தேர்தலில் ரஷ்யாவின் பங்கு: மேலும் சிக்கலடைகிறது ட்ரம்ப்பின் நிலைமை

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவாக ரஷ்யாவின் அரசாங்கம் செயற்பட்டது என்ற அறிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியல் களம், மேலும் சிக்கலடைந்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவான முடிவைப் பெறுவதற்காகவே, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கு எதிராக, ரஷ்யாவின் அரசாங்கத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் செயற்பட்டனர் என, அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள், முடிவுக்கு வந்திருந்தன.

இதைத் தொடர்ந்து தற்போது, அது தொடர்பில் காங்கிரஸில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென, செனட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில், ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய செனட்டர்களும் இணைந்துள்ளமையே, இந்நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளது.

ஜனாதிபதிப் பதவி, செனட், பிரதிநிதிகள் சபை ஆகிய மூன்றிலுமே, குடியரசுக் கட்சியே பெரும்பான்மையைக் கொண்டுள்ளமையால், ட்ரம்ப்பின் ஜனாதிபதிப் பதவி, இலகுவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் முன்னணி செனட்டர்களான ஜோன் மக்கெய்ன், லின்ட்ஸி கிரஹாம் ஆகியோர், இவ்விடயம் தொடர்பில் தங்களது கரிசனையை வெளிப்படுத்தியிருந்தனர். தற்போது, செனட்டின் பெரும்பான்மைத் தலைவரான குடியரசுக் கட்சியின் மிற் மக்கொனலும், இவ்விடயம் தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விடயம், கட்சி சார்பில்லாது, நடுநிலையாக அணுகப்பட வேண்டுமென அவர் அறிவித்துள்ளார்.

மக்கொனலின் மனைவி எலைன் சாவோ, ட்ரம்ப்பின் அமைச்சரவையில், போக்குவரத்துச் செயலாளர் பதவிக்குப் பிரேரிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கொனலின் இந்தக் கருத்து, முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதேபோல், காங்கிரஸின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயற்குழுவின் தலைவரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான மைக்கல் மக்கோலும், இவ்விடயத்தில் விசாரணைக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே, இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, புலனாய்வு அமைப்புகளுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமா, உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக காங்கிரஸ் விசாரணைக்கு, வெள்ளை மாளிகையும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாகத் தெரிவுசெய்யும் தேர்தல் பிரதிநிதிகள், அடுத்த ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாகத் தெரிவுசெய்ய, டிசெம்பர் 19ஆம் திகதியே வாக்களிக்கவுள்ளனர்.

538 பேரில் 10 பேர் சேர்ந்த குழுவொன்று, ரஷ்யாவின் தலையீடு என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில், முழுமையாக விளக்கமளிக்க வேண்டுமெனக் கோரியுள்ளனர். இந்த 10 பேரில் ஒருவர் மாத்திரமே, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவராவார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை, ட்ரம்ப் நிராகரித்துள்ளார். “தேர்தல் முடிவுகள் தலைகீழாக இருந்து, நாங்கள் ரஷ்யா/சி.ஐ.ஏ என்ற சாக்குப்போக்கைப் பயன்படுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்ய முடிகிறதா? அது, சதிக் கோட்பாடு என அழைக்கப்பட்டிருக்கும். இதில் சம்பந்தப்பட்ட ஹக்கர்களை நீங்கள் கண்டுபிடித்தாலொழிய, அதை யார் செய்தார்கள் எனக் கண்டுபிடிக்க முடியாது. இவ்விடயம் தொடர்பாக, தேர்தலுக்கு முன்னர் ஏன் கதைக்கப்படவில்லை” என்று அவர் கேள்வியெழுப்பினார். ஆனால், சி.ஐ.ஏ (மத்திய புலனாய்வு முகவராண்மை) என்பது, அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதோடு, தேர்தலுக்கு முன்னரும் கூட, ரஷ்யாவின் தலையீடு தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டிருந்தது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

இந்நிலைமை இவ்வாறிருக்க, ட்ரம்ப்பின் இராஜாங்கச் செயலாளராக, றெக்ஸ் டிலெர்ஸன் நியமிக்கப்படுகின்றமை உறுதியாகியுள்ளது. அப்பதவிக்காகக் கருத்திற்கொள்ளப்பட்ட மிற் றொம்னி, அந்தப் பதவிக்காகத் தெரிவுசெய்யப்பட மாட்டார் என, ட்ரம்ப்பால் அறிவிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, டிலெர்ஸன் தெரிவாகுவார் என, ட்ரம்ப்பின் குழு அறிவித்துள்ளது.

ஆனால், ரஷ்யாவோடு நெருங்கிய உறவுகளைக் கொண்டவரான டிலெர்ஸனை, செனட் சபை உறுதிப்படுத்துமா என்பது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. இராஜாங்கச் செயலாளர் பதவி உள்ளிட்ட உயர் பதவிகள், செனட்டால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். 100 செனட்டர்களில் 54 பேர், குடியரசுக் கட்சியினர் என்பதால், அவர்களில் ஐந்து பேர், ட்ரம்ப்பின் தெரிவான டிலெர்ஸனை எதிர்த்தால், அவரின் நியமனம் உறுதிப்படுப்படாது. டிலெர்ஸனுக்கு எதிரான கருத்துகளை ஜோன் மக்கெய்ன், மார்க்கோ றூபியோ உள்ளிட்ட முன்னணி செனட்டர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப்புக்கு நிம்மதி

பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு நிம்மதி கிடைக்கும் ஒரு விடயமாக, விஸ்கொன்சின் மாநில மீள் எண்ணிக்கை முடிவுகள் அமைந்துள்ளன. மீள் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்ட இம்மாநிலத்தின் இறுதி முடிவுகள், உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், முன்னர் பெற்றதை விட 131 வாக்குகளை, அவர் அதிகம் பெற்றுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 22,000 வாக்குகள் வித்தியாசத்திலேயே விஸ்கொன்சின் மாநிலத்தை ட்ரம்ப் வெற்றிகொண்டிருந்த நிலையில், பசுமைக் கட்சியின் ஜில் ஸ்டெய்ன் மேற்கொண்ட மீள் எண்ணிக்கைக் கோரிக்கையைத் தொடர்ந்தே, இவ்வாறு மீள எண்ணப்பட்டிருந்தது.