கூட்டமைப்பு – மு.கா. பேச்சு: அழைப்பைப் புறக்கணித்தனர் செல்வமும் சித்தார்த்தனும்!

த.தே.கூட்டமைப்புக்கும் மு.காங்கிரஸுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொள்ள அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), த.சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) ஆகியோருக்கு அழைப்பு விடுத்த போதும் வரவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கு அறிவிக்காமல் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தமிழ் மக்கள் பேரவையைக் கடுமையாக விமர்சித்து கடந்த திங்கட்கிழமை கருத்து வெளியிட்டிருந்த ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., மறுநாள் செவ்வாய்க்கிழமை அந்தக் கருத்தை வாபஸ் பெற்றிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பை விமர்சித்துவிட்டு தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.