சி.வியும் சிங்கள மொழியும்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மாணவர்களிடம் மிக முக்கியமானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளார். தாம் செய்ததைப் போல், சிங்கள மொழியைக் கற்காதிருக்க வேண்டாம் என அவர் கேட்டுள்ளார். யாழ். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை கலைமகள் திருவுருவச் சிலை திறப்பு விழா, கடந்த வாரம் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

‘இலங்கை வாழ் மக்களிடையே, ஐயமும் சந்தேகமும் மனக் கிலேசமும் அவநம்பிக்கையும் ஆத்திரமும்;, இதுகாறும் ஏற்படக் காரணம் தவறான புரிதலாகும். இரு மொழி பேசும் மக்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால், ஒருவர் மொழியை ஒருவர் கற்க வேண்டும். நோர்வே போய், அவர்கள் மொழியை எம்மவர் கற்கின்றனர். பிரான்ஸ் போய் பிரெஞ்ச் மொழியைக் கற்கின்றனர். ஆனால், சிங்கள மொழியைப் புறக்கணிக்கின்றோம்.

‘நான் சிங்களம்; படிக்கத் தொடங்கியது 1955ஆம் ஆண்டில். 1956ஆம் ஆண்டில் ‘தனிச் சிங்கள’ச் சட்டம் கொண்டு வந்ததும், ஆத்திரத்தில் சிங்கள மொழியைப் படிப்பதை நிறுத்திக் கொண்டேன். இன்று, சிங்கள ஊடகங்களுக்கு சிங்களத்தில் எமது பக்க அரசியல் குறைபாடுகளை குறையுடன் நான் கூறி வருகின்றேன். சிங்கள அறிவு இல்லாதவர்கள், வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும். ஆகவே, அரசியலை மறந்து சிங்கள மொழியாற்றலையும் விருத்தி செய்யுங்கள்’ என முதலமைச்சர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் இதனை தமிழ்த் தேசியவாதக் கண்ணோட்டத்தில் கூறியிருப்பது உண்மை தான். ஆனால், அவர் இந்த விடயத்தைக் கூறும் போது, சிங்கள அரசியல்வாதிகள் மீதான சந்தேகத்துடன் பேசினாலும் சிங்கள மொழியை வெறுத்துப் பேசவில்லை. ஆனால், சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள், முதலமைச்சர், சிங்கள மொழியை வெறுத்துப் பேசியதைப் போல் ‘நான் ‘தனிச் சிங்கள’ச் சட்டத்தை வெறுக்கிறேன்’ என்பதைப் போன்ற தலைப்புகளுடன் தான் செய்தி வெளியிட்டிருந்தன.

1956ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் எஸ்;.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, ‘தனிச் சிங்கள’ச் சட்டத்தைக் கொண்டு வந்த போது, தமிழ்த் தலைவர்கள் நடந்து கொண்ட விதம் தவறானது என்ற கருத்தை வெளியிட்ட முதலாவது தமிழர் விக்னேஸ்வரன் அல்ல.

அச்சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல தமிழர்கள் அரச சேவையிலிருந்து வெளியேறியதனால், அரச சேவையில் இருந்த தமிழர் செறிவு குறைந்ததாகவும் அதனால் பிற்காலத்தில் அரச சேவையில் தமிழர்களுக்கு எதிரான வேற்றுமை அதிகரித்ததாகவும் இதற்கு முன்னரும் பலர் கூறியிருக்கின்றனர்.

‘தனிச் சிங்கள’ச் சட்டம் அல்லது 1956ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க அரச கரும மொழிச் சட்டமானது, 1970களின் இறுதியிலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற போருக்கும் முக்கிய காரணமாகிய ஒன்றாகும். அச்சட்டமும் வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களும், பல்கலைக்கழக தேர்வில் நடைமுறைப்படுத்தப்பட்ட தரப்படுத்தலும் உரிமை கேட்ட போதெல்லாம் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டமையும், ஆரம்ப காலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்கள் முன்வைத்த முக்கிய அரசியல் பிரச்சினைகளாகும்.

