விசித்திரக் கைதுகளும் மரண தண்டனையும்

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்றதோர் அபிப்பிராயம் தலைதூக்கி, சிறிது சிறிதாக மறைந்து போகும் நிலையைக் காணக்கூடியதாக இருக்கிறது. கொட்டதெனியாவ என்ற இடத்தில், ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உற்படுத்திக் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த அபிப்பிராயம் இம்முறை தலைதூக்கியது. இதற்கு முன்னரும் இதுபோன்ற படுபாதகச் செயல்கள் இடம்பெற்ற போதும், இதேபோல் குற்றவாளிகள் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் தலைதூக்கியது. பின்னர் சில நாட்களில் அது மாயமாய் மறைந்துவிட்டது.

பெரும்பான்மை சமூகத்தில் இடம்பெறும் இதுபோன்ற சம்பவங்களின் போதே பெரும்பாலும் இதுபோன்ற சமூகக் கலந்துரையாடல்கள் உருவாகின்றன. அண்மையில், புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவி இதேபோன்று கொல்லப்பட்ட போதும் அதன் பின்னர் கிளிநொச்சியில் ஒரு மூன்று வயது சிறுமி இதேபோல் கொல்லப்பட்ட போதும் அவற்றுக்கு எதிராக வடக்கிலும் தெற்கிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. தூக்குத் தண்டனை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து சமூகக் கலந்துரையாடலாக மாறவில்லை.

சமூகக் கலந்துரையாடல்களை உருவாக்குவதில் சிங்கள ஊடகங்கள் அதிக பங்களிப்பை வழங்குகின்றனவா அல்லது வடக்கில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறும் போது, தெற்கிலும் அவற்றுக்கு எதிராக எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற போதும் அது சமூகக் கலந்துரையாடலை தூண்டிவிடும் அளவுக்கு இல்லை என்பதை இது காட்டுகின்றதா என்பது தனியாக ஆராய வேண்டிய ஒரு விடயமாகும்.

கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர, இதுபோன்ற குற்றச் செயல்களை புரிவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒத்தி வைக்கும் வேளை பிரேரணையொன்றைக் கொண்டு வந்து அது விவாதிக்கப்பட்டது.

ஒத்திவைக்கும் வேளை பிரேரணைகள் விவாதிக்கப்படுமேயொழிய, அவை நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்படுவதில்லை. எனவே, இது போன்ற பிரேரணைகள் சமூக அபிப்பிராயத்தை வளர்க்க உதவுமேயல்லாது வேறு பயனைத் தராது.

சேயாவின் படுகொலையையடுத்து, மரண தண்டனை மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வரும் போது, அதனை ஊக்குவிப்பதைப் போல் நாடாளுமன்றம் இணக்கம் தெரிவிப்பதாக இருந்தால், தாம் மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்ற உத்தரவிடத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். இப்போது அந்த ஆலோசனையைப் பற்றி, குறிப்பாக சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், இப்போது மரண தண்டனையை மீண்டும் அமுலாக்க வேண்டும் என்போரின் குரல் தளர்ந்து, அது கூடாது என்ற குரல் பலம்பெற்று வருகிறது.

1976ஆம் ஆண்டு வரை இலங்கையில் நீதிமன்றங்கள் மரண தண்டனை வழங்கியது போலவே, சிறைச்சாலை அதிகாரிகள் அவற்றை நிறைவேற்றியும் வந்தார்கள். ஆனால், அதன் பின்னர் நீதிமன்றங்கள் மரண தண்டனையை வழங்கித் தீர்ப்பு வழங்கிய போதும் ஜனாதிபதிகள் அதற்கான அங்கிகாரத்தை வழங்குவதில்லை. எனவே, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை. 1976ஆம் ஆண்டு வில்லியம் கொபல்லாவயே பெயரளவிலான ஜனாதிபதியாக இருந்தார். அதன் பின்னர் பதவிக்கு வந்த நிறைவேற்று ஜனாதிபதிகளும் மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கவில்லை.

