காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம்

வவுனியாவில் கடந்த 19 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழ்ற்சி முறையிலான காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று (14) தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியம் என்பன ஆதரவு வழங்கின. வவுனியா கலாச்சார மண்டபத்திலிருந்து போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு பேரணியாக சென்று தமது ஆதரவினை இவர்கள் வழங்கியுள்ளனர். கடந்த 19 நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் காணாமற் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகாலச் சட்டத்தினை உடனே இரத்துச் செய்து காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு பதில் கூறவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் தமது நியாயமான போராட்டத்திற்கு நேரில் வந்து வாக்குறுதி அளிக்கும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.