இளைஞர்களுக்கு வழிகாட்டிய இருவர்

இருக்கும் வரை இருமிவிட்டு, இறந்தபின்னே இடுகாட்டுக் கரையான்களுக்கு இரையாகி மறையும் மனிதர்களுக்கு மத்தியில், வரலாறாகவே வாழ்ந்து விட்டுப் போகிற மனிதர்கள்
உன்னதமானவர்களாய் உலகத்தாரால் மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் விழிகள் வழிகாட்டும் மொழிகளாய் மற்றவர்களுக்கு அனுதினமும் அறிவுரைகளைத் தந்துகொண்டே இருக்கின்றன. சங்கடங்கள் சாமரம் வீசினாலும் அவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.
காந்தியும், காமராஜரும் சிரமத்தின் மீதேறி சிகரத்தை அடைந்த மகத்தான வாழ்ந்துகாட்டிகள். எளிமையான, பயன்மிகுந்த வாழ்க்கையால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.உலகப் போர்களால் உருக்குலைந்துபோன உலகிற்கு அகிம்சை என்கிற அமுதத்தை அள்ளித்தந்த வள்ளல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திஜியும், காந்திய நெறியில் வாழ்ந்து, காந்தியாகவே வாழ்ந்து காந்தி ஜெயந்தி அன்றே கண்ணயர்ந்த கர்மவீரர் காமராஜரும் இன்றைய இளையோரின் இணையற்ற வழிகாட்டிகள்.

மனித ஆத்மாக்களுக்கு மத்தியிலே மகாத்மாவாக மாற அவர் என்ன செய்தார்? கர்மமே கண் என்று லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் இன்றும் துாயஆட்சியாளராய் நினைத்துப் பார்க்கப்படுகிறாரென்றால் காரணம் என்ன?
கைதவறி கீழே விழுந்த பாதரசம் எப்படி எந்த அழுக்கோடும் ஒட்டாமல் உருண்டோடுமோ, அதுபோல் இந்த இரு தலைவர்களும் உலகியல் வாழ்க்கையோடு ஒட்டிஒட்டாமல் வாழ்ந்தவர்கள். மனத்துக்கண் மாசுஇல்லாமல் வாழ்தலையே அனைத்து அறமாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். இருவரும் அனுபவங்களால், வாழ்வை ஆராதனை செய்தவர்கள். இந்திய நாட்டின் விடுத்தலைக்காகப் பல நாட்கள் சிறையிலேயே கழித்தவர்கள் இருவரும்.

எளிமையான தலைவர்கள் விளம்பரத்திற்கு ஆசைப்படாத எளிமையான தலைவர்களாக இருவரும் திகழ்ந்தார்கள். 1901ல் ஒரு மாநாட்டிற்காக காந்தி, கல்கத்தா வந்திருந்தார். மாலையில் மாநாடு தொடங்க இருந்த இடத்தைக் காலையில் பார்வையிடச் சென்றார்.
அந்த மைதானம் குப்பையும் கூளமுமாயிருந்தது. ஒன்றும் பேசாமல் காந்திஜி துடைப்பத்தைக் கையில் ஏந்தி மைதானத்தைத் துாய்மைசெய்யத்தொடங்கினார்.
தஞ்சை மாவட்டச் சுற்றுப்
பயணம் மேற்கொண்ட காமராஜர் ஒரு பழைய கோவிலுக்குள் சென்றார், உடன் இருந்தவர்களிடம் “ இதை யார் கட்டுனான்னு கேட்டேன்” என்றார். யாருக்கும் தெரியவில்லை, சட்டென்று மேலே எரிந்துகொண்டிருந்த குழல்விளக்கைக் காட்டி, ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இந்தக்கோயிலே கட்டுன மவராசன் யாருன்னு தெரியல… அதுல டியூப் லைட் போட்ட மவராசன் பேரு பெயிண்டுல எழுதியிருக்குன்னேன்” என்று சிரித்தபடிச் சொல்லியவாறே காமராஜர் வெளியே வந்துவிட்டார்.
பதவியை விரும்பா பண்பாளர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, எந்த ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க மறுத்தார் காந்தி. இரண்டு முறை பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தபோதும் ஏற்காமல் சாஸ்திரியையும், இந்திராகாந்தியையும் பிரதமராக்கி அழகுபார்த்த தலைவர் காமராஜர். “பதவியைத் தேடி நாம் போனால் பதவிக்குப் பெருமை, பதவி நம்மைத் தேடிவந்தால் நமக்குப்பெருமை” என்று அடிக்கடிக் கூறியவர் கர்மவீரர் காமராஜர்.

பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி கறுப்பர் என்ற காரணத்தால் டர்பன் நீதிமன்றத்தில் தலைப்பாகையோடு வாதாட அனுமதி மறுக்கப்பட்டது. அதைக் கடுமையாக எதிர்த்து, அந்த நீதிமன்றத்தை விட்டுவெளியேறினார். முதல் வகுப்புப் பயணச் சீட்டோடு பிரிட்டோரியாவுக்குப் பயணித்தவரை நிறவெறியோடு வெள்ளையர்கள் துாக்கி எறிந்தபோது பட்ட ரணத்தை இந்தியநாட்டின் சுதந்திரத்திற்காகப் பயன்படுத்தினார். ராட்டையையே சாட்டையாக்கி அந்நியரை நாட்டைவிட்டு ஓடச்செய்த மகாத்மா, மதுரையில் தன் ஆடைகளை மாற்றித் தமிழ்நாட்டு விவசாயிகள் உடுத்தும் மிக எளிய உடைக்கு மாறினார். மகாத்மாவின் கொள்கைகளில் கவரப்பட்டு காமராஜர் வாழ்நாள் முழுக்க கதராடையையே உடுத்தினார்.
மனிதநேயச் செல்வர்கள் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் மனிதநேயநெறியை இருவரும் தம் வாழ்வின் அறமாகக் கொண்டவர்கள். பள்ளிக்குச் செல்லும் வயதில் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், காமராஜரைப் பெரிதும் பாதித்ததன் விளைவாக, உலகம் போற்றும் மதியஉணவுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

சம்பரானில் கஸ்துாரிபாவோடு பயணித்துக்கொண்டிருந்தபோது அழுக்கு உடையோடு குழந்தைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை காந்திஜி பார்க்கிறார். “கஸ்துாரிபா… இவர்கள் அழுக்கோடு மாற்று உடை இல்லாமல் இருப்பது உனக்கு உறுத்தவில்லையா?
நீ ஏன் இவர்களை நீராடவைத்து துாய்மையான உடையணிவித்து பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது?” என்று கேட்டார். காந்திஜி சொன்னபடி வாழ்க்கை முழுக்க கஸ்துாரிபா செய்தார்.
சத்தியசோதனை மேற்கொண்டவர்கள் மகாத்மாவுக்கு முகஸ்துதி பிடிக்காது. “நாம் சேவை செய்யத்தானே பிறந்திருக்கிறோம் இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?” என்று அடிக்கடி சபர்மதி ஆஸ்ரமத்திற்கு வருவோரிடம் கூறுவார்.

காமராஜரும் அப்படியே வாழ்ந்தார். யாரேனும் தன்னைப் பாராட்டிப் பேசினால், “நிறுத்துனேன்… என்னைப் புகழ்ந்து பேசும் நேரத்திலே நல்ல காரியம் எதையாவது செய்யலாமேனேன்” என்பார். முதலமைச்சரானதும் பாதுகாப்புக்கு தன் காருக்கு முன் சைரன் வைத்த கார் சென்றதை விரும்பாதவர். இருவரும் சிறுவயதில் தந்தையை இழந்து தாயாரின் அன்பில் வளர்ந்தவர்கள். இருவரும் சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள். அந்நிய ஆடைகளை மறுத்து காலம் முழுக்க கதராடை அணிந்தவர்கள். எளிமையானவர்கள், பழகுவதற்கு இனிமையானவர்கள், நேர்மையானவர்கள். தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு, தன் அன்னை தேசம் பாழ்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தங்களையே சுதந்திர வேள்வியில் உருக்கி ஊற்றியவர்கள். அவர்கள் வழியை நம் விழிகள் நோக்கட்டும். இந்த தேசத்தை நேசித்த அவர்கள் வழியில் நம் இளையோர் பயணம் நடக்கட்டும்.

(நாளை காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவுநாள்)