நிர்மலாதேவி யார் என்றே தெரியாது; எனக்கு கொள்ளுப்பேரன் இருக்கிறான்: என்னை குற்றம் சொல்ல முடியாது- ஆளுநர் பன்வாரிலால் பேட்டி

 

குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவியை நான் பார்த்தது கூட இல்லை. எனக்கு 78 வயதாகிறது. பேரன் பேத்தி எடுத்த என்னை யாரும் குற்றம் சாட்ட முடியாது என்று ஆளுநர் பன்வாரிலால் பேட்டி அளித்தார். பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு வலை விரிக்கும் வகையில் பேசி சிக்கிய பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை குறித்தும் நிர்மலா தேவி பேசியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட நிலையில் ஆடியோ பேச்சு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியதாவது:

“தமிழக கவர்னராக பதவி ஏற்று 6 மாத காலத்தை நிறைவு செய்துள்ளேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் நானும் ஒரு பத்திரிகையாளன். தற்போது உள்ள பிரச்சினை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம். நேற்று பேப்பரில் பார்த்தேன். மாணவர்களை பேராசிரியர் தவறாக வழிநடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர் மூத்த அனுபவமுள்ள அலுவலர். தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் ஓய்வுபெற்றவர்.

விசாரணை அதிகாரி சந்தானம் ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பார். அவர் சமர்ப்பிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சந்தானம் அனைத்தையும் விசாரிப்பார். அவரது அறிக்கை அடிப்படையில் வேந்தர் என்ற முறையில் நான் நடவடிக்கை எடுப்பேன். விசாரணை ஆணையம் அமைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் உண்மை வெளிவரும் என தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். அவரை என் வாழ்நாளில் நான் சந்தித்ததே இல்லை. நான் நிர்மலா தேவி முகத்தை கூட இதுவரை பார்த்தது இல்லை. எனது பாதுகாவலர்களைத் தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது.

பேராசிரியரை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க என்னைக் கேட்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. விசாரணை ஆணைய அறிக்கை வந்து தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை அமைக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

எனக்கு பேரனுக்கு பேரன் இருக்கும் போது , என்னைப் பற்றி தவறான கருத்துகளைப் பேச வேண்டாம். பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதிகளின் படி ஆளுநரே அதன் வேந்தர். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் சட்டவிதிகளின்படியே, சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருகிறேன். அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரே மாநிலத்தின் தலைவர். அவர் இது குறித்து எந்த அமைச்சர்களின் ஆலோசனையையும் கேட்க வேண்டியதில்லை. மாநில அரசு பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட முடியாது.

ஆளுநர் என்று என்னைக் குறிப்பிடவில்லை, தாத்தா என்றுதான் என்னை அந்தப்பெண் குறிப்பிட்டுள்ளார். அந்தப்பெண்ணை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. அவர் யாரென்றே எனக்கு தெரியாது. போலீஸார் அவர்கள் வேலையை செய்வார்கள். பல்கலைக்கழக விதிமுறைப்படி இந்த விசாரணை நடக்கும்.

விசாரணையில் பெண்களை விசாரிக்கத் தேவைப்பட்டால் சந்தானம் பெண் அதிகாரிகளை பயன்படுத்திக்கொள்வார்.” என்றார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதில் அளித்தார்.

உங்கள் பெயர் இந்த ஆடியோ விவகாரத்தில் இருக்கும் போது நீங்கள் ஒரு விசாரணையை அமைத்தால் அது எந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மையாக இருக்கும்?

இதை நான் மறுக்கிறேன். விசாரணை சரியாக இருக்கும்.

விசாரணை எந்த அடிப்படையில் நடக்கும்?

விசாரணை கமிட்டி அனைத்தையும் விசாரிக்கும். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. என்ன தேவையோ அதை விசாரிப்பார். அனைத்து அம்சங்களும் விசாரிக்கப்படும், யாரும் கவலைப்பட வேண்டாம்.

பெண் உறுப்பினர் ஒருவர் கமிட்டியில் நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதல் உள்ளதே?

தேவைப்பட்டால் சந்தானம் பார்த்துக்கொள்வார். அவர் மூத்த அதிகாரி, மிகுந்த அனுபவம் உள்ளவர்.

ஆளுநராக இருக்கும் நீங்கள் அருப்புக்கோட்டை பிரச்சினை வந்தவுடன் செய்தியாளர்களை சந்திக்கும் அவசியம் என்ன?

நான் அதற்காக கூட்டவில்லை. ஆளுநராக பதவி ஏற்ற பின்னர் ஆறுமாதம் கழிந்ததால் செய்தியாளர்களை சந்திக்கிறேன்.

சந்தானம் உங்களை விசாரிக்க முடிவெடுத்தால் என்ன செய்வீர்கள்?

இந்தக் கேள்வியே தேவையற்றது

சார் அவசியமான கேள்விதான், சந்தானம் உங்களை விசாரிக்க விரும்பினால் என்ன செய்வீர்கள்?

நீங்கள் கூட விசாரிக்கலாம், என் வாழ்க்கை திறந்த புத்தகம். என்ன கேட்கிறீர்கள். நான் உங்கள் பாட்டனார் வயது, நான் 80 வயதை நெருங்குகிறவன். நீங்கள் என்ன கேட்கிறீர்கள், நான் ஏற்கெனவே விளக்கமளித்து விட்டேன்.

திரும்பத் திரும்ப இதே உபயோகமற்ற கேள்விகளை எழுப்புகிறீர்கள். நான் கேட்கிறேன், நீங்கள் ஆளுநருக்கு உரிய மரியாதை அளிக்க மாட்டீர்களா?

இவ்வாறு ஆளுநர் பேசினார்.