சிதம்பரத்துக்குத் தடுப்புக் காவல்

இந்நிலையில், இந்த நான்கு நாள்களுக்கு, சிதம்பரத்தின் குடும்பத்தாரும் அவருடைய சட்டதரணிகளும் ஒரு நாளைக்கு, 30 நிமிடம் மாத்திரம் சந்திக்க முடியும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு 48 மணிநேரத்துக்கும், சிதம்பரத்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்டுபடுத்துவதற்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரான ப. சிதம்பரத்தின் வீட்டின் சுவர்களின் மூலம் வீட்டுக்குள் ஏறிக் குதித்த இந்திய நடுவண் புலனாய்வுச் செயலகத்தை (சி.பி.ஐ) சேர்ந்த டசின் கணக்கான அதிகாரிகள், ப. சிதம்பரத்தை காரொன்றில் நேற்று முன்தினமிரவு அழைத்துச் சென்றதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏ.என்.ஐ செய்தி முகவரகத்தால் டுவிட்டரில் வெளியிடப்பட்ட காணொளியின்படி காரின் மீது பாய்வதன் மூலம் ப. சிதம்பரத்தின் கைதை அவரது ஆதரவாளர்கள் தடுக்க முயன்றுள்ளனர்.

ப. சிதம்பரத்தின் கைதை சி.பி.ஐ-இன் பேச்சாளரொருவரான அபிஷேக் தயால், ஏ.பி செய்தி முகவரகத்துக்கு உறுதிப்படுத்தியிருந்தார்.

முன்னதாக, நாட்டை விட்டு ப. சிதம்பரம் வெளியேறுவதை தடுக்கும் வகையில் விமானநிலையங்களை சி.பி.ஐ நேற்று முன்தினம் எச்சரித்திருந்தது.

தனது உத்தியோகபூர்வ பதவியை தவறாகப் பயன்படுத்தியதுடன், மில்லியன் கணக்கான ஐக்கிய அமெரிக்க டொலர்கள் நேரடி முதலீடை அனுமதித்து பணச்சலவையில் பங்கெடுத்ததாக ப. சிதம்பரத்தை சி.பி.ஐ குற்றஞ்சாட்டுகின்றது.

இதேவேளை, மூன்று பில்லியன் இந்திய ரூபாய்கள் பணச்சலவை வழக்கில் ப. சிதம்பரத்தின் மகனும் இந்திய நாடாளுமன்ற கீழ்ச் சபையின் உறுப்பினருமாகிய கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே எதிராளியாகப் பெயரிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான ப. சிதம்பரம், தான் தவறெதுவும் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் தனக்கெதிராக அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார்.

கைதிலிருந்து விடுவிக்குமாறான ப. சிதம்பரத்தின் கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்த மறு நாளான நேற்று முன்தினமே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரது கைதைத் தடுக்க அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியபோதும் அவர்களின் மனுவை இன்றே உச்ச நீதிமன்றம் ஆராய்வதாக இருந்தது.

நேற்று முன்தினம் மாலை வரை ப. சிதம்பரத்தை விசாரணையாளர்கள் கண்டுபிடிக்காத நிலையில், எதிர்பாரதவிதமாக காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர் மாநாடொன்றில் தோன்றியிருந்த நிலையில் முதலில் அங்கே சி.பி.ஐ அதிகாரிகள் அணி சென்றிருந்தது.

இந்நிலையில், சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் நேற்றுப் பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவரை ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க சி.பி.ஐ கோரியிருந்த நிலையில், அவருக்கு பிணை வழங்குமாறு அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டிருந்தனர்.