யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்

சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ என்கிற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 01, 2016) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒரு நூல் வெளியீட்டு விழா என்கிற அளவோடு மாத்திரம் நின்றுவிடாமல், ‘புவிசார் அரசியலில் கைதிகளாய் இருக்கின்ற ஈழத் தமிழர்கள்’ என்கிற விடயத்தினை முன்னிறுத்திய திறந்த கலந்துரையாடலாகவும் அந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தொடர்ந்தும் இயங்கும் பல கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும், நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் அரசியல் ஆய்வாளர்களும் கல்விமான்களும் முக்கிய பேச்சாளர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.

‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ என்கிற மன்னார் நிகழ்வுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் மீண்டுமொரு திறந்த உரையாடல் களம் திறந்திருப்பதற்கான நம்பிக்கையோடு, பார்வையாளர்கள் கூடியிருந்தனர். ஊடகங்களும் அரசியல் நோக்கர்களும் கூட மிகவும் கவனம் செலுத்திய நிகழ்வாக அது கருதப்பட்டது.

குறிப்பாக, அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘எழுக தமிழ்’ பேரணியில் குறிப்பிட்டளவான மக்கள் ஒருங்கிணைந்த ஒருவாரத்தின் பின் இடம்பெற்ற நிகழ்வு என்பதுவும் கவனம் பெறுவதற்கு காரணமானது. ஆனால், அங்கு உரையாடப்பட்ட விடயங்கள் கவனம் பெறுவதற்குப் பதிலாக, அந்த நிகழ்வில் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்கள் ஊடகங்களில் பிரதானப்படுத்தப்பட்டது. குறிப்பாக, தென்னிலங்கை ஊடகங்கள் அவற்றை முன்னிறுத்திக் கொண்டு கட்டுரைகளையும் கருத்துக்களையும் முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றன. அவற்றில் பல, ‘எழுக தமிழ்’ என்கிற நிகழ்வின் நியாயங்களை கேள்விக்குள்ளாக்கும் வகையிலானவை.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு தார்மீக உரிமை, இறைமை உள்ளிட்ட அரசியலுரிமைகளை முன்னிறுத்தி வந்திருக்கின்றதோ, அதேயளவுக்கு அதீத உணர்ச்சி வசப்படு நிலைகளினால் அலைக்கழித்தும் வந்திருக்கின்றது. கடந்த 70 ஆண்டுகால வரலாறு அதனைப் பிரதிபலித்து வருகின்றது. அந்த வரலாற்றின் தொடர்ச்சியை நூல் வெளியீட்டு விழாக் குழப்பங்களும் பதிவு செய்தது. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி ஆகியோர் உரையாற்றுகின்ற போது, சிலரினால் தொடர்ச்சியாகக் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதுவும், பேச்சாளர்களிடம் தர்க்கிக்கும் வகையான வார்த்தைகளையும் குற்றச்சாட்டுக்களையும் கூச்சல்களாக முன்வைத்துக் கொண்டிருந்தனர். 500 – 600 பேர் கலந்து கொண்ட நிகழ்வில் ஒரு சிலர் இவ்வாறு நடந்து கொண்டதன் மூலம், பெரும்பான்மையினரின் உரையாடலுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.

திறந்த கலந்துரையாடல் என்கிற நிலையில் நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்கள் ஆரம்பத்தில் பேச்சாளர்களுக்கான வாய்ப்பினைக் கொடுத்துவிட்டுப் பின்னர் பார்வையாளர்களுக்கான கேள்வி நேரத்தினை ஒதுக்கியிருக்கலாம். ஆனால், அது நடைபெறவில்லை. அல்லது, அந்தக் குழப்பவாதிகளினால் அனுமதிக்கப்படவில்லை. இறுதியில், அந்தக் குழப்பவாதிகளும் அவர்கள் சார்பிலான விசிலடிச்சான் குஞ்சுகளும் மனப் புளகாங்கிதத்தோடு வீடு செல்ல, அரைகுறையாக நிகழ்வு முடிந்து போனது.

