அரசியலமைப்புச் சபை வரும் போது கூட்டமைப்பு பிளவுபடுவதா?

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் கடந்த 19ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, மக்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும். இது அரசியல் கட்சியா, இல்லையென்றால் இவ்வாறானதோர் அமைப்பு எதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்களும் இந்த புதிய அமைப்பின் நோக்கங்களும் ஒன்றா, ஒன்றாக இருந்தால் இரண்டு அமைப்புக்கள் எதற்கு, நோக்கங்கள் முரண்படுவதாக இருந்தால் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அதில் இயங்குவது எவ்வாறு?

இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகள் எழும் என எதிர்பார்த்து, பேரவையின் சில தலைவர்கள் அவற்றுக்குப் பதிலளித்துள்ள போதிலும், அப்பதில்கள் திருப்திகரமானதாக இல்லை. மாறாக, அவை மேலும் குழப்பத்தை அதிகரிக்கின்றன.

பேரவை, அதன் முதலாவது அமர்வின் பின்னர் தமது அமைப்பைப் பற்றியும் தமது நோக்கங்களைப் பற்றியும் ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையில், மிகவும் முக்கியமானது எனக் கருதப்படும் ஒரு வாசகத்தை ஏறத்தாழ இவ்வாறு தமிழ் மொழியாக்கம் செய்யலாம்.

‘தமிழர்; பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வரைவதற்காக பேரவை ஒரு உப குழுவை நியமிக்கும். அக்குழு, டிசெம்பர் மாதம் 27ஆம் திகதி தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கும். இக்குழு, தமது பூர்வாங்க வரைவை முதல் மாதத்துக்குள் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு, அதன் நகலானது சர்வதேச நிபுணர்களினால் ஆராயப்பட்டு பல்வேறு ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டு, அது தொடர்பான மக்கள் கருத்துக்கள் திரட்டப்படும். இந்த இருமுனை அணுகுமுறையும் தாராளத்தன்மையும் தமிழ் மக்களின் நீண்டகால இன மோதலுக்கு அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு பேரவைக்கு ஆற்றலை தரும்’

அதன் பின்னர், பேரவையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேரவையைப் பற்றி விளக்கமளித்து ஊடகங்களுக்கு பல முறை கருத்து வெளியிட்டு இருந்தார். பேரவையானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குடைச்சலை கொடுக்கும் அமைப்பல்ல என்று கூறிய அவர், இது அரசியல் கட்சி அல்ல என்றும் அது கூட்டமைப்புக்கு எதிரானது என்ற தோற்றப்பாட்டை கொடுப்பது தவறானது என்றும் கூறியிருந்தார்.

அதேவேளை, பேரவை உருவாவதற்குக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே காரணம் என்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஓரிருவர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தமிழர்களின் தலைவிதி ஓரிருவர் கையில் இல்லை என்றும் கூறிய அவர், அடுத்த வருடம் நிறைவேற்றப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ளும் வகையில், இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண பேரவை நடவடிக்கை எடுக்கும் என்றும் சம்பந்தன் இப் பிரச்சினையை சரியாக கையாண்டிருந்தால் பேரவை அவசியமாகாது என்றும் கூறியிருந்தார்.

அதன்பின்னர், பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். தமிழர்கள் மத்தியில் ஐக்கியத்தையே தாம் வலியுறுத்துவதாக அச்சந்திப்பிகன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் கூறியிருந்தார்.

இந்த சம்பவங்களும் கருத்துக்களும் தர்க்க ரீதியாக அமையவில்லை என்பது எவருக்கும் தெளிவாக விளங்கும். பேரவை உருவாவதற்கு சம்பந்தனே தான் காரணம் என்றால், சம்பந்தன் ஏதோ தவறிழைத்துவிட்டார் நாம் அதனை சீர் செய்யப் போகிறோம் என்பதே அர்த்தமாகும். சம்பந்தன், எதில் பிழை விட்டுள்ளார், இனப்பிரச்சினையை சம்பந்தன் சரியாக கையாண்டிருந்தால், என்று கூறும் போது சம்பந்தன் எங்கு பிழைவிட்டார் என்பதும் கூறப்படுகிறது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஓரிருவர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தமிழர்களின் தலைவிதி ஓரிருவர் கையில் இல்லை என்றம் கூறும் போது, ஓரிருவர் என்று எவர்களை பிரேமசந்திரன் குறிப்படுகிறார்? அவர், எவரைக் குறிப்பிட்டாலும் கடந்த சில வாரங்களாக கூட்டமைப்புக்குள் நிலவும் உட்பூசல் காரணமாக, சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைமையையே அவர் குறிப்பிடுகிறார் என்றே பொது மக்கள் விளங்கிக் கொள்கிறார்கள்.

