ஐபிசிசி என்பது என்ன?

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை பருவநிலையின் சமீபத்திய நிலை குறித்த அறிக்கைகளை உருவாக்கி, ஆய்வுக்கு உட்படுத்தி, பருவநிலை மாற்றம் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும், மனித குலம் எப்படித் தகவமைத்துக்கொள்வது, பாதிப்புகளை எப்படித் தடுப்பது என்று ஐபிசிசி மதிப்பீட்டு அறிக்கைகள் வழிகாட்டுகின்றன.

பருவநிலை மாற்றம் குறித்த சமீப காலப் புரிதலைத் தருவது, எதிர்கால ஆபத்துகளைச் சுட்டிக்காட்டுவது, புவிவெப்பமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியம் ஆகியவற்றைக் குறித்த புரிதலை வழங்குவதே ஐபிசிசி மதிப்பீட்டு அறிக்கைகளின் நோக்கம்.

ஐபிசிசி மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு அமைப்பில் உள்ள நாடுகள் அறிவியல் ஆராய்ச்சியாளர்களை நியமிக்கலாம். இந்த அறிக்கைகள் தயாரிக்கும் நடைமுறை ஆழ்ந்த பரிசீலனையையும் வெளிப்படையான மதிப்பீட்டையும் கொண்டது.

பருவநிலை மாற்றம் குறித்த அறிவியலர்களின் புரிதல் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. மேலும், குறிப்பிட்ட பகுதிகளும், வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்களும் எப்படிப் பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்த அறிக்கைகள் மூலம் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இதுவரை எத்தனை மதிப்பீட்டு அறிக்கைகள் வெளியாகியுள்ளன?

ஐபிசிசி எந்த ஆராய்ச்சியையும் தானாகவே நடத்துவதில்லை. அதேநேரம், உலக அளவில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளைத் தொகுத்து நம் பார்வைக்குத் தருகிறது. ஐபிசிசி ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் ஒரு பகுதியாக – ‘பருவநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் ஆதாரங்கள்’ ஆகஸ்ட் 9 அன்று வெளியானது. முதல் மதிப்பீட்டு அறிக்கை (1990), இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை (1995), மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை (2001), நான்காவது மதிப்பீட்டு அறிக்கை (2007), ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கை (2014) ஆகியவை முன்னதாக வெளியாகியுள்ளன.

ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை எப்படி உருவாக்கப்பட்டது?

ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பில் 234 புவி, பருவநிலை அறிவியல் நிபுணர்களை ஐபிசிசி உறுப்பினர் நாடுகள் நியமித்திருந்தன. இந்த நிபுணர்கள் 2021 ஜனவரி 31-ம் தேதி வரை வெளியாகியுள்ள 14,000-த்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து, அவற்றில் பெரும்பாலானோர் உடன்படக்கூடிய அம்சங்களை ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையில் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.

இந்த அறிக்கையின் வரைவு தயாரான பின், ஜூலை 26-லிருந்து ஆகஸ்ட் 6 வரை இணையவழிக் கூட்டத்தில் அது பகிர்ந்துகொள்ளப்பட்டது. கடைசி நேரக் கருத்துகள், திருத்தங்கள் கேட்கப்பட்ட பின் ‘பருவநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் ஆதாரங்கள்’ என்கிற ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் முதல் பகுதி ஆகஸ்ட் 9 அன்று வெளியிடப்பட்டது. அடுத்ததாக ‘தாக்கங்கள், தகவமைப்பு, பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியம்’ குறித்த அறிக்கை 2022 பிப்ரவரியிலும், ‘பருவநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துதல்’ குறித்த அறிக்கை 2022 மார்ச்சிலும் வெளியாகும். கடைசியாக ‘தொகுப்பு அறிக்கை’ 2022 அக்டோபரில் வெளியாகும்.

மதிப்பீட்டு அறிக்கைகள் தாக்கம் ஏற்படுத்துகின்றனவா?

அறிவியலர்கள், செயல்பாட்டாளர்கள், ஏன் பொதுமக்களிடம்கூட இந்த அறிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவு தாக்கம் செலுத்துகின்றன. ஆனால், பல்வேறு நாட்டு அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக இல்லை.

எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்ட பிறகே ஐபிசிசியின் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. எதிர்கொள்ள உள்ள ஆபத்துகளை அறிவியல் உறுதிபடத் தெரிவித்தாலும், அவற்றைக் கொள்கைபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் உலக நாடுகள், பருவநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடைமுறை நடவடிக்கைகளை எடுப்பதில் சுணக்கம் காட்டுகின்றன. என்ன நடந்துவிடும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற அலட்சிய மனோபாவமே இதற்குக் காரணம். ஆனால், இயற்கையோ பருவநிலை மாற்றமோ யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அதைத் தூண்டிய மனித குலம் தங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே, பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கங்களிலிருந்து உலகம் தப்பிக்க முடியும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள்

ஐபிசிசி ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் முதல் பகுதி சுட்டிக்காட்டியுள்ள சில எச்சரிக்கைகள்:

புவி வெப்பமாதல்-அதன் தொடர்ச்சியாக நிகழும் பருவநிலை மாற்றத்துக்கு மனிதர்களே முழு முதற் காரணம்.

புவி வெப்பமாதல்தான் பருவநிலை மாற்றத்தைத் தூண்டுகிறது. தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட, தற்போதைய உலக சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் ஏற்கெனவே அதிகரித்துவிட்டது. கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை அதிகரிப்பு இது. சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென அறிவியலர்கள் வலியுறுத்திவருகிறார்கள். ஆனால், அந்த 1.5 டிகிரி செல்சிஸை இன்னும் 20 ஆண்டுகளில் கடந்துவிட உள்ளோம்.

ஒவ்வொரு 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வுக்கும் தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் 7% அதிகரிக்கும். ஏற்கெனவே 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்ததன் பின்விளைவை உலகம் முழுவதும் நிகழும் புயல், வெள்ளம், பெருமழை போன்ற இயற்கைச் சீற்றங்களின் வழியாக உணர்ந்துவருகிறோம்.

புவியை ஒரு போர்வைபோல கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுங்குடில் வாயுக்கள் சூழ்ந்துள்ளன. இந்தப் போர்வையில் 76% இருப்பது கரியமில வாயு. கடந்த 20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் புவியில் கரியமில வாயு அதிகரித்திருக்கிறது. தற்போது வளிமண்டலக் காற்றில் 420 பி.பி.எம். (கனஅளவில் 10 லட்சத்தில் ஒரு பங்கு) அளவுக்குக் கரியமில வாயு உள்ளது. கரியமில வாயுவின் அளவு 400 பி.பி.எம்மை எட்டுவதே ஆபத்தாகக் கருதப்பட்ட நிலையில், 420-ஐக் கடந்துவிட்டது.

கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆர்க்டிக் பனிப்பாறை அளவு கடந்த 20 ஆண்டுகளில் வேகமாகக் குறைந்திருக்கிறது.

பசுங்குடில் வாயு வெளியீட்டை இன்றைக்கே கட்டுப்படுத்தினாலும்கூட அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குச் சில பாதிப்புகளைத் தடுத்துநிறுத்தவோ மீட்டெடுக்கவோ முடியாது. அந்த வகையில் ஆர்க்டிக், அண்டார்க்டிக், இமயமலைப் பனிச்சிகரங்கள் உள்ளிட்டவை தங்கள் பழைய நிலையை அடுத்த ஆயிரம் ஆண்டுகளில்கூட அடைவது சாத்தியமில்லை. இதனால் உலக இயற்கைச் சுழற்சிகளில் ஏற்பட்ட சீர்குலைவு தொடரும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடல் வெப்பமாதல் 2-8 மடங்கு வரை ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப அதிகரித்துக் காணப்படும்.

கடந்த 3,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடல்மட்டம் உயர்ந்துவருகிறது. அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கடல்மட்ட உயர்வு தொடர்ந்து அதிகரித்தபடியேதான் இருக்கும். அப்படியென்றால், கடலோரப் பகுதிகள், துறைமுக நகரங்கள் மூழ்கிக்கொண்டே வரும், சிறு தீவுகள் முற்றிலும் கடலில் மூழ்கிப்போகும்.