போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – சம உரிமை இயக்கம் யாழில் பத்திரிகையாளர் கூட்டம்

சம உரிமை இயக்கம், வடக்கு மற்றும் கிழக்கில் போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நீதி மற்றும் நேர்மையுடன் தீர்த்து வைக்க கோரி போராட முடிவு எடுத்துள்ளது. சமவுரிமை இயக்கம் தனது போராட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் நோக்கத்தில் இன்று (13-03-2017) யாழில் ஊடகவியலாளர் கூட்டத்தை கூட்டியிருந்தது. சமவுரிமை இயக்கத்தின் சார்பில் கபிலன் சந்திரகுமார் ஊடகவியலாளர் கூட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தார்.

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல், சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் ஸ்ரீதரன் திருநாவுக்கரசு, சமூக நீதி அமைப்பின் சார்பில் அன்ரன் மற்றும் எழுத்தாளர் கருணாகரன் ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்கள்.

போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி நியாயபூர்வமான தீர்வை பெற முடியும் என சமவுரிமை இயக்கம் கருதுகின்றது. அந்த வகையில் போராடும் மக்களுடன் உண்மையாக இணைந்து நிற்கும் அமைப்புகள், தனிநபர்களுடன் ஒன்றிணைத்து போராட முன்வந்துள்ளது. ஐக்கியப்பட்ட போராட்டத்திற்காக மக்களை நேசிக்கும் அமைப்புக்கள், தனிநபர்களை இந்த போராட்டங்களுடன் இணைந்து கொள்ள அறைகூவல் விடுக்கின்றது.

இந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் சமவுரிமை இயக்கம் வெளியிட்டுள்ள பத்திரிகைகளுக்கான ஊடக அறிக்கையினை கபிலன் சந்திரகுமார் வாசித்தார்.

போராடும் மக்களுக்கு சம உரிமை இயக்கம் பூரண ஆதரவு!