உண்மையில், ‘தனிச் சிங்கள’ச் சட்டம், தமிழ் பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை, குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களை வெகுவாகப் பாதித்தது. அதேபோல், அது, அப்பகுதி மக்களைப் பொறுத்தவரை கேலிக்கூத்தாகவும் அமைந்தது. முழுதும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில், கடமையாற்றுவதற்காகவும் பதவி உயர்வு பெறுவதற்காகவும் அரச ஊழியர்கள் சிங்களத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துவது தெளிவாகவே அநீதியாகும்.

இங்கு என்ன நடந்தது என்றால், சுதந்திரத்தின் பின்னர் பிரதமராகவிருந்த டி.எஸ் சேனாநாயக்கவையடுத்து, அவரது மகனான டட்லி சேனாநாயக்க பதவிக்கு வரும் சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தெரிந்தன. டட்லியை விட அறிவிலும் அரசியல் ஈடுபாட்டிலும் முன்னணியில் இருந்த பண்டாரநாயக்க இதனால் ஏமாற்றமடைந்தார். அவருக்கும் நாட்டின் தலைவராக வர அவசியமாக இருந்தது.

இந்த நிலையிலேயே அவர், 1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியை ஆரம்பித்தார். தமக்கென ஒரு பின்புல சக்தி அவருக்கு அவசியமாகியது. அக்காலத்தில் புதிதாக தலைதூக்கியிருந்த தேசிய முதலாளித்துவ சக்திகளை ஐ.தே.க மதிக்கவில்லை. எனவே, அச்சக்திகள் புதிய தலைமைத்துவமொன்றை தேடிக் கொண்டிருந்தன. பண்டாரநாயக்க இந்தச் சக்திகளைக் கண்டார். அவர்களுக்குப் பொருத்தமான வகையில் தேசியவாத சுலோகங்களை முன்வைத்தார். அதில் ஒன்று தான், சிங்களத்தை, 24 மணித்தியாலங்களில் அரச கரும மொழியாக்குவதென்பது.

இது அரசியல் சந்தர்ப்பவாதமேயல்லாது வேறொன்றுமல்ல. இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று, ஆங்கிலேயரைப் போல் வாழ்ந்த பண்டாரநாயக்க, அடிப்படையில் ஓர் இனவாதியல்ல. ஆனால், தமது எதிர்கால நலனைக் கருதி, அவர் ஒரு சந்தர்ப்பவாதியானார்.

சிங்கள மொழி, அரசகரும மொழியாக்கப்பட்ட போது, கலாநிதி என்.எம்.பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா போன்ற இலங்கையில் அப்போதிருந்த இடதுசாரியினர், அதனைக் கடுமையாக எதிர்த்தனர். அவர்கள், 1930களில் இருந்தே சிங்களம்; மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரசகரும மொழிகளாக்கப்படவேண்டும் என வலியுறுத்தி வந்தவர்களாவர். ‘தனிச் சிங்கள’ச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றிய கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா, ஒரு மொழியென்றால் இரு நாடாகிவிடுவோம், இரு மொழிகளாக இருந்தால் ஒரே நாடாக இருப்போம் என எச்சரித்தார். ‘தனிச் சிங்கள’ச் சட்டத்தை எதிர்க்கும் பலர், இன்னமும் கொல்வினின் இந்தக் கூற்றை பாராட்டுகின்றனர். அதே கொல்வின், அரசியலமைப்புத்துறை அமைச்சராக இருந்த போதே 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பு வரையப்பட்டது. அதனை வரைவதில் முன்னணியில் இருந்து உழைத்தவரும் அவரே. ஆனால், தாம் போதித்த அந்தக் கொள்கையை அந்த யாப்பு வரைவின் போது பின்பற்ற அவரே பின்வாங்கினார். அந்த யாப்பிலும் சிங்களம்; மட்டுமே அரசகரும மொழியாக அங்கிகரிக்கபட்டது. இதுவும் அரசியல் சந்தர்ப்பவாதமே. பின்னர் இந்த நிலை, 1987ஆம் ஆண்டு வரை நீடித்தது. 1978ஆம் ஆண்டு பிரதமர் ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் முதலாவது குடியரசு அரசியலமைப்பு மாற்றப்பட்டு, நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் விகிதாசாரத் தேர்தல் முறை ஆகியவற்றுடன் இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலும் சிங்களம்; மட்டுமே அரச கரும மொழியாக அங்கிகரிக்கப்பட்டிருந்தது.

