மிகையில் கோர்பச்சோவ்: பேரரசை இழந்த மனிதர்

85 வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார். வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார். மேற்குலகம் ரஷ்யாவின் கோபத்தை தூண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் “துரோகத்தால்” சின்னாபின்னமாகியது என்று தெரிவித்திருக்கிறார்.

மேற்குலகம் ரஷ்யாவின் கோபத்தை தூண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ் , 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் “துரோகத்தால்” சின்னாபின்னமாகியது என்று தெரிவித்திருக்கிறார்.

சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ்கோவில் இருக்கும் பிபிசியின் ஸ்டீவ் ரோசென்பாக்கிற்கு, மிகையில் கோர்பச்சோவ் மிகவும் அரிதான பேட்டி ஒன்றை வழங்கினார்.

இப்போது 85 வயதாகியிருக்கும் மிகையில் கோர்பச்சோவ் உடல் சுகவீன பிரச்சனைகளோடு வாழ்ந்து வருகிறார். ஆனால், அவருடைய நகைச்சுவையுணர்வு அழிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

நாங்கள் சந்தித்தபோது, அவருடைய ஊன்றுகோலை காட்டி, “பாருங்கள். இப்போது நடப்பதற்கு மூன்று கால்கள் தேவைப்படுகின்றன” என்று நகைச்சுவையாக சுட்டி காட்டினார்.

உலகமே மாறிய அதாவது சோவியத் வல்லரசு வீழ்ச்சியடைந்த நாளான அந்த தருணத்தை பற்றி பேசுவதற்கு மிகையில் கோர்பச்சோவ் ஒப்பு கொண்டார்.

“சோவியத் ஒன்றியத்திற்கு என்ன நடத்தது என்பது என்னுடைய நாடகம்” என்று கூறிய அவர், “சோவியத் ஒன்றியத்தில் வாழ்ந்த அனைவருக்கும் கூட அது ஒரு பரபரப்பான நாடகம் ” என்றார் கோர்பச்சோவ்.

அதுவொரு ஆட்சிக்கவிழ்ப்பு

1991 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் ரஷ்ய தொலைக்காட்சியின் மாலை செய்திகள் அதிர்ச்சியளித்த அறிவிப்போடு தொடங்கின: “மாலை வணக்கம். செய்திகள். சோவியத் ஒன்றியம் இனி இல்லை….” என்பது தான் அந்த அறிவிப்பாக இருந்தது.

அதற்கு சில நாட்களுக்கு முன்னதாகத்தான், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் உக்ரேன் தலைவர்கள் சோவியத் ஒன்றியத்தை கலைத்துவிட்டு தனிப்பட்ட நாடுகளின் காமன்வெல்த்தை உருவாக்க சந்தித்தனர்.

தற்போது, மற்ற 8 சோவியத் ஒன்றியத்துக்குட்பட்ட குடியரசுகள் அதில் இணைய முடிவு செய்தன.

இந்தக் குடியரசு நாடுகளை ஒன்றாக இணைந்து வைத்திருக்க போராடிக்கொண்டிருந்த சோவியத் ஒன்றியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவை அந்த குடியரசுகள் ஒன்றாக இணைந்து மீறின.

“எங்கள் முதுகுக்குப் பின்னால் துரோகம் இழைக்கப்பட்டிருந்தது. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க அவர்கள் வீட்டையே கொளுத்தி கொண்டிருந்தனர். அந்த முயற்சி அதிகாரத்தை பெறுவதற்காக மட்டுமே.

ஜனநாயக வழிமுறைகள் மூலம் அவர்களால் அதனை பெற முடியவில்லை. எனவே அவர்கள் ஒரு குற்றமிழைத்தனர். அதுவொரு ஆட்சி கவிழ்ப்பு” என்று மிகையில் கோர்பச்சோவ் கூறினார்

1991 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி, கோர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கிரம்பிளினில் கடைசியாக சோவியத் ஒன்றிய கொடி கீழங்கியது.

“நாங்கள் ஓர் உள்நாட்டு போர் தொடங்கும் நிலையில் இருந்தோம். நான் அதனை தவிர்க்க எண்ணினேன்” என்று கோர்பச்சோவ் நினைவு கூர்ந்தார்.

“அணு ஆயுதங்கள் உள்பட அதிக ஆயுதங்கள் உடைய எங்களை போன்ற ஒரு நாட்டில், சமூகத்தில் பிளவு மற்றும் நாட்டில் போராட்டம் என்பது பல மக்களின் இறப்புக்கு வழிகோலியிருக்கும். பேரழிவை உருவாக்கியிருக்கும். அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக, அது நடப்பதை நான் அனுமதிக்க முடியாது. அதிகாரத்தில் இருந்து இறங்கியது என்றுடைய வெற்றி” என்று கோர்பச்சோவ் கூறினார்.