உலகில் 139 நாடுகள் மரண தண்டனையை இரத்துச் செய்துள்ளன. இலங்கை உட்பட 33 நாடுகளில் மரண தண்டனை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உட்பட 57 நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இலங்கையில் இப்போது இந்த விடயம் ஆராயப்பட்டு வருவது இலங்கை அரசாங்கத்துக்கு அவ்வளவு நல்லதல்ல. ஏனெனில், இது மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்து வரும் ஒரு சந்தர்ப்பமாகும். இலங்கையில் போர்க்; குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரேரணையொன்றும் நிறைவேற்றப்பட்டு தாம் மனித உரிமை விடயத்தில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளதாக உலகுக்கு எடுத்துரைக்க இலங்கை அரசாங்கம் பெரு முயற்சி எடுத்து வருகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில், உலகிலுள்ள மனித உரிமை அமைப்புக்களால் மனித உரிமை மீறலாகக் கருதப்படும் வரும் மரண தண்டனைக்கு சாதகமான கருத்துக்களை அரச தலைவர்கள் வெளியிடுவது அவ்வளவு பொருந்துவதாக அமையாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி கருத்தை வெளியிடும் போது அதனை மறந்துவிட்டார் போலும்.

ஜனாதிபதி அவ்வாறு கூறியிருக்கும் நிலையிலும் ஹிருணிக்காவின் பிரேரணை முன்வைக்கப்பட்ட போதும், இலங்கை அரசாங்கம் தற்போது மரண தண்டனையை நிறைவேற்றும் அங்கிகாரத்தை வழங்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறுவதற்குக் காரணம் இந்த சர்வதேச சூழ்நிலையே.

மரண தண்டனை, உலகெங்குமுள்ள மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகவே இருக்கிறது. உதாரணமாக, ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பிரேரணைகளை சமர்ப்பித்த அமெரிக்க அரசாங்கம், தமது நாட்டில் மரண தண்டனையை இரத்துச் செய்யவில்லை. இலங்கையைப் போல் நிறைவேற்றாமல் இருப்பதும் இல்லை.

மரண தண்டனை குற்றங்களுக்குப் பரிகாரமாகுமா என்பது உலகெங்கும் வெகுவாக விவாதிக்கப்படும் ஒரு விடயமாகும். மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளிலும் கொலைகள் போன்ற குற்றங்கள் குறையவில்லை என சிலர் வாதிடுகின்றனர். சிலர் அதனை ஏற்பதில்லை. தண்டனைகள், குற்றங்களைக் குறைத்த போதிலும் குற்றங்கள் இடம்பெறுவதற்கான அடிப்படைக் காரணங்கள் இருக்கும் வரை அவை இடம்பெறும் என மேலும் பலர் வாதிடுகின்றனர்.

மரண தண்டனையினால் கொலை போன்ற பாரிய குற்றங்கள் முற்றாக ஒழிக்கப்படாததனால், இந்த விவாதம் உலகம் அழியும் வரை எடுத்துச் செல்லக்கூடிய ஒன்றாகும். அதேவேளை, தண்டனையினால் குற்றங்கள் குறைவதில்லை என்று வாதிடுவதாக இருந்தால் ஏனைய தண்டனைகளையும் இரத்துச் செய்யவேண்டியிருக்கும்.

மரண தண்டனையானது குற்றங்களுக்கு பரிகாரமாவதை விட, ஒருவித பழிவாங்கலாகும் எனவும் சிலர் வாதிடுகின்றனர். சிலர் ஒரு சில கொலைகளை நியாயப்படுத்துவதையும் சில கொலைகளை எதிர்த்த போதும் அவற்றைப் பற்றி அவ்வளவு அலட்டிக் கொள்ளாததையும்; சில கொலைகளைக் கண்டு ஆத்திமடைந்து கொலைகாரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுவதையும் பார்க்கும் போது அந்த வாதம் சரியென்றே தோன்றுகிறது. தமது இனத்தை, தமது நாட்டை அல்லது தமது ஊரைச் சேந்தவர்; கொல்லப்பட்டால் மட்டுமே அநேகமாக மக்கள் மரண தண்டனையைக் கோருகிறார்கள். இது பழி வாங்கல் என்ற மன நிலையேயன்றி வேறொன்றும் அல்ல.

