எங்களுக்கு போராடுபவர்கள் வேண்டாம். போராட்டம்தான் வேண்டும்!!

கனடாவில் குளிரென்றாலும் சம்பந்தன்தான் காரணம், லண்டனில பனியென்றாலும் சுமந்திரன்தான் காரணம் என்று தொட்டதற்கெல்லாம் தமிழ் கூட்டமைப்பின் மீது தவிலடித்துக்கொண்டிருக்கும் “புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் தீர்மானிகள்” எல்லோரும் தாயகத்தில் அண்மைக்காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் பற்றி பேச்சு மூச்சுமில்லாமல் கரண்ட் அடித்த காகம் மாதிரி மூர்ச்சையாகி கிடப்பதுதான் அங்குள்ள மக்களுக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இடையிலான அரசியல் தேவைகளின் வித்தியாசத்தை கோடு கிழித்து காட்டியிருக்கிறது.
வவுனியாவில் நடைபெற்ற காணமலாக்கப்பட்டவர்கள் குறித்த போராட்டமானது வென்றதோ தோற்றதோ அது வேறு விடயம். ஆனால், அரசியல் கலப்படமில்லாத போராட்டமொன்றை தாங்களே இனி கையில் எடுத்தால்தான் வழி பிறக்கும் என்ற முடிவோடு பாதிக்கப்பட்ட அந்த மக்கள் வீதியில் இறங்கியதானது ஆளும் தரப்பை மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்தையும் குற்றவாளிக்கூண்டியில் நிறுத்தியது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இன்றும்கூட கோப்பாபுலவு மக்கள் அவ்வாறானதொரு விரக்தியோடுதான் வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.தமிழ் தேசியத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்துவருகின்ற “புலம்பெயர்ந்த சிந்தனை சிற்பிகள்” எவரிடமிருந்தும் இன்றுவரை இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக எந்த ரியாக்ஷனையும் காணவில்லை. ஊரில் ஆடு குட்டி போட்டால்கூட அது சரியாக பிறந்திருக்கிறதா இல்லை அதுவும் ஏதாவது “நுண்ணிய இன அழிப்பின் வடிவமாக வந்து விழுந்திருக்கிறதா” என்று தராசு தட்டோடு ஓடிவருகின்ற அமைப்புக்கள் எதுவுமே இந்த மக்கள் போராட்டத்துக்கு குறைந்த பட்சம் ஒரு ஆதரவு அறிக்கைகூட விடுக்கவில்லை. எல்லோரும் “எழுக தமிழ்” பேரணிக்கு பொங்குவதற்காக தங்கள் முகநூல் கணக்குகளை கழுவிப்பூட்டிக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. கொஞ்சக்கூட்டத்துக்கு இன்னமும் ஜல்லிக்கட்டுக்கே தீர்வு எடுத்துக்கொடுக்கவில்லை என்ற கவலை வேறு.

இன்று புலம்பெயர்ந்த தமிழர் அரசியலை எடுத்துப்பார்த்தால் தாயகத்திலுள்ள சி.சி.டி.வி. கமராக்களில் பதிவு செய்யப்பட்ட ஏதாவது பரபரப்பான காணொலியோ அல்லது மொபைல் போன் கமராவில் பதிவு செய்யப்பட்ட – இரத்த நாளங்களையெல்லாம் புடைக்கவைக்கும் – வீடியோ பதிவொன்றோ கிடைக்கப்பெற்றால்தான் இங்குள்ளவர்களின் தேசிக்காய் சைஸில் உள்ள தேசிய உணர்வை தேங்காய் சைசுக்கு கொண்டுவரக்கூடியதாக உள்ளது. இதுதான் இங்குள்ள யதார்த்தம்.
நூற்றுக்கணக்கில் தங்களுக்கிடையில் பகிர்ந்துகொள்ளுமளவுக்கு பரபரப்பான whats app matter ஒன்று தாயகத்திலிருந்து கிடைத்தால் அதுதான் இங்கு போராட்டத்தை தீர்மானிக்கிறது. ஒன்றுமே இல்லாத ஒன்றை நோக்கிய முக்கியத்துவத்தை விசாலமாக கட்டியெழுப்பி அதனை மக்கள் மத்தியில் சந்தைப்படுத்துவதன் மூலம் ஒரு வெற்று அரசியல் சமன்பாடு வரையப்படுவதும் தர்க்க ரீதியாக எந்த அடிப்படையுமற்ற அந்த வட்டத்துக்குள் நின்று கம்பு சுற்றுவதும்தான் மக்களுக்கான போராட்டம் மற்றும் அதற்கான ஆதரவு என்று இங்கு விதி எழுதப்படுகிறது.

இந்த வட்டத்துக்குள்தான் “எழுக தமிழ்” என்றும் முதலமைச்சரின் வீராவேச பேச்சுக்களுக்கான வழிபாடுகள் என்றும் சுமந்திரன் மீதான கொலை முயற்சி என்றும் குழுச்சண்டைகள் – துரோகி பட்டமளிப்புக்கள் என்று சகலதும் சீழ் பிடித்த பெரும் புண்களாக வீங்கி பின்னர் வெடித்தொழுகி நாற்றமடித்துக்கொண்டிருக்கின்றன.
இது குறித்தெல்லாம் எந்த சுய மதிப்பீடும் இல்லாமல் – பச்சையாக சொல்லப்போனால் எந்த சொரணையும் இல்லாமல் – இன்னமும் தாயகத்திலுள்ள அந்த மக்களை வைத்து அரசியல் செய்வதற்கு அடுத்த வழி வாராதா என்ற வக்கிரமான ஒரு வழியை எதிர்பார்த்துத்தான் இன்னமும் நாங்கள் இரண்டு கைகளையும் கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு காத்துக்கிடக்கிறோம்.

எங்களுக்கு போராடுபவர்கள் வேண்டாம். போராட்டம்தான் வேண்டும்!!

(ப. தெய்வீகன்)