விளாடிமிர் புதின் பற்றி?

தான் மேற்கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தத்தால் ரஷ்ய சமூகம் சுதந்திரம் அடைந்திருக்கிறது என்று தன்னுடைய ராஜினாமா உரையில் கோர்பச்சோவ் உரிமை கொண்டாடினார்.

25 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றைய ரஷ்யாவில் இந்த சுதந்திரத்திற்கு அச்சுறுதல் ஏற்பட்டுள்ளதா? என்று அவரிடம் பிபிசி கேட்டது.

“இந்த வழிமுறை முடியவில்லை. இது பற்றி வெளிப்படையாக நாம் பேச வேண்டும். சுதந்திரம் என்றால் கோபப்படும் மக்கள் சிலரும் உள்ளனர். அவர்கள் இந்த சுதந்திரத்தை விரும்புவதில்லை” என்று அவர் பதிலளித்தார்.

நீங்கள் விளாடிமிர் புத்தினை குறிப்பிடுகிறீர்களா? என்று பிபிசி செய்தியாளர் அவரிடம் கேட்டார்.

நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் தான் ஊகிக்க வேண்டும். இந்த கேள்விக்கு நீங்களே பதில் சொல்ல விட்டு விடுகிறேன்” என்று பதில் வந்தது.

விளாமிர் புத்தினை பற்றி நேரடியாக விமர்சிப்பதை கோர்பச்சோவ் தவிர்த்தார். ஆனால், அவரும், விளாடிமிர் புத்தினும் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பது குறித்து அவர் சூசகமாக்க் கோடிட்டுக் காட்டினார்.

“புதின் உங்களுடைய அறிவுரையை எப்போதாவது கேட்பதுண்டா?” என்று நான் அவரை கேட்டேன்.

“அவருக்கு அனைத்தும் ஏற்கெனவே தெரியும்” என்று பதிலளித்த கோர்பச்சோவ், , “ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட முறைப்படி காரியங்களை நிறைவேற்றுகிறர்கள் -அதுதான் வாழ்க்கை“ என்கிறார்.

மேற்குலகின் “ஆத்திரமூட்டல்”

முன்னாள் சோவியத் அதிபர் கோர்பச்சோவ், நவீன ரஷ்யாவை கடுமையாக விமர்சித்தார். “அதிகாரிகள், நாட்டின் செல்வங்களை திருடி பெருநிறுவனங்களை உருவாக்க தொடங்கினர்” என்று கோர்பச்சோவ் கூறினார்.

அதிபர் புதினின் மிகவும் நெருங்கிய தோழர்களில் ஒருவரான ரோஸ்நெப்ட் எண்ணெய் நிறுவனத்தின் தலைவரான இகோர் செச்சின், நாட்டின் விவகாரங்களில் தலையிட முயல்வதாக கோர்பச்சோவ் விமர்சனம் செய்கிறார்.

“ரஷ்யாவை ஆத்திரமூட்டுவதாக” குற்றஞ்சாட்டி மேற்குலகையும் கோர்பச்சோவ் தாக்குகிறார்.

“புதினுக்கு கெட்டப்பெயரை உருவாக்கி அவரை வெளியேற்ற வேண்டும் என்பது மேற்குலக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை. அதில் நீங்களும் அடங்குகிறீர்கள். உடல் ரீதியாக அல்ல. அவர் வெளியேறுவதை உறுதிசெய்து கொள்வது. ஆனால், இதன் விளைவாக புதினின் பிரபலம் இங்கு 86 சதவீதமாக உள்ளது. விரைவில் இது 120 சதவீதமாக மாறும்” என்று அவரிடம் இருந்து பதில் வருகிறது.

அமெரிக்க அதிபர் ரோனால்ட் ரீகனோடு மிகையில் கார்ப்ச்சோவ் காட்டிய நல்ல உறவு தான் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர வழிகாட்டியது,

எனவே, வெள்ளை மாளிகைக்கு வரயிருக்கும் புதிய அதிபரை பற்றி மிகையில் கார்ப்ச்சோவ் என்ன நினைக்கிறார்? அவர் எப்போதாவது டொனால்ட் டிரம்பை பார்த்தது உண்டா?

“நான் அவர் கட்டியெழுப்பிய உயரமான கட்டடங்களை பாத்திருக்கிறேன். அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், அவருடைய பார்வைகளையும், கொள்கைகளையும் பற்றி தீர்ப்பளிக்க முடியாது” என்று கோர்பச்சோவ் கூறினார்.

