’60 நாட்களாகியும் அநாதைகளாக இருக்கின்றோம் ‘

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாங்கள், எங்கள் போராட்டத்தை ஆரம்பித்து 60 நாட்களாக அநாதைகள் போலவே வீதியில் போராடி வருகின்றோம்” என, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்றுடன் 60 நாட்களை எட்டியுள்ளது. எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் தொடர்கின்றது.

இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்சனி இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த 20.02.2017 ஆம் திகதி காலை, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இரவு பகலாக தொடர்கிறது. எங்களை அனைவரும் கைவிட்டுள்ளனர்.

60 நாட்களாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த போராட்டததை எவரும் கண்டுகொள்ள வில்லை” என்றார்.

இந்நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி, கிளிநொச்சியில் முழு கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள், போக்குவரத்துச் சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், அரசியல் தரப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து தங்களது போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.