ஆசிரியர் தினத்தில் என் அனுபவப் பகிர்வு

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

என்னையும் ஆசிரியராக்கிய எனது ஆசிரியர்களின் நினைவுகளை மனத்தில் மீட்டுப் பார்க்க வைக்கும் இந்த ஆசிரியர் தினத்தை நான் நினைவு கூர்வதில் மகிழ்ந்து நிற்கின்றேன். புலம் பெயர் தேசத்து பட்டமும் இதனைத் தொடர்ந்த பயிற்சிகளும் என்னை கணணித்துறையில் வாழ்க்கையிற்கு தேவையான பொருளீட்டுதலுக்கான பணத்தைத் தேடுவதில் ஈடுபடுத்தியிருந்தாலும் நான் ஆசிரியராக என்னை அடையாளப்படுத்துவதில் மகிழ்ந்திருக்கின்றேன். மகிழ்ந்திருக்கின்றேன் என்பதையும் விட எனது அடையாளமாக ‘மாஸ்ரர்” என்பதே பொது வெளியில் அதிகமாக இருக்கின்றது தெரிகின்றது. தொடரந்தால் போல் 40 வருடங்களாக உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தில் ஈடுபடுவதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

தற்போது எனது பிரதியேக வகுப்பு மாணவர்கள் யார் என்றால் இவர்களின் தாய் தந்தையர் அல்லது உறவினர்கள் ஒரு காலத்தில் எனது உயர் தரவகுப்பு மாணவர்கள். இது எனது பிள்ளைகளுக்கும் பொருந்தி இருப்பது எமது காதலின் ஒரு அங்கமாகும். இந்த பெற்றோர், பிள்ளைகளின் ஆசிரியர் என்ற உறவு என் கற்பித்தல் மீதான நம்பிக்கை இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை நான் தன்னடக்கத்துடன் மகிழ்வாக ஏற்றுக் கொள்கின்றேன். ஊரில் எனது தாய் மொழியில் பாடங்களை கற்பித்த நான் தற்போது ஆங்கில மொழியில் கற்பிற்கின்றேன் இதுதான் பெற்றோர் அவர் தம் பிள்ளைகளுக்கு கற்பித்தல் என்பதில் நான் காணும் முக்கிய வித்தியாசம்

கற்பித்தல் என்பதில் நான் ஈடுபட ஆர்வம் எற்பட்டதும் ஒரு வகை தற்செயல் நிகழ்வுதான். 1978 ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனாக எனது கற்கையை ஆரம்பித்து ஒரு மாதம் கடந்த (1978 நவம்பர் 23ம் திகதி) நிலையில் புது மாணவர்களை வரவேற்கும் இரவு விருந்து விழாவில் நாம் நடனம் ஆடிக்கொண்டிருக்கையில் எமக்கு அந்த பேரிடிச் செய்தி வந்தது. கிழக்கு மாகாணம் புயல், மழையினால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றது என்று. 10 நிமிடம் களிநடனத்தை நிறுத்திவிட்டு மாணவர்கள் நாம் கூடிக்கதைத்து முடிவு ஒன்றிற்கு வந்தோம். விழாவை தொடர்ந்து…. முடிப்பது என்றும். காலை விடிந்ததும் புயல் நிவாரணத்திற்காக நாம் விரிவுரைகளை பகிஷ்கரித்து காரியங்கள் ஆற்றுவது என்று. இதன் அடிப்படையில் மறு நாள் நாம் செயற்பட ஆரம்பித்தோம். (இதுபற்றி விரிவாக வேறு ஒரு இடத்தில் பார்ப்போம்)