அத்தோடு, தமிழர்களின் பிரதான அரசியல் கூட்டணியான கூட்டமைப்பு ஒரு புறம் இருக்க, தமிழ் மக்கள் பேரவை, இனப்பிரச்சினைக்குத் தீர்வு தேடப் போகிறது. இந்த நிலையில், பேரவையானது கூட்டமைப்புக்கு எதிரானது அல்ல என்றும் போட்டியானது அல்ல என்றும் எவ்வளவு தான் கூறினாலும் அதனை ஏற்பதற்கு மனம் தயங்குகிறது.

அவ்வாறு, இரண்டு அமைப்புக்களும் தனித்தனியாகவும் ஐக்கியமாகவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படுவதில் தவறில்லை தான். உண்மையில், அது சாத்தியமா என்பதே கேள்வியாகும். அதேவேளை, கூட்டமைப்பில் உள்ளவர்களும் பேரவையில் இருப்பதால், அவர்கள் ஏன் இரண்டு அமைப்புக்களில் இருந்துகொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வுகான முயற்சிக்க வேண்டும், அது சாத்தியமா என்ற கேள்விகளும் எழுகின்றன.

தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுமா என்ற கேள்வியை இன்று பலர் எழுப்புகிறார்கள். அதில் சிலர், கூட்;டமைப்புப் பிளவுபட வேண்டும் என்ற ஆவலில் அந்தக் கேள்வியை எழுப்புவதோடு, வேறு சிலர் அவ்வாறு நடக்கக் கூடாது என்ற ஆதங்கத்தில் அந்தக் கேள்வியை எழுப்புகிறார்கள்.

இது தமிழ்க் கூட்டமைப்பினதும் விக்னேஸ்வரனின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையினதும் கொள்கைகளின் காரணமாக மட்டும் தீர்மானிக்கப்படும் நிலைமையொன்றல்ல. தனி நபர்கள் மீதான மக்களின் நம்பிக்கையினால் மட்டும் தீர்மானிக்கப்படும் விடயமுமல்ல.

மக்களின் உணர்ச்சிகளைத் தூண்ட, அந்தந்த அமைப்புக்களில் உள்ளவர்களுக்கு இருக்கும் திறமையினால் மட்டும் தீர்மானிக்கப்படும் விடயமுமல்ல. அரசியல் அமைப்புக்களுடனான தமது மரபு வழியிலான பிணைப்பினால் மட்டும் மக்கள் தீர்மானிக்கும் விடயமுமல்ல.

மக்களின் இன உணர்வுகள், இது போன்ற விடயங்களைத் தீர்மானிக்கும் விடயமாக இருந்தால், கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது முன்னாள் புலிப் போராளிகளின் குழு, யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஓர் ஆசனத்தையேனும் பெற்றிருக்க வேண்டும்.

அந்தத் தேர்தலின் போது, தமிழ்க் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரிக்கவில்லை என்பது விக்னேஸ்வரனுக்கு எதிராக சுமத்தப்படும் ஒரு குற்றச்சாட்டாகும். அதேவேளை,அவர் அந்தத் தேர்தலுக்கு முன்னர் மக்களின் உணர்வுகளைக் கவரும் வகையிலான இரண்டு பிரேரணைகளை மாகாண சபையில் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

இன ஒழிப்புப் பற்றிய பிரேரணையும் சர்வதேச விசாரணை பற்றிய பிரேரணையுமே அவைகளாகும். அவற்றுக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கவில்லை என பிரேமச்சந்திரன் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், அந்தத் தேர்தலின் போது வட பகுதி மக்கள் தமிழ்க் கூட்;டமைப்புக்கே அமோக ஆதரவை வழங்கியிருந்தனர்.

அண்மைக் காலமாக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிய பிரச்சினை தமிழ் மக்களின் கவனத்தை மிகவும் கூடுதலாக ஈர்த்துள்ளது. இந்த விடயத்தில் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பதே தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையின் நிலைப்பாடாகத் தெரிகிறது. ஆனால், தமிழ் மக்கள் பேரவையின் பல தலைவர்கள் அந்த விடயத்தில் தீவிர போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் தெரிகிறது.

உடனடியாகவே கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடாக இருக்கிறது. அந்த நிலைப்பாட்டையே மக்கள் விரும்புவார்கள். ஆனால், வாக்களிப்பு என்று வரும் போது மக்கள் பேரவை போன்றதொர் அமைப்புக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இதுபோன்ற கொள்கை ரீதியிலான விடயங்கள் கூட்டமைப்பின் எதிர்க் காலத்தை தீர்மானிக்குமா என்பதும் ஒரு சிலரது கேள்வியாகும். தமிழ் மக்கள் பேரவையானது, கூட்;டமைப்புக்குச் சவாலாக அமைக்கப்பட்டது என்பது தெளிவாக இருந்த போதிலும் அது தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால் மக்கள் அதனை ஆதரிப்பார்களா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

