பலஸ்தீன விடுதலை: தீராத துன்பமும் தளராத போராட்டமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நம் மனங்களில் ஆழப் பதிந்துள்ள சில எண்ணங்களிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். பிற சமூகங்கள் பற்றி ஒவ்வொரு சமூகத்தினரிடையும் பரவியுள்ள புனைவுகள் சமூகங்களின் நல்லுறவுக்குக் கேடானவை. எனினும், அதிகம் ஆராய்வின்றி நாம் அவற்றை நம்புகிறோம். சில அயற் சக்திகளை சில உள்நாட்டுச் சமூகங்களின் இயல்பான நண்பர்கள் என்று கற்பனை செய்கிறோம். நடைமுறை அனுபவம் அந் நம்பிக்கைக்கு மாறாக இருந்தாலும், நமது நம்பிக்கைகட்கு முரணானவற்றை ஏற்க மறுக்கின்றோம். இது ஆபத்தானது.

இன்று பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அநியாயங்கள், மீண்டுமொருமுறை பலஸ்தீன மக்களின் திரட்சியான போராட்டத்துக்கு வழிவகுத்துள்ளன. உலகளாவிய கண்டனத்தை மீறி, பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ஏவி வரும் தொடரான வன்முறை உலக அரசியல் பற்றியும் அறஞ்சார்ந்தும் கேள்விகளை எழுப்புகிறது.

இன்று, மத்திய கிழக்கைப் போர் மேகங்கள் ஒருபுறம் சூழ்ந்திருக்கையில், இஸ்ரேல், பலஸ்தீனியர்களை வெறித்தனமாகத் தாக்குவதுடன் அதை நியாயப்படுத்துகிறது. இம் மாதத்தின் முதல் இருபது நாட்களில் 56 பலஸ்தீனியர்கள், இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் 11 சிறுவர்களும் அடங்குவர். அதைவிட, 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல், கடந்த மாதம் முதல் ஜெருசலேமில் உள்ள அல் அஸ்கா பள்ளிவாசல் வளாகத்துக்குள் பலஸ்தீனியர்களை அனுமதிக்கப்; புதிய கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து இஸ்ரேல்-பலஸ்தீன நெருக்கடி வலுத்தது. அல் அஸ்கா, முஸ்லிம்களின் மூன்றாவது முக்கியமான புனித தலமாகும். யூதர்களும் தங்களது புனித தலம் என இப்பகுதிக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.

ஆறு தசாப்தங்கட்கும் மேலாகத் தொடரும் இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சனை இப்போது புதிய வடிவத்தை எடுத்துள்ளது. தமிழர்களிடையே இஸ்ரேலை முன்மாதிரியாகக் காட்டும் போக்குக், கடந்த சில ஆண்டுகளாகக், குறிப்பாகப் போரின் முடிவையடுத்த எதிர்கால நிகழ்ச்சி நிரலின் பகுதியாக, மிகத் தீவிரமாகியுள்ளதுடன் மேற்குலக யூத நிறுவனங்களது ஆதரவை நாடும் ஒரு போக்கும் வெளிப்படையாகப் புலப்படுகிறது. மறுபுறம் அமெரிக்க அரசியல், ஊடக நிறுவனங்களிற் செல்வாக்கு மிகுந்த யூத அமைப்புக்கள் மூலம் தமிழீழ விடுதலைக்கோ தமிழருக்குச் சாதகமான ஒரு தீர்வுக்கோ வழி தேடலாம் என்ற அணுகுமுறையும் உருவாகியுள்ளது.

