ரவிராஜ் எம்.பி கொலை வழக்கு: சுட்டுக் காட்டினார் சாட்சியாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் மீது, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டபோது, செனவிரத்ன என்ற சந்தேகநபர், கறுப்புநிறப் பையினுள் ரி-56 ரகத் துப்பாக்கியை வைத்து எவ்வாறு சுட்டார் என்பதை, முதலாவது சாட்சியாளரான மனம்பேரிகே பிருதிவிராஜ் சம்பத், கொழும்பு மேல்நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை செய்துகாட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் எம்.பியின் படுகொலை தொடர்பான சாட்சியமளிப்பு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், விசேட சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய ஜூரி சபை முன்னிலையில், நேற்று வியாழக்கிழமை (24) நடைபெற்றது. இக்கொலை வழக்கின் சந்தேகநபராக இருந்து, அரச தரப்புச் சாட்சியாளராக மாறிய, முதலாவது சாட்சியாளரான மனம்பேரிகே பிருதிவிராஜ் சம்பத், 2ஆவது நாளாக நேற்றுச் சாட்சியமளித்தார்.