தீவிரப் போக்கு மட்டுமல்ல சிறந்த கொள்கைகளே இருந்தாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற உத்தரவாதம் இல்லை. மக்கள் விடுதலை முன்னணி, திஸ்ஸமஹாராம பிரதேச சபையை இரண்டு முறை நிர்வகித்தது. ஏனைய பிரதேச சபைகள் 25 இலட்சம் ரூபாயில் செய்யும் பணியை ஐந்து இலட்சம் ரூபாயில் செய்து காட்டியது. பிரதேச சபைத் தலைவர், உத்தியோகபூர்வ அலுவல்களுக்கு மட்டுமே உத்தியோகபூர்வ வாகனத்தை பாவித்தார். கடமை முடிந்து மாலையில் வீட்டுக்குச் செல்ல, அதாவது தனிப்பட்ட விடயங்களுக்காக அவர் அந்த வாகனத்தைப் பாவிக்கவில்லை. அவ்வளவு நேர்மையாக இருந்தும் போர் முடிவடைந்த உடன் நடைபெற்ற மூன்றாவது தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி அங்கு தோல்வியடைந்தது.

கடந்த தேர்தல்களின் போது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே பேரவையில் இருக்கிறார்கள் என்பது கூட்டமைப்பின் தலைவர்களின் ஒரு வாதமாகும். தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தொடர்ந்தும் மக்களால் நிராகரிக்கப்படப் போவதில்லை என அதற்கு முதலமைச்சர் பதிலளித்து இருந்தார். அதாவது எதிர்காலத்தில் பேரவை தேர்தல்களில் தனித்து போட்டியிடப் போகிறது என்பது தான் அதன் அர்த்தமா என்று கேள்வி அப்போது எழுகிறது.

இந்த விடயத்தில் கூட்டமைப்பின் வாதமும் நியாயமானதாக இல்லை. தேர்தல்களில் வென்றவர்கள் திறமையானவர்கள், தகுதியானவர்கள் என்றும் தோல்வியடைந்தவர்கள், திறமையற்றவர்கள் என்றும் தகுதியற்றவர்கள் என்றும் கூற முடியாது. 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை விட, நடிகை உபேக்ஷா சுவர்ணமாலி கூடுதலான வாக்குகளைப் பெற்றார். அப்போது மக்கள் தகுதி அடிப்படையிலா வாக்களித்தார்கள்?

கடந்த முறை கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட ரோஸி சேனாநாயக்க தோல்வியடைந்தார். ஹிருணிகா பிரேமச்சந்திர வெற்றி பெற்றார். எங்கே தகுதி? கொலை குற்றச்சாட்டின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர முன்னாள் அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன மற்றும் பவித்திரா வன்னியாராச்சியை விடக் கூடுதலான வாக்குகளைப் பெற்றார். இது தான் மக்கள் எதிர்பார்க்கும் தகுதியா?

எனவே, எதிர்காலத்தில், மக்கள் கூட்டமைப்பைத் தெரிவு செய்வார்களா அல்லது பேரவையை தெரிவு செய்வார்களா என்பதை இப்போதைக்குத் தீர்மானிக்க முடியாது. ஆனால், கூட்டமைப்பு பிளவு படும் வாய்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது மட்டும் தெளிவாகக் காணக்ககூடியதாக இருக்கிறது.

இரண்டு காரணங்களால் இது பேரவையின் உதயத்துக்குச் சாதகமான தருணமாக இருக்கிறது எனலாம். விக்னேஸ்வரன் மாகாண முதலமைச்சராக இருப்பது ஒரு சாதகமான நிலைமையாகும். இரண்டாவதாக புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்காக அடுத்த மாதம் நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து இருப்பதால் கூட்டமைப்பும் பேரவையும் தனித்தனியாக அரசியல் தீர்வுகளை முன்வைக்கலாம். பேரவையின் தீர்வு தீவிரவாத போக்குடையதாகவும் அமையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.

மக்கள் அதனை விரும்பலாம். ஆனால், அவ்வாறு நடந்தால் கூட்டமைப்பின் பிளவு ஊர்ஜிதமாகிவிடும். தமிழ் மக்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதி என்ற வகையில், உத்தேச அரசியலமைப்புச் சபையில் அதன் பேரம் பேசும் சக்தியும் குரலும் பாதிக்கப்படலாம். இது இறுதியல் தமிழ் மக்களைப் பாதிக்கலாம். இதனால் தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பொன்னான சந்தர்ப்பம் ஒன்று உருவாகியிருப்பதாகவும் எனவே, கூட்டமைப்புப் பிளவுபடும் வகையில் எதனையும் செய்யக்கூடாது எனவும் இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா அண்மையில் விக்னேஸ்வரனிடம் கூறியிருந்தார்.
(எம்.எஸ்.எம்.ஐயூப்)