இப் பின்புலத்தில் இஸ்ரேல்-பலஸ்தீன நெருக்கடியை அண்மைய நிகழ்வுகள் சார்ந்து நோக்குதல் தகும். உலகில் மிக நீண்ட காலமாக அடக்குமுறைக்கு ஆட்பட்டிருக்கும் சமூகமாக பலஸ்தீன சமூகம் இருந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்புக்கள், பொருள் இழப்புக்கள், நிலப் பறிப்புக்கள் போன்ற பலவற்றையும் தாண்டி இஸ்ரேலிய ஒடுக்குமுறைக்கும் சியோனிச சண்டித்தனத்துக்கும் எதிராகப் பலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இஸ்ரேலின் படுகொலைகளும் ஓயாத கொலைவெறித் தாக்குதல்களும் பலஸ்தீன மக்களின் மனவுணர்வினைப் பாதிக்கவில்லை. ஒடுக்குமுறைக்கெதிரான தமது போராட்டத்தில் சகலவிதமான போராட்டக் கருவிகளையும் அவர்கள் கையிலெடுக்கிறார்கள். அதன் மூலம், உலகெங்கும் அடக்குமுறைக்கெதிராக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரமூட்டுகிறார்கள்.

பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் அரபு மக்களின் விடுதலையின் முக்கியமான ஒரு குறியீடாயுள்ளது. அப் போராட்டம் உலகின் முஸ்லிம் மக்கள் மீதான ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான பிரதான சவாலாகவும் இருக்கிறது. எவ்வாறாயினும், அதை அரபு மக்களுக்கும் முஸ்லிம்கட்கும் மட்டுமே வரையறுக்கக் கூடாது. ஏனெனில், அது உலகளாவிய ரீதியில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை, இனவாதம், ஃபாஸிஸ அடக்குமுறை போன்ற பல்வேறு கொடுமைகட்கும் எதிரான போராட்டங்களின் பொதுவான குறியீடாகும்.

சென்ற நூற்றாண்டுவரை ஐரோப்பாவில் யூதர்கட்குச் செய்யப்பட்ட கொடுமையைக் காரணங் காட்டி இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கும் நோக்கத்துக்குத் திரட்டப்பட்ட ஆதரவு, ஹிட்லரின் தலைமையின் கீழ் ஜேர்மன் தேசியவாதமும் இனவெறியும் நாஸிஸம் என்கிற ஃபாஸிஸமாகி, வெறித்தனமான யூத இன ஒழிப்பை நடத்தியமை, இரண்டாம் உலகப் போரின் பின்பு இஸ்ரேலின் தோற்றத்துக்கு வழி செய்தது. அரபு மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த மண்ணில், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தொட்டுப் புலம்பெயர்ந்த யூதர்களின் வாரிசுகள் குடியேறக்கூடிய ஓர் இஸ்ரேலின் உருவாக்கத்துக்கு முன்பிருந்தே அப்பாவி அரபு மக்களை வன்முறையால் விரட்டியும் வஞ்சகமாயும் மிரட்டியும் அவர்களது மண்ணை அடிமாட்டு விலைக்கு வாங்கியும் நடந்த நிலப்பறிப்பு உதவியது. அவ் வன்முறைக் கலாசாரமே இஸ்ரேலிய அரசின் பிரகடனப்படுத்தப்படாத கொள்கையாகத் தொடர்ந்து விருத்தி பெற்றுள்ளது.

இஸ்ரேல் தனக்கு 1948ஆம் ஆண்டு ஐ.நா. சபை வழங்கிய நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு மூலமும் போர்மூலமும் விஸ்தரித்ததோடு, தன் அயலில் உள்ள அரபு நாடுகளில் அகதிகளாக வாழும் பலஸ்தீன மக்களைத் தாக்கி அழிக்கும் உரிமையையும் தனதாக்கியது. குறிப்பாக, லெபனானில் 1978இல் இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்பும் அதைத் தொடர்ந்து தலைநகர் பெய்ரூத்தை அண்டிய பலஸ்தீன அகதி முகாம்களில் நடத்திய படுகொலையும் முழு உலகையும் அதிர்த்தன. எனினும், இதுவரை இஸ்ரேலின் அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டதாக எவருஞ் சொல்ல இயலாது. இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்கள் யூத இன வெறுப்பு, ஃபாஸிஸம், கம்யூனிஸ்ட் சதி என்று பலவாறாகத் தட்டிக் கழிக்கப்படுகின்றன.

