என்ன மாதிரி “கவர் ஸ்டோரி” எழுதி தமிழர்களை கவுக்கிறார்கள் பாருங்கள்- அடிகளாரின் அட்டகாசம் !

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளில் , உலகத் தமிழர் பேரவை(GTF) என்னும் அமைப்பே அதிகமாக இலங்கை அரசுடன் மறைவான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. குறித்த இந்த அமைப்பின் தலைவராக இருப்பது இமானுவேல் அடிகளார் தான். இவரை இலங்கை அரசு தற்போது உத்தியோகபூர்வமாக அழைத்துள்ளது என்றும். அவர் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் என்ற செய்திகளும் , அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சில ஊது குழல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதாவது மைத்திரிபாலவும், வெளிநாட்டு அமைச்சர் மங்களவும் ஒரு முறை இலங்கை வந்து செல்லுங்கள் என்று அடிகாளாரை அழைத்துள்ளார்களாம்.


இவரும் உடனே ஆமாம் சாமி போட்டு தலை ஆட்டியுள்ளார் என்ற செய்திகள் பரவலாக அடிபடுகிறது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் , இவர்கள் ஏற்கனவே இலங்கை அரசுடன் பேசி வருவதும் . இலங்கை சென்று ஒரு தீர்வு திட்டம் தொடர்பாக பேச உள்ளார்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடையம். இவர்கள் எந்த மாதம் இலங்கை செல்ல உள்ளார்கள் என்பது தொடக்கம் அனைத்து விபரங்களும் ஏற்கனவே செய்தியாக கசிந்துவிட்டது. இன் நிலையில் பள்ளிச் சிறுவர்கள் போல , அவர் அழைத்தார் நான் செல்கிறேன் என்று தமிழர்கள் காதில் பூ சுத்தப் பார்கிறார்கள் என்பது தான் மிகவும் வேடிக்கையான மற்றும் வேதனை தரும் விடையமாக இருக்கிறது.

நேரடியாகவே சொல்லி விட்டு இவர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் இவ்வாறு இலங்கை செல்வதற்கு மைத்திரியை அழைப்பு விடுக்குமாறு இவர்களே கூறி. அழைப்பு விடுக்கப்பட்டதாக இவர்களே செய்தியை கசிய விட்டு, பின்னர் தாம் அழைப்பை ஏற்று செல்லவுள்ளதாக செய்தியை விடுகிறார்கள் என்றால். இவர்கள் எவ்வாறு இதயசுத்தியோடு தமிழர்களுக்காக பேசப்போகிறார்கள் என்பதில் பெரும் சந்தேகம் எழுகிறது அல்லவா ? இலங்கை அரசு இழுத்த இழுப்புக்கு ஆடும் இவர்கள், எவ்வாறு காத்திரமாக ஒரு முடிவைப் பற்றி பேசி தீர்வு திட்டத்தை முன்வைப்பார்கள் ?