வட மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் காலம் நீடிப்பு

வடமாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைக்காலம், 2 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணசபையின் அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்கான குழுவொன்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டது.

அமைச்சர்கள் மீதான முறைப்பாடுகளை, அந்த முறைப்பாட்டுக் குழுவிடம் பொதுமக்கள் வழங்க முடியும்.

இந்த விசாரணைக்குழுவில், முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.பத்மநாதன், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், சு.பரமராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இக்குழுவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சர்கள் மீதான முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணை, இன்னும் முடிவடையவில்லை. அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு, கால நீடிப்பை கோரியுள்ளது. கோரிக்கைக்கு அமைய விசாரணைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது” என, அவைத்தலைவர் தெரிவித்தார்.

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடுகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள், பொதுமக்களினால் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தமை மற்றும் அமைச்சர்களை மாற்றவேண்டும் என தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய, இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்குழுவுக்கு, வடமாகாண சபையில் சில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.