அக்காலத்தில், தமிழ் ஆயுதக்குழுக்கள் உருவாகியிருந்தன. 1975ஆம் ஆண்டு தமிழ் ஆயுதக் குழுவொன்றினால் முதலாவது அரசியல் கொலையும் இடம்பெற்றிருந்தது. அதாவது யாழ்ப்பாண மேயர் அல்பி‡றட் துரையப்பா, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தனரால் கொல்லப்பட்டிருந்தார். அந்த ஆயுதக் குழுக்கள் எடுத்தியம்பிய பிரச்சினைகளில் மொழிப் பிரச்சினையும் முக்கயமானதாக இருந்ததனால், 1980களில் இலங்கையின் இனப் பிரச்சினையில் தலையிட்ட இந்திய அரசாங்கமும் அந்தப் பிரச்சினையை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது.

அதன் பிரகாரம், 1987ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மொழியையும் அரச கரும மொழியாக அங்கிகரிக்க ஜே.ஆர்.ஜயவர்தன இணக்கம் தெரிவித்தார். அதன் பிரகாரம் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், தமிழும் சிங்கள மொழியைப் போலவே அரசகரும் மொழியொன்றாகியது.

ஆனால், அந்த அரசியலமைப்புத் திருதத்தத்தில் அது குறிப்பிடப்பட்டிருக்கும் விதத்தைப் பாரத்தால், ஆட்சியாளர்கள், தமிழை அரசகரும மொழியாக மனப்பூர்வமாக ஏற்க எந்தளவு தயங்குகின்றனர்; என்பதை உணர முடிகின்றது. தமிழ் மொழி அரசகரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாகும் என்றே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போது வழக்கில் உள்ள அரசியலமைப்பில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை.

அதிலுள்ள ஒரு வாசகத்தில், சிங்களம் அரசகரும் மொழியாகும் என குறிபபிடப்பட்டு இருக்கிறது. அடுத்த வாசகத்தில் தமிழும் அரசகரும மொழியாகும் என விந்தையான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு வாசகங்களையும் வாசிக்கும் போது, இரு மொழிகளுக்கும் அரசகரும் மொழி அந்தஸ்த்துக் கிடைத்திருப்பதாகத் தோன்றினாலும் இரண்டு மொழிகளும் சரி சமமானவையல்ல என்றதோர் உணர்வையும் அவை கொடுக்கின்றன.

1987ஆம் ஆண்டு, இவ்வாறு தமிழுக்கு அரசகரும மொழி அந்தஸ்த்து வழங்கப்பட்ட போதிலும் அதன் பின்னரும் தமிழ் மொழி அமுலாக்கல் திருப்திகரமான முறையில் இல்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே இன்னமும் தமிழ் பேசும் மக்களுக்கு சிங்களத்திலேயே அரச கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. பொலிஸ் நிலையங்களில் போதியளவு தமிழ் தெரிந்த அதிகாரிகள் இல்லை. தமிழுக்கு அரசகரும மொழி அந்தஸ்த்து வழங்கப்பட்டு மூன்று தசாப்தங்கள் பூர்த்தியாகும் நிலையில் இருந்த போதிலும், அரச அலுவலகங்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களை வழங்குவதற்காக மொழிபெயர்ப்பாளர்களை பயிற்றுவிக்கும் எந்தவொரு திட்டமும அரசாங்கத்திடம் இல்லை.

