இலக்கிய ஆய்வுக்குப் புதிய பாதை அமைத்தவர்!

கலாநிதி கைலாசபதி பற்றி அவரது ஆசிரியரின் பசுமை நினைவுகள் இவை. இலங்கையில் உள்ள இந்துக் கல்லூரியில் கைலாசபதி பயின்றபோது அவருக்கு ஆசிரியராக விளங்கிய மு.கார்த்திகேசன் என்பார் தனது மாணவருக்கு இந்தத் தகுதிச் சான்றிதழை வழங்கியிருக்கிறார். இந்த ஆசிரியர்தான் கைலாசபதிக்கு மார்க்சிய – லெனினியத்தை அறிமுகம் செய்து வைத்தார். இதனைச் சிக்கெனப் பற்றிக் கொண்டு தனது சிந்தனையை இறுதிவரை மார்க்சிய – லெனினியப் பாதையில் செலுத்தினார்.

பெற்றோர்களின் இருத்தல் காரணமாக இவர் பிறந்தது மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில். 05.04.1933ல் அங்கு பிறந்த கைலாசபதி தனது தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்றார். இவரது தந்தையார் கனகசபாபதி இங்கேயொரு அலுவலராகப் பணிபுரிந்தார். பின்னர் இவர்களது குடும்பம் இலங்கைக்குப் புலம்பெயர்ந்தது. பின்னர் உயர் கல்வி கற்றது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு ராயல் கல்லூரியிலும்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டம் பெற்ற இவர், பின்னர் இலங்கையிலிருந்து வெளிவந்த ‘தினகரன்’ இதழின் உதவி ஆசிரியராகப் (1959 – 1961) பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும் (1961 -62), பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் தமிழ் – இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் செயல்பட்டார். இந்தக் காலகட்டத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்-வளாகத் தலைவராக இருந்த கைலாசபதி, பின்னர் இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாறியபோது அதன் துணைவேந்தராகப் பதவியேற்று 3 ஆண்டுகள் (1974 – 77) பணியாற்றினார்.

இலங்கையில் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள சுயோ வோ பல்கலைக்கழகத்திலும் (1977), கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் (1978) சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மீண்டும் இலங்கைக்குத் திரும்பியபோது, யாழ் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராக (1978 – 1982) செயல்பட்டார்.

இந்துக் கல்லூரி ஆசிரியர் கார்த்திகேசன் மூலம் கைலாசபதியின் மனதில் ஊன்றப்பட்ட மார்க்சிய சிந்தனை விதை அடுத்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து பர்மிங்ஹாம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனால் விருட்சமாக வளர்க்கப்பட்டது.

ஜார்ஜ் தாம்சன் சிறந்த மார்க்சியவாதி, மாவோ கருத்துக்களில் அக்கறையுள்ளவர், மார்க்சிய – லெனினிய அறிஞர்களோடு சேர்ந்து ‘சீன ஆய்வுக்குழு’ அமைத்து சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இவரது தாக்கத்தாலோ என்னவோ எட்கார் ஸ்நோ (அமெரிக்க எழுத்தாளர்) எழுதிய ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ எனும் நூல் கைலாசபதியின் மனதைக் கவர்ந்தது. சீன அரசின் அழைப்பின் பேரில் 1979 –ல் சீனப்பயணம் மேற்கொண்டு ‘மக்கள் சீனம் – காட்சியும் கருத்தும்’ என்ற நூலை எழுதும் அளவுக்கு சீனாவுடனான அவரது உறவு நெருக்கமாக இருந்தது.

மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளை இலக்கிய ஆய்வுக்குப் பயன்படுத்தியதோடு நில்லாமல் அரசியல் இயக்கத்திலும் ஈடுபட்டார். மற்ற பிற அறிஞர்களைப் போலவே கைலாசபதியும் புனை பெயர்களில் கட்டுரைகள் எழுதினார். ஜனமகன், உதயன், அம்பலத்தான், அம்பலத்தாடி, அபேதன் என்ற புனைபெயர்களில் பல இதழ்களில் இவர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இலக்கிய உலகில் முற்போக்கு – பிற்போக்கு என்ற முரண் எழுந்த காலத்தில் முற்போக்கு கலை இலக்கிய அணியை பலப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டது. இதன் தலைவராகவும் கைலாசபதி செயல்பட்டுள்ளார்.
கைலாசபதியின் ஆய்வு மார்க்சிய சமூகவியலை ஆதாரமாகக் கொண்டதாகும். இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் இரு கண்களாக இருந்து அவரை வழிநடத்தின.

‘சமுதாயத்தில் காணப்படும் முரண்பாடுகளையும் துன்ப துயரங்களையும் போராட்டங்களையும் உதிரியான தனி மனிதர்களின் பிரச்சினைளாக மாத்திரம் கண்டுகாட்டாமல் அவற்றை வர்க்கங்களுக்கு இடையே நிகழும் போராட்டத்தின் வெளிப்பாடுகளாகக் காண்பது இன்றியமையாததாகிறது’ என்பது அவரது ஆய்வுகளின் மையக்கருத்தாக அமைந்தது.

பண்டைத் தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்தது போலவே சமகால இலக்கியங்களையும் ஆய்வு செய்தார். சமய இலக்கியங்களில் உட்பொதிந்து கிடக்கும் சமூக நிலைகளையும் அவர் வெளிக்கொணர்ந்து காட்டினார்.

பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் வீரயுகப் பாடல்கள், ஒப்பியல் இலக்கியம், அடியும் முடியும், இலக்கியமும் திறனாய்வும், கவிதை நயம், தமிழ் நாவல் இலக்கியம், சமூகவியலும் இலக்கியமும், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், திறனாய்வுப் பிரச்சனைகள், இலக்கியச் சிந்தனைகள், இரு மகாகவிகள் போன்ற படைப்புகள் மூலம் இவரது பன்முகப் பார்வையையும் ஆய்வுகளையும் உணர்ந்துகொள்ள முடியும்.

கோலாலம்பூரில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்டம் பெற்ற கைலாசபதி, தமிழ் இலக்கியங்களுக்குப் புதிய வெளிச்சம் தந்தவர். வெறும் போற்றியுரைகளாக இருந்த இலக்கிய ஆய்வுத்தளத்தை மார்க்சிய நிலைக்கு உயர்த்திய பெருமை அவரைச் சாரும்.

மார்க்சியக் கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியங்களை மேலும் மேலும் ஆய்வு செய்து தமிழுக்குப் புதிய பர்மாணத்தை அளிக்க விரும்பிய அந்தச் சிந்தனையாளர், 50 ஆண்டுகள் கூட முழுமையாக வாழாத நிலையில் 49வது வயதில் 1982ம் ஆண்டு டிசம்பர் 6 அன்று மறைந்தார்.

மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் கைலாசபதி, தனக்கு வழிகாட்டிவர்களை ‘ஈழத்து இலக்கிய முன்னோடிகள்’ என்ற நூலில் மறக்காமல் பதிவு செய்த நன்றி மறவா மனிதர்.

(இந்தக் கட்டுரை இராம. சுந்தரம் எழுதிய ‘கலாநிதி கைலாசபதி’ என்ற நூலில் காணப்பட்ட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டதாகும்)