யோசிதவின் சிறைக்கூடம் தடை செய்யப்பட்ட பிரதேசம்!

வெலிக்கடைச் சிறைச்சாலையில், லெப்.யோசித ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறைக்கூடப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே சிறைக்கூடப் பகுதிக்கு இரண்டு சிறைஅதிகாரிகளே நுழைவதற்கு அனுமதி அளி்க்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள், 24 மணிநேரமும் சிறைச்சாலை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். யோசித ராஜபக்ச, விருந்தினர்களைச் சந்திக்கச் செல்லும் போது, ஒரு சிறை அதிகாரியும் சமூகமளித்திருப்பார். சிறை அதிகாரிகளுக்கு அறிவிக்காமல், இவர்கள் சிறைக்கூடத்துக்கு வெளியே செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

யோசித ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடம் அருகே கைத்தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே, இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேரையும் பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடுவெல நீதிமன்றம் இவர்களைப் பிணையில் விடுவிக்க மறுத்துள்ள நிலையிலேயே, மேல் நீதிமன்றத்தில் பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும், 17ஆம் நாள் இடம்பெறவுள்ளது.