கிழக்கு மாகாணத்தின் உடனடி நிவாரணத்திற்கு பின்பு உயர்கல்வி கற்கும் மாணவர்கள் தமது பாடப்புத்தகங்கள், குறிப்புக்கள், பாடசாலை வழங்களை இழந்த நிலையில் 1979 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான உயர்தர(ஏஎல்)பரீட்சைக்கு அவர்களை தயார் செய்வதற்கு குறிப்பாக இந்தப் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புக்களை நடாத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்கென களுதாவளையில் பாரிய கொட்கைகள் பல அமைக்கப்பட்டன. இதில் மட்டக்களப்பு, அம்பாறை மாணவர்கள் யாவருக்கும் பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் வார இறுதி நாட்களில் வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. இதற்கு கிழக்கு மாகாண பெற்றோர்களின் முழுமையான ஆதரவும் விருந்தோம்பலும் மறக்க முடியாத இனிமையான அனுபவங்களை எமக்கு தந்து நின்றன. வெள்ளி பிப 5 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து யாழ் ஊடாக காரைதீவு அம்பாறை பிள்ளையார்? கோவில் வரை செல்லும் காங்கேசன் என்ற சொகுசு பஸ்ஸில் யாழ்பல்கலைக் கழக மாணவர் குழாம் பயணமாவார்கள். இவர்கள் சனி, ஞாயிறு இரு தினங்களும் மாறி மாறி தொடர்சியாக வகுப்பு எடுத்து ஞாயிறு பிப இதே பஸ்சில் ஏறி யாழ் வந்து திங்கள் தமது விரிவுரைகளுக்கு செல்லுதல் என்ற முறமை கடைப்பிடிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் எம்மில் பலர் ‘இலகு’ பாடங்களை கற்பிக்க தமதாக்கிக் கொள்ள மிஞ்சியது பௌதீகம். இது என் தலையில் வீழ்ந்தது. காலங்கள் ஓட பல்கலைக்கழக மாணவரகளின் இந்த வகுப்பெடுக்கும் ஆர்வம் குறைய மிகச் சிலர் நாம் தொடர்ந்தும் இதில் ஈடுபட்டோம். சில பாடசாலைகள் இயல்பு நிலைக்கு திரும்ப நாமும் அம்பாறை காரைதீவு மகாவித்தியாலத்திற்கு இந்த வகுப்புகளை மாற்றி இதனை பின் தங்கிய பிரதேசம் என்ற அடிப்படையில் திருகோணமலை, மன்னார் என்று விஸ்தரித்தோம். இதன் பின் புலத்தில் விடுதலை அமைப்பு ஒன்றின் மாணவர் அமைப்பு செயற்பட்டது என்பது போகப் போக நாம் புரிந்து கொண்டோம். அனால் அவர்கள் எந்த வகையிலும் எமது கற்பித்தலுக்கு இடையூறாக இருக்கவில்லை. மாறாக தமிழ் இளைஞர் பேரவையினருக்கு இந்த மாணவர் அமைப்பின் மீதான் எரிச்சல் எம்மை தீவிரவாதிகள் என மட்டக்களப்பு பொலிஸ் காவல் வரை கொண்டு சென்றதும்… எம்மை சிறையடைக்க முன்பு அந்த நேர வக்கீல் சாம் தம்புமுத்துவினால் உரிய நேரத்தில் காப்பாற்றப்பட்டதும் வரலாறு.

இதன் தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்ட பாதுகாப்பு காரணங்களால் இந்த பின்தங்கிய பிரதேச இலவசக்கல்வி தடைபட நாமும் பல்கலைக் கழக மாணவர்களுக்குரிய சேஷ்டையில் பல்கலைக் கழகத்திற்குள் மூழ்கியிருந்தோம். இந்த நேரம் எனக்கு இன்னொரு கற்பித்தலுக்கான (வாய்ப்பு என்றுதான கூற விரும்கின்றேன்) கிடைத்தது. 1979 அல்லது 1980 என்ற நினைக்கின்றேன் (எனது மாணவியர் யாராவது இதற்கான ஆண்டை உறுதி செய்தால் மகிழ்வேன்) யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவியும் சென் ஜோன்ஸ கல்லூரி மாணவர் ஒருவருக்குமான காதல் கடற்கரை வரை சென்றதினால்… பிரபலமாகி பெண்கள் பாடசாலை மாணவிகளுக்கான கட்டுப்பாடுகளை இறுக்கியது.

