காலம் மறக்காத காவிய நடிகர்!

திரைப்பட வாழ்க்கையில், ‘சக்சஸ்’ என்ற வார்த்தையை பேசி, தடம் பதித்து, தன் வாழ்நாள் முழுவதும் வெற்றிப்பயணம் மேற்கொண்டு, தமிழகம் தாண்டியும் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டுக் குள் வைத்திருந்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.வி.சி.கணேசமூர்த்தி என்ற சிவாஜி கணேசன் 1.1.1928ல் பிறந்தார். 73 ஆண்டுகள் வாழ்ந்ததில், சினிமாவும், ரசிகர்களும் தான் அவர் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த விஷயங்கள். 1952ல் பராசக்தி திரைப்படத்தில் துவங்கி காதல், வீரம், சோகம் என அனைத்து வகை முகபாவங்களிலும் தனி முத்திரை பதித்த முன்னோடி.”தன்னுடைய கைவிரல் அசைவு மூலம் நம்மையெல்லாம் கவர்ந்து சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாத என்னையும் பார்க்கத் துாண்டிவிட்டவர் சிவாஜி,” என ராஜாஜியும், “சிவாஜியை மிஞ்சிய ஒருவரை பார்ப்பது அரிது,” என நேருவும், “சிவாஜி போன்ற கலைஞர்கள் பிறந்திருப்பது இந்நாடு செய்த தவப்பயன்,” என இந்திராவும் அவருக்கு புகழாரம் சூட்டினர்.நவரச திலகம், கலைகுரிசில், பத்மஸ்ரீ, சிம்மக்குரல் என்ற பட்டங்களை பெற்ற ஒரே நடிகர் இவராக தான் இருக்க முடியும்.

‘பராசக்தி’ முதல் ‘பூப்பறிக்க வருகிறோம்’ வரையான படங்களில், 100க்கும் மேல் வெள்ளி விழாவை கண்டன.1959ல் வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், ஓர் வரலாற்று காவியம். 1962ல் உலக திரைப்பட விழாவிற்கு எகிப்து தலைநகர் கெய்ரோவில்
வெளியிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் ‘திருவிளையாடல்’.இதுதவிர, திருமால் பெருமை, திருவருட்செல்வர், கர்ணன், கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன், ஆலயமணி, பாலும் பழமும், நவராத்திரி, பாசமலர், சிவந்தமண், புதிய பறவை ஆகிய திரைப்படங்கள் அவரது நடிப்பை உலக அரங்கிற்கு எடுத்து சென்றன.

1967ல் நடந்த பொதுத் தேர்தலில், காங்., கடும் தோல்வியடைந்தது. காமராஜரும் விருதுநகரில் தோல்வியை தழுவினார். அப்போது, கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்டியவர் சிவாஜி. தமிழகத்தின் அனைத்து தெருக்களிலும் கூட்டங்கள் நடத்தி கட்சிக்காக அரும்பாடு பட்டதை காங்கிரஸ்காரர்கள் யாரும் மறக்க மாட்டார்கள். 2001 ஜூலை 21ல் மறைந்தார். அப்போது, லட்சக்கணக்கான ரசிகர்கள் அடைந்த வேதனையை அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியாது. நீண்ட நெடிய வரலாறு படைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ், தமிழகம் தாண்டி உலக திரைப்பட வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.(இன்று நடிகர் சிவாஜி பிறந்த நாள்) – சிவசுந்தரம், மதுரை