தொழில் ஆணையாளர் கூட்டு ஒப்பந்தத்தை திருத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

  • மக்கள் தொழிலாளர் சங்கம் ஆணையாளருக்கு அறிவிப்பு

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா அச் சங்கத்தின் சார்பாக தொழில் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள 2016.11.18ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம், 18 மாதங்கள் கழிந்த பின்னர் 500/= அடிப்படை சம்பளம் உட்பட 730/= சம்பள உயர்வுடன் கைச்சாத்திடப்பட்ட சம்பள கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நெறிமுறையான எதிர்பார்ப்பு (legitimate expectation), இயற்கை நீதி (Natural Justice) மற்றும் ஏற்கனவே நிலைபெற்ற உரிமைகள் (Acquired or existed rights) என்பற்றுக்கு எதிராக இருக்கின்றமையை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, குறித்த சம்பள கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு சட்ட அந்தஸ்த்தினை வழங்க வேண்டாம் என அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, ஒப்பந்தத்தின் தர்ப்புகளான கம்பனிகள் சார்பான இலங்கை முதலாளிமார் சம்மேளனம், தொழிலாளர்களின் தரப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட கூட்டு தொழிற்சங்கங்களின் நிலையம் என்பவற்றுக்கு அறிவித்து தொழிலாளர்களுக்கு எதிராக உள்ள சரத்துக்களை நீக்கி சட்ட பூர்வமானதும், நியாயமானதும் ஒப்புறவானதுமானதுமான சம்பள கூட்டு ஒப்பந்தத்தை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார். அதனை இரு வார காலத்தினுள் செய்ய தவறுமிடத்து கூட்டு ஒப்பந்தத்திற்கான சட்ட பாதுகாவலனாக இருக்கும் தொழில் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த கடிதத்தில் 2015 பெபரவரி மாதம் மக்கள் தொழிலாளர் சங்கம் தொழில் ஆணையாளருக்கு வழங்கிய மகஜரில் உள்ள விடயங்களுக்கு ஆணையாளரின் கவனத்தைக் கோரியுள்ளதுடன் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கம்பனிகள் சார்பான இலங்கை முதலாளிமார் சம்மேளனம், தொழிலாளர்களின் தரப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட கூட்டு தொழிற்சங்கங்களின் நிலையம் என்ற தரப்புகள் 2016.10.18ஆம் திகதி கைச்சாத்திட்ட புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் பின்வரும் மூன்று அடிப்படையில் சட்ட ரீதியற்றவை என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1) முன்னைய சம்பள கூட்டு ஒப்பந்தம் 2015 மார்ச் 31ஆம் திகதியுடன் காலாவதியாகிய போதும், புதிய கூட்டு ஒப்பந்தத்தில் 2வது வாசகம் 2016 ஒக்டோபர் 15ஆம் திகதியில் இருந்து ஆரம்பித்து குறைந்தது இரண்டு வருடங்களுக்கு அமுலில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. முன்பு காலம் தாழ்த்தி கைச்சாத்திடப்பட்ட எல்லா கூட்டு ஒப்பந்தத்தங்களிலும் முன்னைய கூட்டு ஒப்பந்தம் காலாவதியான திகதியில் இருந்து அடுத்து வரும் நாளில் இருந்தே அமுலுக்கு வந்துள்ளன. எனவே, புதிய சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் வாசகம் 02 ஆனது இதுவரையான நடைமுறைக்கு முரணாயுள்ளது.

குறித்த 2வது வாசகமானது புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு புதிய கூட்டு ஒப்பந்தம் அமுலுக்கு வரவேண்டிய தினத்தில் இருந்து தொழிலாளர்கள் பெற உரித்துடைய 18 மாத நிலுவை சம்பள கொடுப்பனவு பெற்றுக் கொள்வதற்கான உரிமையை (நிலைபெற்றிருந்த உரிமை) மறுத்துள்ளது.

புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச காலமாக 2 வருடங்கள் என குறிப்பிட்டிருக்கின்றமையினால் சம்பள உயர்வை அக்காலத்திற்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொழிலாளர்களுக்கு குறித்த காலத்தில் சம்பள உயர்வுக்கான உரிமையையும் மறுத்துள்ளது.

2) புதிய கூட்டு ஒப்பந்தத்தின் வாசகமானது 2003ஆம் ஆண்டு 13ஆம் இலக்க முதன்மை கூட்டு ஒப்பந்தத்தின் வாசகம் 8(1)ற்கு (30 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும்) எதிரானதாகும்.

3) வாசகம் 1 (A) (V) மற்றும் 1 (B)(V) என்பன ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய சட்டங்களின் ஏற்பாடுக்கு முரணானதாகும்.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் குறித்த கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக ஆளப்படுவதனாலும், ஏறத்தாள 250000 தொழிலார்களை பாதிக்கும் என்றவித்தில் பொது மக்களின் அக்கறைக்குரிய விடயமாகவும் (matter is public interest concern) தற்போதும் நாட்டின் வருமானத்திற்கு குறிப்பிடத்தக்களவில் பங்களிக்கும் துறையாக காணப்படுவதாலும் தாம் இந்த விடயங்களை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவருவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதம் தொடர்பாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா குறிப்பிட்டுகையில் இரு வாரங்களில் தொழில் ஆணையாளர் பதிலளிக்காவிடின் அல்லது வழங்கும் பதில் புதிய சம்பள கூட்டு ஒப்பந்த வாசகங்களை நாம் சுட்டிக்காட்டியதற்கமைய திருத்த நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்துவதாக அமையாவிடின் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எமது சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.