இஸ்ரேல் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏகாதிபத்தியத்தின் ஒரு போர்ப் பாசறையாகவும் மத்திய கிழக்கின் அரபு மக்களின் மீதான அடக்குமுறைக்கான ஒரு வலுப்படுத்தப்பட்ட கோட்டையாகவும் உள்ளது. 1956க்குப் பின்னர், இஸ்ரேலின் மீது அமெரிக்கச் செல்வாக்கு வலுத்தது. அதன் பின்னர், இஸ்ரேலின் பாதுகாப்பு என்ற பெயரில் அரபு நாடுகளில் உள்ள எண்ணெய் மீதான அமெரிக்க ஏகபோகத்துக்கு மிரட்டலான எந்த நாட்டையும் எந்த அரசியல் போராட்டச் சக்தியையும் அடக்கவும் அழிக்கவும் எடுத்த நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படடன.

இதுவரை பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் விளைத்த சேதங்கட்கு நிவாரணமோ, நட்ட ஈடோ பற்றி இன்னமும் பேசப்படவில்லை. இனியும் எதுவுமே பேசப்படாது. இஸ்ரேலின் பாதுகாப்பு என்கிற பேரில் மத்திய கிழக்கில் தனது குறுக்கீட்டை வலுப்படுத்தும் அமெரிக்காவின் உண்மையான நோக்கம் மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் பற்றியது. இங்கு தான் பலஸ்தீன மக்களைப் பற்றிய ‘சர்வதேச’ அக்கறை நமக்குச் சில பாடங்களைக் கற்பிக்கிறது. அவை முக்கியமானவை.

இஸ்ரேலின் கொடுமைகளை எதிர்க்கத் தவறுவோர் உலகில் நடக்கிற எந்தக் கொடுமையையும் ஆதரிக்கக் கூடியோர் என்பதை நாம் மறக்கலாகாது. உள்ளபடி சொன்னால், மனசாட்சியையும் நீதியையும் கொன்றோர்க்;கே இஸ்ரேலை ஆதரிக்க முடியும்.

இன்னொரு முக்கியமான செய்தியும் உள்ளது. இஸ்ரேலிய அரசின் கொடுமைகட்கு எதிராக எப்போதுமே இஸ்ரேலுக்குள்ளிருந்து குரல்கள் எழுந்துள்ளன.

‘திறந்த கல்லறையை நோக்கி’ என்ற தலைப்பில் மைக்கல் வார்ஷ்சாவ்ஸ்கி என்ற இஸ்ரேலியர் 2004இல் எழுதிய நூல் கவனிக்கத்தக்கது. சரிக்கும் பிழைக்கும், நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமூகமாக இஸ்ரேல்  எவ்வாறு சீரழிந்துள்ளது என்பதை அது விளக்குகிறது.

பலஸ்தீன மக்களுடைய உரிமைகள் முற்றாக வழங்காத வரை இஸ்ரேலுக்கு அமைதியோ, பாதுகாப்போ இல்லை என்பதை இஸ்ரேலிய மக்கள் விளங்கத் தவறுகிறார்கள். ‘பலஸ்தீனப் பயங்கரவாதம்’ என இஸ்ரேல் அரசு தரும் விளக்கத்தை இஸ்ரேலியச் சமுகம் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டதன் விளைவே இது என்பதைச் சுட்டியாக வேண்டும்.

இஸ்ரேலின் இன்றைய அப்பட்டமான இனவெறிப் போக்கு வலுப்பெற்று, நாட்டின் ஆதிக்கச் சிந்தனையாவதற்கு எவ்வாறு அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் உதவின என்பதற்கும் மேலாக, அப் போக்கு எப்படி இஸ்ரேலிய சமுதாயத்தைச் ஜனநாயகமற்றதாகச் சீரழித்துள்ளது என்பதுங் கவனிக்க வேண்டியது.

