சோவியத் பாடசாலைகளில் மதக் கல்வி போதிக்கப் படவில்லை.

சோவியத் யூனியனில் “தத்துவார்த்தம் ஊட்டப் பட்ட சமூகம்” இருந்ததாக சிலர் கற்பனை செய்து கொள்கிறார்கள். அதாவது, மாணவர்கள், மக்கள் எல்லோரும் “சித்தாந்தத்தால் மூளைச் சலைவை” செய்யப் பட்டனர் என்பது தான் அவர்கள் சொல்ல விரும்புவது. அது சுத்த அபத்தமான கற்பனை. முதலில் சோவியத் யூனியன் மட்டுமல்ல, உலகில் எந்த நாடாக இருந்தாலும் பெரும்பாலான பாடங்கள் பொதுவானவை. வரலாறு, சமூகவியல் போன்ற பாடங்கள் மட்டும் தான் நாட்டுக்கு நாடு மாறுபடும்.

சோவியத் பாடசாலைகளில் மதக் கல்வி போதிக்கப் படவில்லை. அங்கு மதம் ஒரு பாடமாக இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, “எதிக்கா” (ஆங்கிலத்தில்: Ethics) என்ற பாடம் இருந்தது. தமிழில் நன்னெறி என்று கூறலாம். அதாவது மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நல்ல பழக்கங்களையும் கற்பிக்கும் பாடம்.

உயர் வகுப்பு மாணவர்களுக்கு மார்க்சிய லெனினிசம் ஒரு பாடமாக இருந்தது. ஆனால், அது கட்டாய பாடமாக இருக்கமில்லை. பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் போன்ற கற்கைகளை தெரிவு செய்யும் மாணவர்கள் மார்க்சிய லெனினிசத்தை ஒரு பாடமாக கற்பதுண்டு. பொறியியல், மருத்துவம் போன்றவற்றை படிக்கும் மாணவர்கள் அதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.

மேலும், தொழிலாளர்கள், விவசாயிகள், சனிக்கிழமை அல்லது மாலை நேரப் பாடசாலைக்கு செல்ல வேண்டும். மேற்கு ஐரோப்பாவில் “மக்கள் பல்கலைக் கழகம்” என்று சொல்வார்கள். யார் வேண்டுமானாலும் அந்த மாலை நேர வகுப்புகளில் சேர்ந்து விரும்பியவற்றை படிக்கலாம். அரசு மானியம் கொடுப்பதால், கட்டணமும் குறைவு. ஆனால், மேலை நாடுகளில் அது கட்டாயம் அல்ல என்பது மட்டுமே வித்தியாசம்.

சோவியத் யூனியன் ஸ்தாபித்த காலத்தில் பெரும்பாலான தொழிலாளர், விவசாயிகள் எழுத்தறிவற்றவர்கள். அவர்களுக்கு தாய் மொழி எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே அடிப்படை கல்வி கற்றிருந்தவர்களுக்கு தத்துவமும், பொருளியலும் கற்பிக்கப் பட்டது.

சோவியத் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு கற்பிக்கப் பட்ட இரண்டு பாட நூல்களின் டச்சு மொழிபெயர்ப்பு என்னிடம் உள்ளன. இரண்டையும் ஏற்கனவே படித்திருக்கிறேன். (ஆங்கில அல்லது தமிழ் மொழிபெயர்ப்புகள் கிடைக்குமா என்பது எனக்குத் தெரியாது.)

1. Georges Politzer எழுதிய “மெய்யியல் அடிப்படைகள்”.
இந்த நூல் கிரேக்க தத்துவங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. லோகாயுதவாதம், பொருள்முதல்வாதம், இயங்கியல் போன்ற தத்துவங்களை விளக்குகின்றது.

2. சோவியத் பொருளியல் விஞ்ஞான கழகம் வெளியிட்ட “அரசியல் பொருளாதாரம் – பாட நூல்”.
இதில் ஆதி கால பொருளாதாரம், பண்டமாற்று, பணத்தின் தோற்றம், கூலி, கடன் போன்ற பொருளியல் கோட்பாடுகளை விளக்குகின்றது.

மெய்யியல், பொருளியல் பாடங்கள் உலக நாடுகள் அனைத்திலும் கற்பிக்கப் படுகின்றன. இவற்றில் “தத்துவார்த்த ஊட்டல்”, “சித்தாந்த மூளைச்சலைவை” எங்கே இருக்கிறது என்று யாராவது விளக்க முடியுமா?

(Kalai Marx)