என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 6

(மாதவன் சஞ்சயன்)

இரவு உண்ட இலவச பழங்களின் அனுசரணையில் வயிறு காலை 5 மணிக்கே அலாரம் அடித்தது. கூடவே அப்பத்துடன் உண்ட வெங்காய/மிளகாய் சம்பல் தன் பங்களிப்பை செய்யத் தொடங்கியது. இணைந்த குளியல் மற்றும் வசதி கொண்ட தனி அறையில் தங்கியதால், அடுத்தவரை சிரமப் படுத்தாமல் காலை நடவடிக்கைகள் முடித்து கீழ் மாடியில் இருந்த உணவகம் சென்றேன். 6 மணிக்கே இட்லி வடை சாம்பார் என அசத்தினார், அதனை அண்மையில் குத்தகை எடுத்த கண்டி தமிழர். என்னதான் தமிழருடன் முரண்பாடு வந்தாலும் சிங்களவருக்கு, இட்லி வடை தோசை சாம்பாறு என்றால் அலாதிப் பிரியம் என்பதை அறிந்து கொண்ட அவரின் உணவகத்துக்கு, அயல் விடுதிகளில் தங்குபவர்கள் கூட உணவுக்காக, அதிகாலையே வருவதைக் கண்டேன்.


1977 ல் நடந்த இனக் கலவரம் என் நினைவில் வந்தது. பனையில் அடித்தால் தென்னையில் நெறி போடுவது போல, யாழ் கல்லூரி ஒன்றில் நடந்த களியாட்ட நிகழ்வில் குழப்பம் செய்த பொலிசாரை இளைஞர்கள் தாக்க, அது பெரும் கலவரமாக தெற்கில் தொடர்ந்து முழு நாட்டுக்கும் பரவியது. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் பூசாரி என்பது போல கொழும்பு கோட்டை, பொரளை, தெமட்டகொடை, வெள்ளவத்தை, தெகிவளை என எங்கும் நீக்கமற இருந்த இருந்த அம்பாள் கபே, லக்சுமி விலாஸ், விஜயா கபே உட்பட அனைத்து சைவ உணவங்களின் மேலும் தாக்குதல் நடத்திய துஷ்டர்கள் மறுநாள் மது மயக்கம் தீர்ந்ததும் வயிறு பசிக்க வழமைபோல் மலிவான தோசை சாம்பாறு உண்ணும் உணவகம் நோக்கி சென்றால், அவை மூடிக் கிடந்தன.

இன வெறியுடன் மது வெறியும் அவர்களை அந்த மதியற்ற செயலை செய்வித்ததால் வயிற்று பசியுடன் அன்று அலைந்தவர்கள், இன்றும் மாறாமல் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் தங்கள் சண்டித்தனத்தை தொடரவே காத்திருக்கின்றனர். சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நாடு ஸ்ரீலங்கா. இன்று நிலைமைகள் சுமுகமாக தெரிந்தாலும் நல்லிணக்கம் என்பது நெடுந்தூர பயணம் என்றுதான் தென்படுகிறது. மௌனமாக இருக்கும் வரை எமக்கு எல்லாம் சுமுகமாக நடப்பது போல தெரிகிறது. எமக்கு உரித்தானதை பற்றி பேசினாலோ, திருப்பி செய்ய முற்பட்டாலோ வேண்டத்தகாத பிரச்சனைகளுக்கு, நாம் முகம் கொடுக்க வேண்டிவரும் என்பதை கதிரமலையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புத்த பிக்குவின் செயல் எனக்கு சொல்லாமல் சொல்லிற்று.

1970பதுகளில் வேலை கிடைத்த புதிதில் குடும்பத்தாருடன் சென்ற போது இருந்த ராமகிருஸ்ண மடத்தை சிறீமா அரசுடமை ஆக்கினார். பின் புனித நகர் என பிரகடனப்படுத்தி உள்ளே இருந்த தமிழர்களின் அன்னதான மடங்களை பிரேமதாசா வெளியேற்றினார். அன்று கதிரமலை உச்சியில் எங்கிருந்து பார்த்தாலும் இரவில் ஒளி வீசித் தெரியும் முருகனின் வேலை அவன் உறையும் கதிரமலையை கைப்பற்றிய புத்தபிக்கு அப்புறப் படுத்திவிட்டார். வடிவேலு ஒரு படத்தில் கிணற்றை காணோம், கிணற்றை காணோம் என தேடியது போல கதிரமலை ஏறும் அடியவர்கள் முருகன் வேலை தேடிக் களைத்து, பல தடவைகள் புதிதாக ஒரு வேலை பிரதிஸ்டை செய்ய முயன்றும், அதனை சன்னதமாடி தடுத்துவிட்டார் புத்தபிக்கு. இன்று எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் பெரிய டகோபா கட்டப்படுகிறது.