உலகெங்கும் நிலவும் ஒரு விந்தையான நிலைமை என்னவென்றால், சட்டபூர்வமாக மரண தண்டனை வழங்குவதை மனித உரிமை மீறலாக கருதும் பல தனி நபர்களும் நாடுகளும், சட்டத்துக்குப் புறம்பான மரண தண்டனையை விரும்புவதும் அவற்றை நிறைவேற்றுவதுமாகும். உதாரணமாக, இலங்கையில் மரண தண்டனைக்கு அங்கிகாரமளிக்காத எத்தனை ஜனாதிபதிகளுக்கு எதிராக சட்டத்துக்;குப் புறம்பான கொலைகளைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன?

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் வடக்கிலும் தெற்கிலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் காணாமற்போனார்கள். காணாமற் போதல் என்பது படையினரால் கொல்லப்படுதலே என்பது பொதுவான அபிப்பிராயமாகும். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில், அதாவது 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் ரிவிரெஸ என்ற இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, சுமார் 600 பேர் யாழ். குடாநாட்டில் மட்டும் காணாமற்போனதாகக் கூறப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தைப் பற்றி இப்போது மனித உரிமை பேரவையே அறிக்கை விட்டுள்ளது. பெரிதாக போர் வெடிக்கு முன், புலிகள், சாதாரண மக்களைப் பாவித்து இராணுவ முகாம்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய 2006ஆம் ஆண்டு, சுமார் 150 பேர் காணாமற்போனதாக அக் காலத்தில் மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் குறிப்பிட்டு இருந்தார். இவை அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பான மரண தண்டனைகளே.

இன்று மனித உரிமைகளைப் பற்றி மிக அக்கறையுடன் கருத்து வெளியிடும் பலர், 1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் பிறா, சிறா மற்றும் பச்சைப் புலி போன்ற ஆயுதக் குழுக்களை அமைத்து அரச உதவியுடன் ஆட்களைக் கடத்தினர், ஆட்களைப் படையினருக்கு பிடித்துக் கொடுத்தனர். அவர்களில் பலர் திரும்பி வரவில்லை.

சர்வதேச நிலைமையைப் பார்த்தாலும் நிலைமை இதுவேயாகும். அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் போரில் இறக்கவில்லை. அமெரிக்கத் தகவல்களில் படியும் அவர் முற்றுகையிடப்பட்டு நிராயுதபாணியாக இருக்கும் போதே சுட்டுக் கொல்லப்பட்டார். மரண தண்டனையை இரத்துச் செய்துள்ள மேற்கத்தேய நாடுகளோ அல்லது மேற்கத்தேய மனித உரிமை அமைப்புக்களோ அதனை எதிர்த்தனவா? பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் படுகொலைகளை இந்த நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் மறைமுகமாகவேனும் அங்கிகரிக்கின்றன. குற்றம் இருந்ததோ இல்லையோ, இவை அவர்களது பார்வையில் மரண தண்டனை என்பதில் சந்தேகமே இல்லை.

இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது சரியென்று ஏற்றுக் கொண்டாலும் அதனை அமுல் செய்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக ஊழல் மலிந்த பொலிஸ் மற்றும் நீதித்துறையொன்றை வைத்துக் கொண்டு மரண தண்டனையை நிறைவேற்ற முற்பட்டால் நிரபராதிகளும்தூக்கிலிடப்படுவர். டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் வெளியிடும் அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் மிகவும் ஊழல் மலிந்த துறைகளாக பொலிஸ், நீதித்துறை மற்றும் கல்வித்துறை காணப்படுகின்றன. குற்றங்களை தடுப்பதில் அக்கறையின்மையிலும் பொலிஸார் பெயர் பெற்றுள்ளனர்.