அப்போது வேம்படி மகளிர் கல்லுஸரி அதிபராக ஸ்ரீமதி ஆறுமுகம் இருந்தார் கல்லூரி விடுதியின் காப்பாளராக திருமதி சிறீஸ்கந்தராஜ இருந்தார.; விடுதி மாணவிகள் பிரதியேக வகுப்புக்களுக்கு வெளியே போவது தடைப்பட்டதனால் இவர்களுக்கென ஒழுக்கமான. கட்டுப்பாடானஈ கட்டுப்பெட்டியான ஆசிரியர் ஒருவர் விடுதியிற்குள் வந்து கற்பிக்க ஆவன செய்யப்பட்டது. இதற்காக கண்டுபிடிக்கப்பட்டவர் நான் என்பதை நீங்கள் நம்பியே ஆகவேண்டும். என் மீதான நம்பிக்கை நான் காப்பாற்ற முயற்சித்த போதுதான் தெரிந்தது மகளிர் கல்லூரி வாசலைத் தாண்டி உள்ளே நான் போய் வரும் போது நான் என்னனைக் காப்பாற்றிக் கொள்வதே எவ்வளவு கஷ்டம் என்று. இத்தனைக்கும் அன்று நான் அரும்பு மீசை முளைக்கும் ‘அழகான?’ பல்கலைகழக இளைஞன். பெண்களின் (என்னிடம் படிக்காத) சீண்டல்கள் (தற்போதைய வார்த்தையில் கலாய்த்தல்) நான் பல்பு வாங்காத நாட்களே இல்லை. என்ன இதே மாதிரியான அனுபவங்களை எனது உறவினர் பெண்களிடம் நாம் பெறும் போது மிகச் சாதாரணமாக எடுக்கும் நாம் தெரியாத பெண்களிடம் இருந்து இவை வரும் போது வேறு மனநிலையில் பார்க்கும் நிலையில் இருந்தோம் என்பதை நாங்களும் 18 பெண்பிள்ளைகளுக்கு அப்பாவாகும் போது முழுமையாக புரிய முடிந்ததுஇ மற்றயபடி இது ஒரு வகை சந்தோஷமான தருணங்கள்தான். ஒரு மணித்தியாலய வகுப்பிற்கு மூன்று மணித்தியாலயத் தயாரிப்பு என்னை முழமையான ஆசிரியனாக மாற்றியது.  பிறகு இன்றுவரை கற்பித்தல் என்பது எல்லாம் சுபம்தான்.

மாணவர்கள் இயல்பாக படித்தல் வேண்டும். கடுமையாக படித்தல் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. எதனைனயும் மனப்பாடமாக்க கூடாது. மாறாக பாடவிதானத்தில் இருக்கும் நுணுக்கங்களை நாம் கற்பித்தல் வேண்டும். இதன் அடிப்படையில் மாணவர்கள் பயிற்சி செய்துபார்த்து பாடவிதானத்துடன் ஒன்றி விடவேண்டும் இது ஒரு மாணவனை நிச்சயமாக திறமையான நுட்ப அறிவுள்ளவனாக மாற்றும். இம்முறையில் நான் மாணவனாகவும் ஆசிரியராகவும் வெற்றி கண்டிருக்கின்றேன்… கண்டு வருகின்றேன்….

எனது இன்றைய வெற்றகரமான மாணவர் உருவாக்கலின் வெற்றிக்கு முன்னால் இருந்த ஆசிரியர்களை நான் அறிமுகப்படுத்தினால் பலருக்கு இவர்களைத் தெரியாது ஆனாலும் பதிவிற்காக சொல்கின்றேன்…. எனது பாலர் பாடசாலையில் அகரத்தையும் அன்பையும் கற்பித்த செல்வரத்தினம் ஆசிரியை அழகிலும் அன்பிலும் இவரை விஞ்ச யாரும் இல்லை. இடைநிலை வகுப்பில் கண்டிப்பிலும் நுணுக்கங்களை கற்பிப்பதிலும் விஞ்ஞான ஆசிரியை சிவேஸ்வரி. இவரிடமும் கண்டிப்பும் அழகும். பாகுபடுத்திப் பார்காத தன்மையும் இணைந்தே இருந்தன. நடுநிலை வகுப்பில் யாழ் இந்துக்கால்லூரி முத்துக்குமாரசுவாமி ஆசிரியர். இரசாயனத்தை எனக்குள் புகுத்தியவர். ஊதவி, உறுதுணையாக எப்போதும் இருந்தவர். உயர்தர வகுப்பில் ஆறமுகசாமி. இவர் அளவிற்கு திறமையாக கணித பௌதிக ஆசிரியரை நான் காணவே இல்லை. என் உயர்தரவகுப்பு மாணவர.களின் கற்பித்தலுக்கு இவர்கள்தான் குரு என்பேன். பல்கலைக்கழக வாழ்வில் நான் படித்தேன் என்பதை விட பொதுவாழ்வில் அதிக கவனம் செலுத்தினேன் என்றால் மிகையாகாது. ஆனாலும் சிறீதரன்(முறிந்த பனை) தர்மரத்தினம்(கணிதப் பீடத் தலைவர்) முத்துவேல்(கணித வரிவுரையாளர்) இவர்கள் மறக்க முடியாதவர்கள்.