“ஆனால், அதுவொரு சுவாரஸ்யமான தருணம். ரஷ்யாவில் நான் உள்பட ஜனநாயக கட்சிதான் அமெரிக்காவில் வெற்றிபெறும் என்று அனைவரும் எண்ணினோம். என்றாலும் நான் அதனை வெளியில் சொல்லவில்லை” என்கிறார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கியவர் என்றும், ஜெர்மனி ஒன்றிணைய அனுமதித்தவர் என்றும் கோர்பச்சோவ் மேற்குலகில் பலர் கதாநாயகனாக பார்க்கின்றனர். .

ஆனால், தாயகத்திலுள்ள பலரும் அவரை பேரரசை இழந்த தலைவராக பார்க்கின்றனர்.

மிகையில் கார்ப்ச்சோவ் – முக்கிய தேதிகள்

1931 – ரஷ்யாவின் தெற்கில் ஸ்டாவ்ரோபோல் என்ற இடத்தில் பிரிவோல்யே கிராமத்தில் பிறப்பு.

1955 – மாஸ்கோ பல்கலைக்கழக சட்ட கல்லூரியில் பட்டம். கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்.

1970 – ஸ்டாவ்ரோபோல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலர்.

1980 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் போலிட்பீரோவின் முழு உறுப்பினர்.

1985 – கம்யூனிஸ்ட் கட்சியின் போலிட்பீரோவின் பொது செயலராக தேர்வு

1987 – 1989 – திறப்பு மற்றும் சீர்திருத்தம் என்று அழைக்கப்படுகின்ற மறுகட்டமைப்பு திருத்தங்களை உட்புகுத்துதல்

1987 – அமெரிக்காவோடு முக்கிய அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து

1990 – 1989 ஆம் ஆண்டு பெர்லின் சுவர் இடிப்புக்கு, பிறகு ஜெர்மனி ஒன்றாக இணைவதற்கு ஒப்பு கொள்ளுதல்

1991 – சோவியத் கடும்போக்காளர்களால் ஆட்சிக் கவிழ்ப்பில் கைதானார். டிசம்பரில் பதவியில் இருந்து ராஜினாமா.

சேர்ந்து பாடப்படும் சோவியத்

“சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்கு நீங்கள் பொறுப்பேற்று கொள்கிறீர்களா?” என்று நான் அவரை கேட்டேன்.

“நான் என்ன சாதிக்க வேண்டும் என்று ஆரம்பித்தேன். உண்மையில் என்ன செய்தேன் என்று மக்கள் போதுமான அளவு புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் என்னை மிகவும் எரிச்சலடைய செய்கிறது” என்று மிகையில் கார்ப்ச்சோவ் கூறுகிறார்.

நாட்டுக்கும், உலகத்திற்கும் நான் மேற்கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தமானது, ஒத்துழைப்பிற்கும், அமைதிக்கும் பாதையை திறந்தது, அது முடியும் வரை அதனை என்னால் பார்க்க முடியவில்லை” என்கிறார்.

பேட்டியின் முடிவில், மிகையில் கார்ப்ச்சோவும் நானும் அவருடைய பியானோவுக்கு அருகில் சென்றோம்.

நான் அதனை இசைக்க சில பிரபல சோவியத் பாடல்களை கார்ப்ச்சோவ் பாடினார்.

இந்த பாடல்கள் மிகவும் கேட்கப்படுபவையாகவும், அவரது இந்த பேட்டிக்கு பிறகு சிறந்த பாரம்பரியமாக மாறியுள்ளன.

கட்டமைப்பு சீர்திருத்தம் மூலம் உலகையே மாற்றிய மனிதன் உணர்ச்சி மிகுந்த மெல்லிய குரலில் பாடுகிறார்.

“கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே கண்மூடி திறக்கும் தருணமே. அந்த நேரத்தையே நாம் வாழ்க்கை என்கிறோம்” என்று அவர் பாடுகிறார்.

சோவியத் ஒன்றியம் கடந்தது கண்ணை மூடி திறக்கும் குறுகிய தருணம் தான். ரோமை மற்றும் ஓட்டமான் பேரரசுகளை ஒப்பிடும்போது 70 ஆண்டுகள் என்பது எந்த மூலைக்கு?

ஆனால், நாடுகள் குடியரசுகளாக பிளவுண்டதற்கு, சோவியத் பேரரசை அழித்தமைக்கு, மிகையில் கார்ப்ச்சோவை குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது என்று பிபிசி செய்தியாளர் கருதுகிறார்.

சோவியத் ஒன்றியம் தொடக்கத்தில் இருந்தே பொருளாதார, அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியில் தவறாக இருந்திருக்கலாம். ஒருவேளை சிறிது காலம் வல்லரசான இருக்கவே தோன்றியதாக இருக்கலாம்.

(BBC Tamil)