குறித்த நிகழ்வில், அரசியல் ரீதியில் கொள்கை கோட்பாடு மற்றும் கருத்தியல் முரண்பாடுகளைக் கொண்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களின் கருத்துக்கள் மற்றவரின் கருத்துக்களை மறுதலிக்கும் வகையிலோ, தமது கடந்த காலக் கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையிலோ அமைவது இயல்பு. அது, திறந்த கலந்துரையாடல் களத்தினை மேல்மட்டத்தில் வைத்துக் கொள்ளவும் உதவும். ஆனால், கருத்துக்களை முன்வைக்கவே அனுமதிக்காத நிலைமை குழப்பத்தினை ஏற்படுத்தும் ஜனநாயக விரோத மனநிலையாகும்.

‘எழுக தமிழ்’ பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை எதிர்கொள்வதற்கு தயக்கம் வெளியிடும் தென்னிலங்கை, அந்தப் பேரணியை வேறு வடிவத்தில் சித்தரித்து, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளிலிருந்து தப்பிப்பதில் குறியாக இருக்கின்றது. குறிப்பாக, கொழும்பை மையப்படுத்தும் ஊடகங்களோ – அரசியல் கருத்துக் களமோ எழுக தமிழில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கரிசனைகள் குறித்து உரையாடுவதைத் தவிர்த்தன. ஆனால், ‘எழுக தமிழ்’ நடத்தப்பட்ட காலம் மற்றும் அது யாரினால் நடத்தப்பட்டது என்கிற விடயங்களை முன்னிறுத்தி, அதன்மேல் இனவாத சாயம் பூசுவதில் குறியாக இருந்தன. அதற்காக, புதிய காரணங்களைத் தேட ஆரம்பித்தன.

அப்படிப்பட்ட தருணத்தில்தான், யாழ். நூல் வெளியீட்டு விழாக் குழப்பங்கள் அரங்கேறின. அதனை முன்னிறுத்திய உரையாடல்கள் தென்னிலங்கையில் ஆரம்பித்தன. அதாவது, ஜனநாயக ரீதியிலான உரையாடல்களுக்குத் தமிழ்த் தேசிய அரசியல் தளம் எப்போதுமே தயாராக இருப்பதில்லை. பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருதல் என்பது உரையாடல்களிலிருந்தும் – விட்டுக் கொடுப்பிலிருந்தும் ஆரம்பிக்கப்பட வேண்டியவை; ஆனால், தமிழ்த் தேசிய அரசியலோ அதனை அனுமதிக்காமல், எப்போதுமே கொதிநிலையில் இருக்க விரும்புகின்றது. அதற்கு, சி.வி. விக்னேஸ்வரன் போன்றவர்கள் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு, தமிழ்த் தேசிய அரசியலின் கடும்போக்குத் தலைவர்களுக்கு, இணக்கமான அரசியல் தீர்வு தொடர்பில் எந்த அக்கறையும் இல்லை. அதனால், குழப்பங்களை ஏற்படுத்துவதில் குறியாக இருக்கின்றார்கள். எம்.ஏ. சுமந்திரனும் எஸ்.தவராசாவும் மக்களினால் தேர்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களாலேயே ஜனநாயக ரீதியிலான கருத்துக்களைத் திறந்த உரையாடல் களத்தில் முன்வைக்க முடியவில்லை. அப்படியான மனநிலைக்காரர்கள் எவ்வாறு அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் இணக்கமான உரையாடல்களுக்கு முன்வருவார்கள்? என்கிற கேள்விகளுடான விடயங்களை வைத்து முக்கியமான கோரிக்கைகளிலிருந்து எம்பிக்குதிக்க கொழும்பு ஊடக- அரசியல் கருத்துக் களம் முனைந்து கொண்டிருக்கின்றது.

எழுக தமிழில் முதலில் அந்தத் தரப்பு கண்ட குற்றம் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களை மாத்திரம் வெளிப்படுத்திவிட்டு தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல்களை ‘எழுக தமிழ்’ ஏன் தவிர்த்தது? என்பதாகும்.

‘எழுக தமிழ்’ பிரகடனத்தில் தென்னிலங்கை – தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால், ‘எழுக தமிழ்’ பேரணி மேடையைச் சுற்றிய பாதாகைகளில் குறிப்பாக, ஆங்கில – சிங்கள வடிவங்களில் தனித்து தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. பிரகடனத்தின் பகுதிகளை மொழிமாற்றிய ஆர்வலர் என்ன நிலைப்பாட்டில் தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல் பரப்பினை தவிர்த்தார் என்றுதெரியவில்லை. அவரின்,
ஆர்வக்கோளாறுகளைத் தமக்கான கருவியாகப் பிடித்துக் கொண்டு மல்லுக்கட்டிய கொழும்புத் தரப்புக்கள், பிரகடனத்தின் முழுமையான பிரதியை வாசிப்பதிலிருந்து பின்நின்றன. இப்போது, யாழ். நூல்வெளியீட்டு நிகழ்வு குழப்பத்தினை முன்னிறுத்திக் கொண்டு ஒட்டுமொத்தமான கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு உரையாட முனைகின்றன.

