை. பொதுமக்களை விட்டுவிட்டு முக்கிய விஐபிக்களின் உறவினர்களை முதலில் காப்பாற்றுங்கள் என்று நச்சரிக்கிறார்கள்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய பகுதிகளுக்கு உதவிப் பொருள்களுடன் செல்லும் வாகனங்களை ஆளுங்கட்சி ஆட்கள் தடுத்து நிறுத்தி தகராறு செய்துகொண்டிருக்கிறார்கள். எங்களிடம் வாகனங்களைக் கொடு, நாங்களே உதவி செய்துகொள்கிறோம் என்று மிரட்டுகிறார்கள்.

யார் உதவிப் பொருள்கள் கொண்டுவந்தாலும் அவற்றில் முதல்வரின் படத்தை ஒட்டியாகவேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. ஆம்புலன்ஸ் கூட அம்மா படம் ஒட்டியபிறகே அனுமதிக்கப்படுகிறது.

சில இடங்களில், நிவாரணப் பொருள்களை யார் கொண்டுவந்தாலும் அவற்றை அதிமுக பிரமுகர்கள் இடைமறித்துப் பறித்து அவர்களே விநியோகிப்பதுபோல் போஸ் கொடுக்கிறார்கள்.

அவர்களும் உதவி செய்யவில்லை, எங்களையும் உதவி செய்ய அனுமதிப்பதில்லை என்று தன்னார்வத் தொண்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கட்சிக்காரர்களை மீறி மக்களுக்கு உதவுவது சிரமமாக இருக்கிறது என்கிறார்கள் காஞ்சிபுரத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் (அல்லது பணியாற்றமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும்) அரசு சாரா தொண்டு நிறுவன ஊழியர்கள்.

இன்று காலை வரை ஒரு பாக்கெட் பால் 100 ரூபாய்க்கு பல இடங்களில் விற்கப்பட்டு வருகிறது. பிரெட் கிட்டத்தட்ட அதே விலை. பல பகுதிகளில் குடிநீர் இல்லை. மழை நீரைச் சேகரித்துப் பலர் குடித்து வருகிறார்கள். இதுவரை அதிகாரபூர்வமாக 245 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எஞ்சியிருப்பவர்களில் பெரும் பகுதியினர் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்தவர்கள். ஆம், அப்படித்தான் அவர்கள் தங்களை இப்போது அறிமுகம் செய்துகொள்கிறார்கள். இதுதான் அவர்களுடைய புதிய அடையாளம்.

இந்தப் பதிவுகள் நமக்கு உணர்த்தும் அழுத்தமான செய்திகள் இரண்டு.

1. இனி, நாம் நமக்குள் உதவிக்கொண்டால்தான் எந்தவொரு பேரவலத்தில் இருந்தும் மீளமுடியும்.

2. அரசு முற்றாகச் செயலிழந்துவிட்டது மட்டுமின்றி, மக்களின் முதல் பெரும் இடையூறாகவும் மாறியிருக்கிறது.

இந்த இரு பெரும் உண்மைகளையும் உணர்ந்திருந்தவர்கள் மட்டுமே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள். அவர்களால்தான் சென்னை இன்று மீண்டுக்கொண்டிருக்கிறது. கிடைத்த காலி டிரம்களை உருட்டைக் கட்டைகள் மீது வைத்து கட்டி அதன்மீது வெள்ளத்தால் மூழ்கி யிருக்கும் மக்களை அமர வைத்து இழுத்துச் சென்றவர்கள்தான் அதிகம் பேரைக் காப்பாற்றியிருக்கிறார் கள். கப்பல் படையும் பேரிடர் மீட்புப் படையும் ராணுவமும் அதற்குப் பிறகே மிதந்து வந்து சேர்ந்தன.

