யாழில் வாள், கத்தி உற்பத்தி செய்ய தடை

வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ். மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுச் சம்பங்கள் அதிகரித்துள்ளதுடன் ஆபத்தான கத்திகளைக் காட்டி, அச்சுறுத்தி கொள்ளைகள் இடம்பெறுவதையடுத்தே இந்த உத்தரவை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திங்கட்கிழமை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சட்டத்துக்கு முரணான வகையில் வாள்கள் வைத்திருப்பதும் ஆபத்தான கத்திகளை வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும். இவற்றை உடைமையில் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

பொலிஸார்; நடத்தும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, இந்த ஆயுதங்களை உடைமையில் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, இத்தகைய ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை அந்தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

சட்டத்துக்கு முரணான முறையில் வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பன குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதனால், யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இவற்றை உற்பத்தி செய்வதை இந்த நீதிமன்றம் தடை செய்கின்றது.

நீதிமன்ற உத்தரவை மீறி இவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்தால் அல்லது யாருக்கும் வழங்கினால், அத்தகைய தொழிற்சாலைகளின்; உரிமம் உடனடியாக ரத்துச் செய்யப்படும். அத்தகைய ஆயுதங்களை உற்பத்தி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ்ப்பாணத்திலுள்ள பல தொழிற்சாலைகள் சட்டவிரோதமான வாள்கள் ஆபத்தான கத்திகள் என்பவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்வதையே முக்கிய தொழிலாகக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

குற்றச் செயல்களில் சம்பந்தப்படுகின்ற வாள்கள், ஆபத்தான கத்திகள் கைப்பற்றப்படும் போது, அவற்றை உற்பத்தி செய்ய சொன்னது யார், யார் அவற்றை உற்பத்தி செய்தது, எந்தக் தொழிற்சாலைகளில் அவைகள் உற்பத்தி செய்யப்பட்டன என்பது போன்ற தகவல்களை பொலிஸாரின் விசாரணையின் போது சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் வாள்கள், கத்திகளை உற்பத்தி செய்த தொழிற்சாலை உரிமையளார்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்’ என நீதிபதி கூறினார்.