‘இயக்கங்கள் துப்பாக்கித் தூக்க முன்னரே இராணுவம் துன்புறுத்தியது’

இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கி தூக்க முன்னர் இருந்தே, அரச படைகளும் குண்டர்களும், அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்துள்ளன. இரக்கமின்றிச் சுட்டுக்கொன்று வந்துள்ளனர். குத்திக் கொன்றுள்ளனர். அதனால்தான், எமது வடமாகாண சபை இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இயற்ற வேண்டி வந்தது’ என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதுவரையில் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள், தமிழ் மக்களுக்கெதிரான மனிதப் படுகொலைகளைக் கண்டும் காணாத மாதிரியே இருந்து வந்துள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுத்து நட்டஈடு தந்து வேலையை முடிக்கப்பார்க்கின்றது அரசாங்கம். இதற்காக, சர்வதேசத்திடம் இருந்து நட்டஈட்டுப் பணம் பெற விழைகின்றது.

போர்க்குற்ற விசாரணை உரிய முறையில், சந்தேகங்களுக்கு இடமின்றி நடைபெற்று, குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதே, வட்டக்கண்டல் படுகொலையில் தமது உறவுகளை இழந்த எமது சகோதர சகோதரிகளின் மனதைச் சற்றேனும் ஆசுவாசப்படுத்தக்கூடிய காரியம்’ என அவர் மேலும் கூறினார்.