கதிர மலையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த புத்தபிக்கு, 2ஆயிரம் படியேற சிரமப்படும் பக்தர்கள், மலை உச்சி வரை வாகனத்தில் பயணிக்க பாதை அமைத்து, தனி நபருக்கு 350 ரூபா கட்டணம் அறவிறடுகிறார். அதனால் என் போன்ற முக்கி முக்கி மலையேற முடியாத, கால் மூட்டு வலி பக்தர்களின்
புண்ணியத்தில் பங்கு கொள்கிறார். நான் போனபோது என் வயதொத்த எவரும் மலையடி வாரத்தில் இல்லை. தனியே நான் மட்டும் பயணிக்க 2450 ரூபா கொடுக்க வேண்டும் என அறிந்ததும் கீழே நின்றவாறு வேலவனுக்கு ஒரு அரோகரா போட்டு திரும்பலாம் என முடிவேடுத்த போது என்னை ரட்சிக்க என முடிவெடுத்த முருகன், 6 புலம்பெயர் தமிழர் உருவில் வானில் வந்து இறங்கினான், அந்த அறுரை கண்டதும் அப்பனே முருகா என முணு முணுத்தேன்.

என்றாலும் பிரம்மனை ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தம் கேட்டு சோதித்த முருகன் என்னை மட்டும் விட்டு வைப்பான? சோதனை வந்தது அதில் வந்த பெண் வடிவில். வாருங்கள் மலை ஏறுவோம் என அவ முன்னே வர, பின்னால் பாந்திப் பாந்தி வயதான நால்வர் வந்தனர். ஒரு குமர் மான் குட்டி மட்டும் துள்ளிக் குதித்து தாயை முந்தி ஓடியது. நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த புலம் பெயர் உறவுகள் செயல் என நொந்த போது, பாந்திப் பாந்தி நடந்து வந்த ஒருவர் மலைப் படிகள் சீராக உள்ளதா? எனக் கேட்டதும், என் நண்டு மூளை மேலேறும் நண்டை கீழ் நண்டு இழுக்கும் சுய நல செயலை செய்தது. அண்மையில் பெய்த மழையில் அரைவாசி படிக் கட்டுகள் சேதமாகி விட்டன, கூடவே குரங்க கூட்டம் தொல்லை கொடுக்கும், நேற்றுக் கூட தேங்காய் பாதியுடன் வந்தவரை குரங்குகள் கடித்ததாம் என்றேன்.

சத்தமாக நான் சொன்னதை கேட்ட குமரி மான் ஓட்டத்தை நிறுத்தி பின்னோக்கி வந்து, அம்மா வாங்கோ வாகனத்தில் போவோம் என்று சொன்ன சொல் என் காதில் தேனாக பாய்ந்தது. ஆட்கள் சேர்ந்ததால் தலா 350 ரூபா கட்டணத்தில் வாகனம் மலை ஏறியது. சீரான பதை இல்லை என்பதால் பயணம் சொகுசாக இருக்க வில்லை. குலுக்கிய குலுக்கில் காலையில் குடித்த கோப்பி வெளியேற எத்தனித்தது. மலை வளைவுகளில் சுழட்டி வெட்டும்போது இந்தப்பக்கம் இருப்பவர் எதிர்ப்பக்கம் இருப்பவர் மடிக்கு இடம் மாறும் நிலை. எனக்கு அந்தநாள் நெல்லியடி-கொடிகாமம் தட்டி வான் பயணம் நினைவில் வந்தது. சவளற் லொறியை மரப்பலகை கொண்டு தட்டி வானாக மாற்றி வடமராட்சியை தென்மராட்சியுடன் இணைத்த பெருமை அதற்கு தான் சேரும்.

