‘வாக்குறுதி முக்கியம்’

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிப்பதாக, தமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வர்த்தமானியை வெளியிடுமாறு, அரசாங்கத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, கொழும்பில் அமைந்துள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று (16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், இதனை வலியுறுத்தினார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், நாளை (இன்று) வெளியிடப்படவிருந்தது. இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் அதிக சனத்தொகையைக் கொண்ட 5 பிரதேச சபைகளின் எண்ணிக்கையை 12ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதி குறித்து, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கலந்துரையாடியுள்ளோம். எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னர், தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு கோரினோம்.

“தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரது கருத்தின் பிரகாரம், எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும். எமது கோரிக்கைள் நிறைவேற்றப்பட்டு, அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது, வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் திகதியும் மாற்றமடையும். இதனால், தேர்தல் நடைபெறும் தினம், ஓரிரு நாட்கள் பின்தள்ளிப் போகக்கூடிய வாய்ப்புகள் உண்டு” என்று தெரிவித்தார்.