ஆனாலும் என் சிறுவயது வகுப்பில் எனது குடும்பத் தொழிலாக மண்கிண்டும் தொழில் இருந்ததினால் கடைசி வாங்கிற்கு தூக்கி வீசப்பட்ட… தள்ளப்பட்ட… கசப்பான அனுபவங்களை இவ்விடத்தில் பகிர்ந்துதான் ஆகவேண்டும். இதேபோல் உயர்தர வகுப்பில் பாடங்களுக்கு செல்லாமல் விடுதியில் அரை உறக்கத்திலிருந்த என்னையும் தேவலிங்கத்தையும் வகுப்பிற்கு கட்டாயப்படுத்தி அழைத்து பல மாணவர் முன்னிலையிலும் நீங்கள் எல்லாப் பாடங்களிலும் சித்தி பெறமாட்டீர்கள் என்று சபித்து அந்த பௌதிக புத்தக வித்தகரையும் நான் மறப்பேனோ. ஆனாலும் இவர்களின் தள்ளிவைக்கும் அணுகு முறை எனக்குள் வையிராக்கியத்தை ஏற்படுத்தி யாழ் இந்துக்கல்லூரி….. பல்கலைக் கழகம்…. என்று என்னை உயரச் செய்த உந்துதலை இவர்களுக்கு காணிக்கையாக சமர்பிக்கின்றேன்.

எனது ஆசிரியர் கடமையின் வெற்றி நான் தொடர்ந்தும் மாணவனாக இருப்பதிலேயே தங்கியிருப்பதாக உறுதியாக நம்புகின்றேன். அதாவது இன்றும் இன்னமும் நான் கற்பதற்கு தயாராகாவும் கற்றுக் கொண்டும் இருக்கின்றேன் இதில் எனது குறியீட்டாக குறிப்பிடும் ஆசிரியர்கள் பலர் என்னை விட வயதில் குறைந்தவர்கள. இதில் எனது மகனும் மகளும் அடக்கம்;

இந்த அனுபவப் பகிர்வை ஆசிரியர் தினத்தில் ஒரு வரலாற்றுப் போக்கை… சமூகப் பார்வையை ஏற்படுத்தும் நோக்கோடு மட்டும் எழுதியிருக்கின்றேன் இதில் என்னை முன்னிலைப்படுத்தும் எந்த நோக்கமும் எனக்கு இருக்கவில்லை. இந்தக்பதிவிற்கான விமரசனங்கள் உள்ளீடகளை எனது நண்பர்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன்.

1978 கிழக்குமாகாணத்தில் ஏற்பட்ட புயல் பற்றிய அடிக்குறிப்பு தகவலுக்காக:

The 1978 cyclone in Eastern province (JTWC designation: 04B) was the strongest tropical cyclone to strike Eastern province of Sri Lanka on November 23, 1978.[1] The cyclone was started at local time 6.30 pm and continued to next day morning and damaged the areas from Trincomalee to Arugam bay. In eastern province, Akkaraipattu, Ninthavur, Kalmunai, Pattiruppu, Chettipalayam, Thalankudah, Kattankudy, Batticaloa, Eravur and Kalkudah were most affected area due to cyclone’s vortex zone.[2]

Due to the cyclone, approximately a thousand persons died, more than one million people affected, nearly 250,000 houses partially and completely damaged, 240 school buildings damaged, one fifth of Batticaloa’s fishing fleet smashed up, 9 of the 11 paddy stores destroyed, 90 percent of the coconut plantation (28,000 odd acres of coconut plantation) in the Batticaloa district destroyed. Government had spent over LKR 600 million in order to response to the disaster. A post cyclone survey found that approximately 130 miles of electric cables were laid, so many religious building were destroyed or damaged. The cyclone resulted to people suffer without electricity, water and debris of fallen buildings, trees, etc.