இவை அனைத்தும், அரசாங்கங்களின் குறைபாடுகளும் ஆட்சியாளர்களின் சந்தர்ப்பவாதமுமாகும். ஆனால், முதலமைச்சர் கூற முனைவதைப் போல் அது சிங்கள மொழியின் தவறல்ல. சிங்களமும் தமிழும் ஆங்கிலமும் ஏனைய மொழிகளையும் போலவே, மனித அறிவுக்கான ஒரு திறவுகோலாகும். சிங்களமும் தமிழைப் போலவே வளமானதோர் இலக்கியத்தைக் கொண்ட மொழியாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையைப் பொறுத்தவரையில் அது தமிழைப் போலவே இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கு உதவக்கூடிய ஒரு கருவியாகும்.

ஒரு சமூகத்தின் மொழியை மற்றொரு சமூகம் அறிந்திருப்பதனால் மட்டும் அவ்விரண்டு சமூகங்களிடையே நல்லுறவு வளர்வதில்லை.; இலங்கையில் ஒரே மொழியைப் பேசும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே எவ்வளவோ பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒரு சமூகத்தின் கலாசாரத்தை மற்றைய சமூகம் உணர்ந்து அதற்கு மதிப்பளிக்க தவறுவதனாலேயே அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதற்கு ஒவ்வொருவரின் மொழியை அறிந்திருப்பது அவசியமாகிறது. அந்த வகையில் தான், ஒருவரது மொழியை மற்றவர் அறிந்திருப்பது பயனுள்ளதாக அமைகிறது.

முதலமைச்சர் தமது உரையில் மேலும் இவ்வாறு கூறுகின்றார். ‘நான் அன்று தொடங்கிய சிங்கள படிப்பைத் தொடர்ந்து வந்திருந்தேனானால் எந்தச் சிங்கள அரசியல்வாதிக்கும் அவரின் மொழியிலேயே சுடச் சுடப் பதிலளித்திருக்கலாம்’ அவர் கூறும் இந்த உண்மையை அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களத் தீவிரவாதிகள் மேற்கொண்ட பிரசாரத்தின் போது முஸ்லிம்கள் உணர்ந்தனர். தமது பக்க நியாயத்தை சிங்களவர்களுக்கு எடுத்துரைக்க சிங்களம்; தெரிந்தவர்கள் இல்லாமல் அவர்கள் தவித்தனர்.

சிங்களவர்களிடையே வாழும் முஸ்லிம்களுக்கு சிங்களம்; நன்றாகத் தெரியும் அதேவேளை, அவர்களில் சிலருக்கு நல்ல சிங்கள மொழி ஆற்றலும் இருக்கிறது. ஆனால், அவர்களும் சிங்கள மக்களின் கலாசாரத்தையும் அவர்களது சிந்தனா போக்கையும் நன்றாக உணர்ந்திருக்கவில்லை. எனவே, எவ்வாறு ஒரு முஸ்லிமுக்கு ஒரு விடயத்தை விளக்குகின்றார்களோ, அவ்வாறு தான் ஹலால் பிரச்சினை போன்றவற்றை அவர்கள் சிங்கள மக்களுக்கு விளக்கினார்கள். எனவே, முதலமைச்சர் கூறுவது போல், ஒருவர் மற்றவரது மொழியைக் கற்பது நல்லிணக்கத்துக்கு உதவுகிறது தான். அதை விட, ஒருவர் மற்றவரது கலாசாரத்தையும் சிந்தனா போக்கையும் அறிந்து செயற்படுவதே, இன நல்லிணக்கத்துக்கு வழி சமைக்கும்.
(எம்.எஸ்.எம். ஐயூப்)