விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார்

லண்டனில் புலம்பெயர் அமைப்பால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கொடி ஏந்தப்படுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். கிங்ஸ்டன் நகரம் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வடக்கு முதலமைச்சர் லண்டன் சென்றிருந்தார். குறித்த உடன்படிக்கை கிங்ஸ்டன் மாநகரத்தில் கடந்த 18ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இதேவேளை, முதல்வரை வரவேற்கும்முகமாக லண்டன் வாழ் தமிழர்களால் சிறப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விடுதலை புலிகளின் கொடி ஏற்றுவதே குறித்த சந்திப்பின் முக்கிய குறிக்கோளாக இருந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றுவதற்கான ஏற்பாடாக இது இருந்தால் இந்த சந்திப்பில் தான் உரையாற்றப் போவதில்லை என விக்னேஸ்வரன் குறித்த அமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்த பின்னர், அவர்களின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் (ceylontoday) செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள புலம் பெயர் தமிழ் உறவுகள் வடக்கில் முதலிடுவதற்கான ஒரு வாய்ப்பினையும் இந்த லண்டன் விஜயம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இரட்டை நகர் உடன்படிக்கை மூலம் புலம்பெயர் உறவுகளின் கணிசமான உதவிகளைப் பெற்று போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.