துரதிர்ஷ்டவசமானது.. இருதயம் நொறுங்குகிறது: டெல்லி வன்முறை குறித்து சேவாக், யுவராஜ் சிங்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ‘இந்தப் பைத்தியக்காரத்தனம் உடனே முடிய வேண்டும்’ என்று அமித் ஷா உள்ளிட்டோருக்கு காட்டமாக வலியுறுத்தியதும் நடந்துள்ளது. காவல்துறையின் மெத்தனப்போக்கே இதற்கெல்லாம் காரணம் என்று உச்ச நீதிமன்றமும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தி வரும் நிலையில், கவுதம் கம்பீர் நேற்று வன்முறைக்குக் காரணமானவர்கள் பாஜகவினர் என்றாலும் நடவடிக்கை எடுங்கள் என்று பரபரப்பாகப் பேசினார்.

இந்நிலையில் இந்தியாவின் இரண்டு முன்னாள் அதிரடி நாயகர்களான சேவாக் மற்றும் யுவராஜ் சிங் தன் சமூகவலைத்தளமான் ட்விட்டரில் டெல்லி வன்முறைக்கு ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துள்ளனர்.

சேவாக்: டெல்லியில் நடக்கும் இந்த சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானது. என்னுடைய வேண்டுகோள் என்னவெனில் டெல்லியில் அமைதியும் சமாதானமும் வேண்டும் என்பதே. ஒருவருக்கேனும் காயம் ஏற்படுகிறது என்றால் அது இந்த பெரிய நாட்டின் தலைநகருக்கு ஒரு கரும்புள்ளியாகும். அமைதியும் ஆரோக்கியமான மனநிலையையும் விரும்புகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.

யுவராஜ் சிங்: டெல்லியில் நடப்பது இருதயத்தை நொறுங்கச் செய்கிறது. அமைதையையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுமாறு அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சூழ்நிலைகளை தணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். கடைசியில் நாமனைவரும் மனிதர்கள், அன்பும் பரஸ்பர மரியாதையும் நமக்குத் தேவை என்று உணர வேண்டும், என்று பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங்கும் அமைதையும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.