கவனிக்க வேண்டிய மேலுஞ் சில விடயங்கள் உள்ளன. இஸ்ரேல் உருவானதிலிருந்து இஸ்ரேலிய அரசு இரண்டு முக்கிய காரியங்களைச் செய்தது. ஒன்று யூத இனவெறியை வளர்த்துப் பலஸ்தீன மண்ணின் வளமான பகுதிகள் அனைத்தையும் அராபியரிடமிருந்து பறிக்கும் ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட வன்முறையும். மற்றது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் காவலரணாக இஸ்ரேல் கடந்த அரை நூற்றாண்டுகளாக இயங்கி வந்தமை.

கடந்த அறுபதாண்டுகளாகப் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இழைத்துள்ள கொடுமைகள் விரிவாக ஆவணமாகியுள்ளன. பலஸ்தீன மக்களுடைய எழுச்சியின் விளைவாக அவர்களது விடுதலை இயக்கமான பலஸ்தீன விடுதலை இயக்கத்தை ஐ.நா. சபை 1974இல் அங்கிகரித்த போதும், பலஸ்தீன மக்கள் இன்னமும் பறிக்கப்பட்ட தமது மண்ணுக்கு மீள இயலாதுள்ளது. அதன் காரணம் இஸ்ரேலிய அரச இயந்திரத்தின் வலிமையும் பலஸ்தீன மக்களின் ஒற்றுமையின்மையும் அரபு நாடுகட்கு இடையிலான பகைமையும் என்று சிலர் விளக்க முற்படுகின்றனர்.

உண்மையில் அத்தனைக்கும் ஆதாரமாக இருப்பது அமெரிக்கா என்கிற பெரு வல்லரசு இஸ்ரேலுக்கு வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவேயாகும். அமெரிக்கப் பொருளாதார, இராணுவ உதவியின்றி இஸ்ரேலால் நிலைக்க முடியாது. சர்வதேச அரங்கில் இஸ்ரேலை உலக நாடுகள் புறக்கணிக்காமலும் தண்டிக்காமலும் இருக்க அமெரிக்க ஆதரவு முக்கியமானது.

தமிழ்ச் சமூகம் மிகுந்த வாஞ்சையுடனும் முன்னுதாரணமாகவும் இஸ்ரேலையும் குறிப்பாக யூத இனத்தையும் பார்க்கிறது. தமிழ்ச் சமூகத்தின் தனிநாட்டுக் கனவுக்கு அவர்கள் இஸ்ரேலை உதாரணமாகக் காண்கிறார்கள். சர்வதேச சமூகம் இஸ்ரேலை ஏற்றது போலத் தமிழர்களின் தமிழீழத் தனிநாட்டை அங்கிகரிக்கும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

தமிழ்ச் சமூகத்துக்கும் யூத சமூகத்துக்கும் இடையிலான தோற்றப்பாடான ஒற்றுமைகள் அதைத் தூண்டுகின்றன. யூதர்கள் போல் இலங்கைத் தமிழர்களும் பல்வேறு நாடுகளில் பிரிந்து வாழ்கிறார்கள் முக்கிய ஐரோப்பிய நாடுகளில் அழுத்தக் குழுக்களாகச் செயற்படுகிறார்கள். பொருளாதார ரீதியிற் சற்று வலுவடைந்துள்ளனர். எனவே அமெரிக்க மற்றும் ஐரோப்பியத் தலைநகரங்களில் அவர்கள் அரசியலணைவு நாடுங் குழுக்களாக (டழடிடில பசழரிள) இயங்குவதன் மூலம் ஈழத் தமிழர்களின் உரிமைகளை வெல்லலாம் என நினைக்கிறார்கள். இந் நோக்கில் இஸ்ரேலை ஆதர்சமாகக் கொள்கிறார்கள்.

இன்று தமிழ்ச் சமூகத்தின் முன் சில அடிப்படையான கேள்விகள் உள்ளன. அவற்றிற் தலையாயது, தமிழ் மக்கள் ஒடுக்குமுறையாளர்களையா, ஒடுக்கப்பட்டவர்களையா ஆதரிக்கிறார்கள் என்பதாகும். அதற்கான விடை தமிழ்ச் சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்க வல்லது.