ஒரு முதியவர் இரண்டு தினங்களாக உண்ண உணவின்றி தவித்து இறுதியில் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நாய்க்கு வைக்கப்பட்டிருந்த தட்டில் மிச்சமிருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டிருக்கிறார். செய்தித்தாளில் வெளிவந்த இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு தாம்பரம் அஸ்தினாபுரத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு குழந்தை மனமுடைந்து அழுதிருக்கிறது. உடனே அந்தக் குடும்பத்தில் இருந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் ஒன்றுசேர்ந்து அதிகளவு உணவு தயாரித்து பல பொட்டலங்களாக்கி அருகிலுள்ள முடிச்சூர் பகுதிக்கு விரைந்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து, கிடைத்த ஒரு பாக்கெட் பாலை வாங்கி ஏழாகப் பிரித்து ஏழு குடும்பங்களுடன் பகிர்ந்து பருகியவர்கள் பலர். முழங்கால் தண்ணீருடன் தவிக்கும் முகங்களையும் பீறிட்டு அழும் குழந்தைகளையும் டிவியில் பார்த்துக்கொண்டு நான் மட்டும் எப்படிச் சாப்பிடுவது என்று தவித்தவர்கள் பலர். சமூக வலைத்தளங்கள் பிரமாண்டமான ஒரு நெட்வொர்க்காக விரிவடைந்து நேசக்கரம் நீட்டுபவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒருங்கிணைத்ததை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு நிவாரண உதவியுடன் முதலில் சென்றவர்கள் இவர்களே. இப்போதும் ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும் வாட்ஸ் அப்பையும் திறந்தால் அங்குமிங்கும் உத்தரவுகளும் செய்திகளும் பறந்துகொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது.

கோட்டூர்புரத்தில் மெழுகுவர்த்தியும் கொசுவர்த்தி சுருளும் தேவை! எங்களிடம் ஆயிரம் சப்பாத்திகள் இருக்கின்றன, எங்கே கொண்டு வரட்டும்? குப்பைகளைத் தள்ள பெரிய கைப்பிடியுடன்கூடிய மாப் ஸ்டிக் தேவை! உணவு போதும், டெட்டாலும் பினாயிலும் மாற்று உடைகளும் கிடைக்குமா…? பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் தேவைப்படுகிறது.

சென்னை இந்த நிமிடம் வரை உயிர்த்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் பெரும்பாலும் முகமற்றவர் களைக் கொண்டு துடிப்புடன் இயங்கும் இந்த நெட்வொர்க்தான்.

நிலைமை இப்படியிருக்க, சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது என்று தமிழக அரசால் நொடிக்கொருமுறை எப்படிப் பெருமிதத்துடன் அறிவிக்கமுடிகிறது? இந்த இயல்புநிலை திரும்புவதற்கு தானே காரணம் என்று எப்படி சுயதம்பட்டம் அடித்துக்கொள்ள முடிகிறது? பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று எப்படிக் கூசாமல் சொல்லமுடிகிறது?

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி பற்றி எப்படி அமைச்சர்களால் பரவசத்துடன் இப்போதும் எப்படி பேட்டியளிக்கமுடிகிறது? அனைவருக்கும் நிவாரண உதவி சென்று சேர்கிறதா என்று கண்காணிப்பதை விட்டுவிட்டு எல்லாப் பொட்டலங்களிலும் அம்மா படம் ஒட்டப்பட்டிருக்கிறதா என்று எப்படி இவர்களால் கவலைப்படமுடிகிறது?

