ருவாண்டா படிப்பினைகள் – 03

ஆபிரிக்கா இப்படித்தான் நமது மனத்திரையில் படிய வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் உலகின் சுத்தமான நகரத்தைக்கொண்ட பச்சைப் பசேல் என்று எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தது போன்ற ஒரு நகரம் ஆபிரிக்காவில் இருக்கிறது என்றால் நம்பவா முடியும்.

ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ருவாண்டாவின் கிகாலி நகரமே இப்படி இருக்கிறது.

ருவாண்டா நாடு முழுவதுமே சுத்தமாக இருந்தாலும் தலைநகரம் கிகாலி நகரம் உலகத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது. ஒரு துண்டு நெகிழியை (பிளாஸ்ரிக்) தெருக்களிலோ வேறு எந்த இடங்களிலோ காண முடியாது.

வானுயர நிமிர்ந்து நிற்கும் அழகான கட்டடங்கள் கிகாலி நகரத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

நகரத்தில் வாழுகின்ற மக்கள் அனைவருமே காலை ஐந்து மணிக்கே எழுந்து தங்கள் வீட்டின் முன்னால் உள்ள தெருவைக் கூட்டிச் சுத்தம் செய்து நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்து விடுகின்றார்கள்.

உள்ளுராட்சி அமைப்பு திறமாக செயற்படுகின்றது. நகரத்தில் உள்ள ஒவ்வொரு வடிகானையும் ஒரு நாளில் ஐந்து (05) தடவைகள் சுத்தம் செய்கின்றது என்றால் விழி உயர்த்தி பிரமிப்படைய வேண்டியிருக்கிறது.

மாதத்தில் ஒருநாள் அல்லது கிழமையில் ஒரு நாள் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் உமகண்டா (வினைக்கொடை – சிரமதானம்) செய்கிறார்கள். யாருடைய அழுத்தமுமின்றி தங்கள் விருப்பத்துடன் வயது வேறுபாடின்றி தொழில் வேறுபாடின்றி அனைத்து மக்களும் உமகண்டாவில் இணைகின்றார்கள்.

நாடு சுத்தமாக இருப்பதற்கு இதுவும் முக்கியமான கரணியமாகும்.

ருவாண்டா நாடானது ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், தெற்கு மாகாணம், மேற்கு மாகாணம், கிகாலி நகரம் என்பன அவை.

26338 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பைக் கொண்ட ருவாண்டாவில் இன்றைய நாளில் ஒரு கோடியே முப்பத்தி மூன்று இலட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து ஐம்பத்தியேழு (1,33,53,257) மக்கள் வாழ்கின்றார்கள்.

ருவாண்டா நாடு முப்பது (30) மாவட்டங்களாகவும்(districts) அந்த 30 மாவட்டங்களும் 416 பெரும்பாகங்களாகவும்(Sectors) பெரும்பாகங்கள் 2148 வட்டங்களாகவும்(cells) அந்த வட்டங்கள் 14837 ஊர்களாகவும்(Villages) பிரிக்கப்பட்டு சிக்கலற்ற வகையில் நிருவாகம் நடைபெறுகின்றது.

ஒரு துறை இரண்டு நிருவாகக் கட்டமைப்பகளால் கையாளப்படுவதில்லை என்பது முக்கியமான பண்பாகப் பார்க்கப்படுகின்றது.

அதிகாரம் பரவலாக்கப்படாமல் பகிரப்பட்டுள்ளது.

மூன்று இனமக்கள் ருவாண்டாவில் வாழ்ந்தாலும் இன ரீதியிலான அடையாளங்கள் 1994 ஜூலை 17 ஆம் நாளின் பின்னர் முற்றாக தடைசெய்யப்பட்டதோடு மக்களும் தமது இன அடையாளங்களை முழுமையாக கைவிட்டு ருவாண்டன் மக்கள் என்ற பொதுநிலைக்கு வந்துவிட்டனர்.

1994 ஜூலை 07 ஆம் நாளுக்கு முன்னர் ருவாண்டாவில் கூட்று(Hutu), ருட்சி(Tutsi), துவா(Twa) ஆகிய மூன்று இனமக்களும் தமது இனஅடையாளங்களை பேணியதுடன் அந்த இனஅடையாளங்களே நூறு நாள்களில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி ருட்சி இனமக்கள் கொல்லப்பட கரணியமானது.

குழந்தைகள்முதல் முதியோர்வரை வயது வேறுபாடின்றி வெட்டியும் கொத்தியும் அடித்தும் கொடூரமாக கூட்று இன மக்களால் ருட்சி இன மக்கள் கொல்லப்பட்டமை ருவாண்டா மக்களின் மனதை அடியோடு மாற்றியமைத்ததோடு அந்நாட்டியை ஆபிரிக்காவின் சொர்க்காபுரியாகவும் மாற்றியமைக்கவும் உதவியது.

இதற்கு முன்னணியில் செயற்பட்டது சிறந்த வழிகாட்டலுடன் கூடிய தலைமைத்துவத்திற்ககுச் சொந்தக்காரரான ருவாண்டா நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் போல் ககாமே அவர்களே.

(யார் இந்த போல் ககாம – அடுத்துவரும் பகுதிகளில்)