வித்தியா காணாமற்போனதை பொலிஸாரிடம் முறையிட்ட போது, பொலிஸார் உடனடியாக செயற்படவில்லை என வித்தியாவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். அக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரை விடுவிக்க பொலிஸ் அதிகாரி ஒருவர் நடவடிக்கை எடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

சேயாவின் கொலை பற்றிய விடயம் பொலிஸாரின் நடவடிக்கைகளினால் பெரும் குழப்பமாக இருக்கிறது. எவ்வித காரணமும் இன்றி பாடசாலை மாணவர் ஒருவரை கைது செய்த பொலிஸார், கைது செய்தததன் பின்னர் அவரது மடிக் கணினியில் ஆபாச படங்கள் இருந்ததாகக் கூறினர். ஆனால், அந்த மாணவனைக் கைது செய்த காரணத்தை பொலிஸார் இன்னமும் கூறவில்லை.

அந்த மாணவனோடு மற்றொருவரும் கைது செய்யப்பட்டார். அவர் இக் கொலை இடம்பெற்றதன் பின்னர் தலைமுடி வெட்டியதாக ஒரு காரணம் கூறப்பட்டது. பொலிஸாரின் சில விசாரணைகள் விநோதமானவையாகும்.

1994ஆம் ஆண்டு கொழும்பு தொட்டலங்கவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் கூட்ட மேடையொன்றின் அருகே புலிகளின் தற்கொலைக் குண்டு வெடித்ததில் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான காமினி திஸாநாயக்க உட்பட 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்தத் தற்கொலைக் குண்டுதாரியான பெண்ணின் தலை அங்கு காணப்பட்டது. அந்தப்படம் பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து, அப் பெண்ணையொத்த தமிழ்ப் பெண் ஒருவர் நுவரெலியாவில் இருப்பதாக அறிந்த பொலிஸார் அப் பெண்ணைக் கைது செய்தனர்.

அவ்விரு பெண்களும் தோற்றத்தில் சமமானவர்கள் என்பதனால், குண்டுதாரி நுவரெலியாவில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவரா என்பதைப் பற்றி விசாரிப்பதில் தவறில்லை. அதனை மிக எளிதாகச் செய்யலாம். அந்தக் குடும்பத்தினரிடம் குடும்ப விவரங்களை விசாரிக்கலாம் அல்லது அயலவர்களிடம் விசாரிக்கலாம். குண்டுதாரியுடன் தோற்றத்தில் சமமானவர் என்பதற்காக குறிப்பிட்டு குடும்பத்தில் இந்தப் பெண்ணை மட்டும் கைது செய்வதானது இப் பெண் தான் குண்டுதாரி என

பொலிஸார் சந்தேகித்ததைப் போலாகும். அது எந்த வகையிலும் தர்க்க ரீதியாக அமைவதில்லை. குண்டுதாரி இறந்துவிட்டார். எனவே இவர் அவரல்ல என்பது தெளிவானது.

இதனால் அந்தக் குடும்பமே புலிக் குடும்பமாகியது. அப் பெண்ணின் தந்தை தொழிலில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் தான் பொலிஸார் அப் பெண்ணை விடுதலை செய்தனர். அக் குடும்பம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

நீதியரசராக, சிங்கள பேரின்வாதிகளினதும் கௌரவத்தை வென்ற வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், உயர் நீதிமன்ற நீதியரசராகவிருந்து ஓய்வு பெற்றவுடன் பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியொன்று நீதித்துறையின் நிலைமையை நன்றாக எடுத்துக் காட்டுகிறது. இலங்கையில் நீதிமன்றங்களில் நீதிபதி ஆசனத்தில் இருப்பவரைப் பார்த்து வரப் போகும் தீர்ப்பை முன்கூட்டியே கூறலாம் என அவர் அப்போது கூறியிருந்தார்.

ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கில் தாம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில், தாம் மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூறியிருந்தமை இந்கு குறிப்பிடத்தக்கதாகும். தம் முன் இருக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் தான் அவர் அந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தால் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.

வெளிநாடுகளிலும் சிலர் மீது மரண தண்டனை நிறைவேற்றிப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் அவர்கள் நிரபராதிகளாகியுள்ளமை மனித உரிமை ஆரவலர் சூரியா விக்கிரமசிங்க பல கட்டுரைகளில் எடுத்துக் காட்டியுள்ளார்.எனவே, நீதித் துறையும் பொலிஸும் சீர்த்திருத்தப்படாத வரை மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பயங்கரமானது.

(எம்.எஸ்.எம்.ஐயூப்)