தமிழக மக்களின் நலனும் தமிழக அரசின் நலனும் வெவ்வேறானவை மட்டுமல்ல எதிரெதிரானவை என்பதை அதிகார வர்க்கத்தின் இந்தப் போக்கு பளிச்சென்று நமக்கு உணர்த்தியிருக்கிறது. மக்கள் நம்பி வாக்களித்து தேர்ந்தெடுத்த ஓர் அரசு நம் கண் முன்னால் அவர்களைக் கைவிட்டிருக்கிறது. மட்டுமின்றி, மக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இடர்பாடுகளிலும் இக்கட்டுகளிலும் சிக்கிச் சீரழிந்துள்ள மக்களை மீட்பதும் அவர்களை மீள்குடியமர்த்து வதும் அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தருவதும் ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். இந்தக் கடமையைச் செய்யத் தவறிவிட்டது தமிழக அரசு. சந்தேகமில்லாமல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோல்வி இது. இந்தத் தோல்வியின் கசப்பால்தான் அமைச்சர்களும் அதிமுக அடிப்பொடிகளும் மெய்யான அக்கறையுடன் நிவாரண உதவிகள் அளித்துவருபவர்கள்மீது பொறாமையுடன் பாய்கிறார்கள்.

நாங்கள் செய்திருக்கவேண்டியதை நீங்கள் எப்படிச் செய்யலாம் என்னும் கோபத்தின் வெளிப்பாடுதான் நிவாரணப் பொருள்களைச் சுமந்துவரும் வண்டிகளை நிறுத்தி வைப்பது, அதில் அம்மாவின் படத்தை ஒட்டுவது ஆகியவை. கோபத்தின் வெளிப்பாடு என்பதைவிட இயலாமையின் வெளிப்பாடு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

இதை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்கள்மீது பாய்கிறார்கள். முதல்வரின் செல்வாக்கைச் சீரழிக்க சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். நான் உழைத்துச் சம்பாதித்து கட்டிய வரிப்பணம் சேர வேண்டியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என்று தெரிகிறது என்று நடிகர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தபோது, வெள்ளத்தைக் காட்டிலும் பலமடங்கு சீற்றத்துடன் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெடித்திருப்பதற்குக் காரணம் இந்த இயலாமைதான்.

வெள்ளம் குறித்தோ, வெள்ள நிவாரணம் குறித்தோ விரிவாக விளக்கமளிக்காத அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கமல்ஹாசனைத் திட்ட மட்டும் முழ நீள அறிக்கையை வெளியிடுவதன் தேவை என்ன? புரையோடியிருக்கும் நிர்வாகத்தின் போக்கை வெளிப்படையாக ஒருவர் சுட்டிக் காட்டுகிறார் என்பதாலா..?

தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அளித்திருப்பது ஓர் வெற்றிடத்தை மட்டுமே. இந்த வெற்றிடத்தையும் பாதிக்கப்பட்ட மக்களே இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறார் கள். இனியும் இதே போக்குதான் தொடரப்போகிறது என்றால் அரசு என்றொரு அமைப்பு இருக்கவேண்டி யதன் அவசியம்தான் என்ன?

இடர்பாடுகளில் கைகொடுக்காத, பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணையிருக்காத ஓர் அரசை வேறு எதற்காக நாம் சார்ந்திருக்கவேண்டும்? எதற்காக முட்டுக்கொடுத்து தூக்கி நிறுத்தவேண்டும்?
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது ஜெயா டிவியில் இப்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் செய்தி இதுதான். சென்னையில் இலவசப் பேருந்து விடப்பட்டது குறித்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம்.

யார்? உயிரைத் தவிர அனைத்தையும் இழந்துநிற்கும் மக்களா? முழங்கால் வரை தண்ணீரில் வீட்டுக்கு உள்ளே இடிந்துபோய் அமர்ந்திருப்பவர்களா? பிஸ்கெட், பால் இன்றி கைக்குழந்தையுடன் தவித்துக் கொண்டிருப்பவர்களா? அக்கம் பக்கத்தினர் உதவியிருக்காவிட்டால் உயிரையும் இழந்திருக்கக்கூடியவர் களா? இலவசப் பேருந்து விடப்பட்டதற்காக அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா?

இப்படிச் சொன்னதற்காகவே தமிழக அரசின்மீது ஒரு மான நஷ்ட வழக்கு போடலாம்!

(ஆனந்த விகடன்)