“மத்திய அரசிடம் இருந்து சாதி, மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது” – உ.வாசுகி பேட்டி

‘மத்திய அரசிடம் இருந்து சாதி மற்றும் மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது’ என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான உ.வாசுகி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ், காஷ்மீரின் கதுவாவைத் தொடர்ந்து, மறுபடியும் உத்தரப் பிரதேசத்தின் ஈட்டாவில் நேற்று இரவு 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் நாடே அதிர்ச்சியில் உறைந்திருப்பதுடன், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த சம்பவங்கள் தொடர்கதையாகிக் கொண்டே இருந்தால், என்னதான் தீர்வு? என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான உ.வாசுகியிடம் ‘தி இந்து’வுக்காகப் பேசினேன்.

“சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கும்போது தலையிட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவங்களின் பின்னால், சாதி அல்லது மதவெறியே பெரும்பான்மைக் காரணமாக இருக்கின்றது. சாதி வெறியையும், மத வெறியையும் அரசியல் ஆதாயமாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு கட்சி மத்தியில் ஆட்சி செய்யும்போது, இதுபோன்ற சம்பவங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை.

சாதி வெறி, மதவெறியைக் கண்டிப்பதும், அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதும் அவசியத் தேவை. ஆனால், பிரமணியம், வருணாசிரம் தர்மம் போன்றவை எப்படி இந்த மத்திய அரசின் கோட்பாடுகளாக இருக்கிறதோ, அதேபோல மதவெறி என்பதும் அவர்களின் கொள்கையாக இருக்கிறது. எனவே, மத்திய அரசிடம் இருந்து சாதி மற்றும் மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது.

மாதர் சங்கங்கள், பெண்ணிய அமைப்புகள் இந்த சம்பவங்களில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

எங்களைப் பொறுத்தவரையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது எல்லா இடங்களிலுமே நாங்கள் தலையிடுகிறோம். பிரச்சினை என்ன என்றால், இந்த சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும்போது, ஒரு சம்பவத்தில் எஃப்.ஐ.ஆர். பதிய போராட வேண்டியிருக்கிறது; இன்னொரு சம்பவத்தில் சார்ஜ் ஷீட் பெற போராட வேண்டியிருக்கிறது; மற்றொரு சம்பவத்தில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும்போது மேல்முறையீட்டுக்குப் போக வேண்டியிருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கக் கூடிய ஆணாதிக்கம், சாதியம், மதவெறி போன்ற விஷயங்களுக்கு எதிரான பொதுவான பிரச்சாரங்களிலும் ஈடுபட வேண்டியிருக்கிறது.

வர்மா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் வந்திருக்கக் கூடிய சட்டம் ஐபிசி 166 ஏ, சட்டப்படி நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய பிரிவு. தமிழகத்திலேயே இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. ஆனால், ஓரிரு சம்பவங்களைத் தவிர, பெரும்பாலான சம்பவங்களில் எஃப்.ஐ.ஆர். பதிய மறுக்கிறார்கள் அல்லது தவறான முறையில் சம்பவங்களைக் கையாள்கிறார்கள். அதற்காக, இதுவரை எந்தக் காவலர் மீதும் 166 ஏ பிரிவு பயன்படுத்தப்படவில்லை. ஒரு சட்டத்தைக் கொண்டுவர போராட்டம், வந்த சட்டத்தை அமல்படுத்துவதற்குப் போராட்டம். இவை எல்லாவற்றையுமே நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, இதை வெறும் பெண்கள் அமைப்புகளின் பொறுப்பாக நான் பார்க்கவில்லை. அனைத்து ஜனநாயக இயக்கங்களும் குரல் கொடுக்க வேண்டிய விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.

சிம்புவின் ‘பீப்’ பாடல், ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ சர்ச்சைகளின்போது தெருவில் இறங்கிப் போராடிய மகளிர் அமைப்புகள், இதுபோன்ற விஷயங்களில் அதிக அக்கறை காட்டாதது ஏன்?

காஷ்மீர் சம்பவமாகட்டும், உன்னாவ் சம்பவமாகட்டும்… எங்கள் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள், தனிநபர்கள் தெருவில் இறங்கிப் போராடின. ஆனால், ‘பீப்’ பாடல் போராட்டம் ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்டதால், பெரிய அளவில் தெரிந்தது.

சமீபத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள பரதூர் என்ற இடத்தில் 16 வயதுப் பெண் ஒருவர் கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இதற்காக ஒரு பெரிய போராட்டத்தை கடந்த 10 ஆம் தேதி ஜனநாயக மாதர் சங்கம் நடத்தியது. ஆனால், ஊடகங்களில் அதற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.

நிர்பயா சம்பவம், சிதம்பரம் பத்மினி சம்பவம் உள்ளிட்ட சில சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்களில் வெளியிடப்பட்டபோது, அவை தனித்த கவனம் பெற்றன. அதனால்தான், இதுபோன்ற சம்பவங்களில் எல்லாருக்கும் பங்கு இருக்கிறது என்று கூறினேன்.

கடந்த வருடம் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரத்தின்படி, இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் மாநிலங்களில் சென்னை முதலிடம் பிடித்திருக்கிறதே…

மற்ற மாநகரங்களுடன் சென்னையை ஒப்பிட்டு அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகத் தமிழகம் என்று பார்க்கும்போது, சாதியம், மதவெறி, ஆணாக்கத்திற்கு எதிராக சமநீதி, சமூக நீதியை நிலைநாட்டும் பாரம்பரியம் தமிழகத்துக்கு இருக்கிறது. எனவே, இந்த அளவுக்கு கூட குற்றங்கள் இங்கு நடக்கக்கூடாது என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, என்ன மாதிரியான தண்டனைகள் தரவேண்டும் என நினைக்கிறீர்கள்?

இந்திய அரசியல் சட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் தண்டனைகளே அதிகம்தான் என்பது எங்கள் கருத்து. ஆனால், குற்றவாளிகள் யாரும் தப்பிவிடாமல், அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.