10 நிமிட பயண முடிவில் முருகன் திரை தரிசனம் கிடைத்தது. ஐயர் திரைக்கு பின் சென்று உள்ளே இருக்கும் முருககன் சிலைக்கு பூசை செய்து பின்னர் வெளியே வந்து திரைக்கு ஆலாத்தி காட்டி தொட்டுக் கும்பிடத் தந்தார். மலை பூராகவும் முருகனுக்கு பாதுகாவலாக ஆஞ்சநேயர் ஆட்சி. கூட்டமாக ஓடித்திரியும் குரங்குப்படை எந்த நேரமும் எம் கையில் இருப்பதை பறிப்பதற்கு தயாராய் திரிகின்றன. விசயம் புரியாமல் தன்னை செல்பி எடுக்க சென்ற மான்குட்டி, தாய் குறுக்கே தடியுடன் பாய்ந்து போனதால் குரங்குகளிடம் தப்பியது. இல்லை என்றால் அவவின் அப்பிள் போணில் அவை செல்பி எடுத்து அப்லோட் பண்ண, அதற்கும் எம்மவர் லைக்ஸ் போட்டிருப்பர். முருகன் மலையையும் செல்லிட போசி சிக்னல் கோபுரம் விட்டுவைக்க வில்லை.

கதிரமலையில் நிற்பதாக மனைவிக்கு செல் பேசியில் சொல்ல ஏனப்பா ஏறினனிங்கள், இறங்கேக்க கம்பிய பிடிச்சுக்கொண்டு கவனமாய் இறங்குங்கோ எண்டவவிடம், வாகனத்தில் வந்ததை கூற, அப்ப கீழ வந்தோண்ண எனக்கு கோல் எடுங்கோ என்டா. மனிசிக்கு உதயன் பேப்பரில கதிரமலை வாகனம் 1000 அடி பள்ளத்தில் பாய்ந்தது, பயணிகளை தேடி மீட்பு அணி விரைவு எண்டு செய்தி வரலாம் எண்ட பயம். கீழ வந்திட்டன் எண்டு நான் சொல்ல அவ சொன்னா என்ர வைரவர் காத்துப் போட்டார் வரேக்க கழுதொதல் மறக்காம வாங்கி வாங்கோ எண்டு. அப்ப வைரவரிட்ட எனக்காக நேத்தி வைச்சது அவ கழுதொதல் தின்னத் தான். 65 கடந்தால் அநேகமான பென்சன் எடுக்கிறவையின்ர வீட்டில நடக்கிற கூத்து இது. நான் மேல போனால் பென்சனுக்கு உடன எழுதி கொடுக்கத்தான், கீழ வந்த உடன சொல்லச் சொன்னவ.

ஊரில் வெட்டி முறிக்க எதுவும் இல்லாததால், நாட்டில் ஏற்பட்ட அரசாட்சி மாற்றம் பற்றி மக்களின் மனநிலை அறியவும், பழைய நண்பர்களை சந்தித்து இளமை நினைவுகளை பகிரவும் திஸ்ஸமகராம சென்று, A2 வழித்தடம் ஊடாக ஹப்புத்தளை பண்டாரவளை நுவரேலியா என மலையக காட்சிகளை ரசித்து, ஹற்றன் கண்டி ஊடாக மட்டக்களப்பு திருமலை கன்னியா என நீண்ட என் பயணம், வடபுலத்தில் முற்றுப்பெறும் வரை நான் சந்தித்த நண்பர்கள் கிடைத்த நல்ல/கெட்ட அனுபவங்கள் பற்றி இன்னொரு தொடரில் எழுதுவேன். பல புலம் பெயர் நண்பர்கள் சில உறவுகள் புண்ணியத்தில், பல நாடுகளை பார்த்திருக்கிறேன். ஆனால் சில மணி நேரத்தில் பல விதமான இயற்கை சூழலுக்கு மாறக் கூடியது, நான் வாழும் நாடு என்ற பெருமை எனக்கு உண்டு. இலங்கை என்ற இந்து சமுத்திரத்தின் முத்தை இனவாத அரசியல், ஸ்ரீலங்கா என மாற்றியதால் சிந்தப்பட்ட ரத்தம் தான் இன்றைய அவல நிலையா?.
மாதவன் சஞ்சயன்