தமிழ்த் தேசிய அரசியலில் திறந்த உரையாடல்களின் அவசியம் எப்போதுமே இருந்து வந்திருக்கின்றது. ஆனாலும், அவை சாத்தியப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் என்பது வெகு சிலவே. குறிப்பாக, தமிழ் மக்களின் வன்வலு வடிவமானஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான இன்றைய சூழலில் திறந்த உரையாடல்களின் அவசியம் அதிகமாகும். அதுதான், புதிய நம்பிக்கைகளோடு புதிய அரசியல் பாதையை இடுவதற்கும் உதவும். ஆனால், அதற்கு தங்களுக்குள் முரண்படும் கட்சிகளும் தலைவர்களும் அவர்கள் சார்பானவர்களும் உளமாரத் தயாராக இருக்கின்றார்களாக என்றால் ‘இல்லை’ என்றே பதில் கிடைக்கின்றது. ஏனெனில், திறந்த உரையாடல் என்பது பல நேரங்களில் தங்களது ஆளுமைக் குறைபாட்டினையும், அரசியல் குயுபுத்திகளையும் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதலாகும். ஆனால், இப்படியானவர்களையெல்லாம் சமாளித்து ஒரு திறந்த கலந்துரையாடலை ஒருங்கிணைத்தால், அங்கு கட்சிகளின் தலைவர்களின் ஆதரவாளர்கள் அடிப்பொடிகளின் கூச்சல் குழப்பங்களினால் ஆக்கபூர்வமான தருணங்கள் அலைக்கழிக்கப்படும். அல்லது, கருத்துக்களை அனுமதிப்பதற்கான மனநிலை இல்லாதவர்களின் துடுக்குத் தனங்கள் ஒட்டுமொத்தமாகப் பின்நோக்கி இழுத்து விடுகின்றன. யாழ். நூல் வெளியீட்டு விழாவில் கூச்சலிட்டவர்கள் தாம் தொடர்பில் அதிக கவனம் பெறும் நோக்கினை மாத்திரமே பிரதானமாகக் கொண்டிருந்தனர். எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியாவிலும் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக பிரான்ஸிலும் கூச்சலிட்டு குழப்பங்களை ஏற்படுத்தியவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.

இந்த நிலையில், இப்படியான திறந்த உரையாடல்களிலிருந்து எதிர்வரும் காலத்தில் ஒதுங்கியிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில், மாற்றுக்கட்சி ஆதரவாளர்களின் கூச்சல், குழப்பங்கள் உரையாடல்களை அனுமதிக்க மறுக்கின்றன என்ற காரணத்தினாலாகும். அதுபோல, வீரசிங்கம் ஆனந்தசங்கரியும் கூச்சல் குழப்பங்களுக்கு எதிரான தன்னுடைய எரிச்சலினை உரையின்போதே வெளிப்படுத்தியிருந்தார். எஸ்.தவராசாவும் எதிர்காலத்தில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்திருக்கின்றார்.

எல்லாவற்றையும் தாண்டி ஒரு சில விடயங்களை கூச்சல் குழப்பக்காரர்களும் அதற்கு ஊடகங்களில் ஆதரவுதெரிவித்து கோசமிடுபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. அதாவது, தமிழ்த் தேசிய உரையாடல் களத்தில் இவ்வளவு அரசியல் தலைவர்களை ஒருங்கிணைப்பதன் பின்னாலுள்ள சிரமம் மற்றும் இவ்வாறான கூச்சல் குழப்பங்கள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரான தரப்புக்களினால் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையாகும். அதனை உணராமல் கூச்சல் குழப்பங்களுக்கு ஆதரவாக இருப்போமானால், அவசியமான அரசியல் தளத்திலிருந்து எல்லாவற்றையும் பறிகொடுத்தவர்களாக மாறியிருப்போம். அவ்வாறான நிலைக்கு இவ்வாறான குழப்பங்களும் வலுச் சேர்க்கும்.
(புருஜோத்தமன் தங்கமயில்)