கட்டலோனியப் பிரிவினைக்கு ஆதரவான கட்டலோனிய தலைவர்கள் கைது

ஸ்பெய்னிலிருந்து கட்டலோனிய பிரிய வேண்டுமென்ற கோரிக்கைகளைக் கொண்ட முக்கியமான தலைவர்கள் இருவர், ஸ்பானிய நீதிமன்றமொன்றினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனால், ஸ்பெய்னுக்கும் கட்டலோனியப் பிராந்தியத்துக்கும் இடையிலான முறுகல், மீண்டும் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டலோனியப் பிராந்தியம், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியமையைத் தொடர்ந்து, ஸ்பெய்னுக்கும் அப்பிராந்தியத்துக்கும் இடையில், பதற்றம் காணப்படுகிறது. இருதரப்புகளும், விட்டுக்கொடுப்புக்குத் தயாராகவில்லாத நிலையை வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், சுதந்திரத்துக்கு ஆதரவான சிவில் சமூகக் குழுக்களான ஒம்னியம் கல்ச்சரல், கட்டலன் தேசிய சபை ஆகியவற்றின் தலைவர்களான ஜோர்டி குய்க்ஸார்ட், ஜோர்டி சான்செஸ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு குழுக்களிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள், அங்கத்தவர்களாக உள்ளதோடு, கட்டலோனியப் பிரச்சினையில், முக்கியமானவர்களாக உள்ளன.

தடைசெய்யப்பட்ட குறித்த சர்ஜன வாக்கெடுப்புக்கு முன்னர், பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை ஏற்பாடு செய்தனர் என, அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்தே, இவர்களைக் கைதுசெய்யும் உத்தரவை, நீதிமன்றம் நேற்று முன்தினம் (16) விடுத்தது.

இவர்களின் கைதைத் தொடர்ந்து, கட்டலோனியாவின் தலைநகர் பார்சிலோனாவில், பாரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு, நேற்றைய தினம், வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கட்டலோனியாவில் மாத்திரமன்றி, இலண்டன் உள்ளிட்ட சில பகுதிகளிலும், போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. கட்டலோனியாவில், தமது பணிகளை நிறுத்திய பணியாளர்கள், “அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்” என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கட்டலோனிய அரசாங்கப் பேச்சாளர் ஜோர்டி டுருல், “மத்திய அரசாங்கம், ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

தான் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர், காணொளியொன்றில் செய்தியொன்றைப் பதிவுசெய்த ஜோர்டி குய்க்ஸார்ட், தான் தடுத்து வைக்கப்பட்டால் மாத்திரம், அதை வெளியிடுமாறு கோரியிருந்தார். இதைத் தொடர்ந்து அக்காணொளி, இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது.

அதில் அவர், “நீங்கள் இக்காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்தால், எனது சுதந்திரத்தை மறுப்பதற்கு, அரசு முடிவெடுத்துவிட்டது” என்று தெரிவித்ததோடு, தங்களது கொள்கையை முன்னகர்த்துவதற்கு, தனது அமைப்பு, மறைந்திருந்து பணியாற்றுமெனக் குறிப்பிட்டார்.

இவர்களைத் தவிர, கட்டலோனியப் பிராந்தியத்தின் பொலிஸ் பிரதானியும், இதே குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றில் ஆஜரானார். ஆனால் அவர், உடனடியாகக் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை.

இவர்கள் மூவரும், இவ்வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டால், 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.