ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள் பற்றி அடிக்கடி பேசுகிறோம். மூன்றாம் உலகப் போருக்கான அறைகூவலாக, பல நிகழ்ச்சிகள் கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை மூன்றாம் உலகப் போர் என்றவொன்று நிகழவில்லை என ஆறுதலடைகிறோம். “மூன்றாம் உலகப் போரில் என்ன நிகழுமென்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்றாம் உலகப் போரொன்று நடந்தால் அதில் என்ன நிகழுமென்று சொல்லவியலாது. ஆனால், அவ்வாறு நிகழுமிடத்து, நான்காம் உலகப் போரென்பது தடிகளாலும் பொல்லுகளாலுமே நடக்கும் என உறுதிபடச் சொல்லவியலும்” என்ற, அல்பேட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்று மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது. இவ்வாறு மூன்றாம் உலகப் போர் பற்றிய அச்சங்கள் தோன்றி மறைகின்றன. கடந்த சில வாரங்களாக நடைபெற்ற நிகழ்வுகள், நாம் வாழும் உலகு பற்றிய புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் நடைபெற்றது போலத்தான், மூன்றாம் உலகப் போரும் நடைபெற வேண்டுமா? இப்போது நாம் மூன்றாம் உலகப் போருக்குள் வாழ்ந்துகொண்டா இருக்கிறோம்? எம்மை அறியாமலே மூன்றாம் உலகப் போர் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா? போர் என்ற அறிவிப்போ எச்சரிக்கையோ இன்றி நடக்கும் போராக மூன்றாம் உலகப் போர் இருக்குமா?

கடந்த வியாழக்கிழமை, அணுகுண்டு சாராத அதேவேளை, ‘அனைத்துக் குண்டுகளின் தாய்’ என அழைக்கப்படுகின்ற உலகின் மிகப் பெரிய குண்டான, GBU-43/B Massive Ordnance Air Blastia ஐ ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்கா வீசியமையானது, இக்கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் நியாயத்தை விளக்குகிறது. இக்குண்டானது, நடுவானில் கிட்டத்தட்ட 10,000 கிலோகிராம் நிறையுள்ள வெடிமருந்தை வெடிக்கச் செய்து, அந்தக் காற்றுவெளியையே தீப்பற்றச் செய்யக் கூடியது. இது 900 மீற்றர் சுற்றுவட்டத்துக்குள்ளாக இருக்கும் எதுவொன்றும் தெரியாவண்ணமான ஒரு பாரிய அதிர்வை உருவாக்கி, அதன் அதிர்ச்சி அலைகள் 2.8 கிலோமீற்றர்கள் சுற்றுவட்டம் வரையிலும் மனிதர்களைக் கொல்லும் திறன்கொண்டவை. இக்குண்டினால் குறிவைக்கப்படும் பகுதிக்குள் மாட்டிக் கொண்டவர்களுக்கு இந்த வெடிப்பின் பாதிப்பு, ஓர் அணுஆயுதம் வெடித்ததற்கு நிகரான பாதிப்பைக் கொண்டிருக்கும்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா நாகாசாகி மீது அணுகுண்டுகள் வீசப்பட்டு எழுபத்திரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதேயளவு வீரியவும் ஆபத்தும் உடைய குண்டொன்று வீசப்பட்டிருக்கிறது. மனிதகுலத்துக்கெதிரான குற்றத்தை இன்னொரு தடவை அமெரிக்கா நிகழ்த்தியிருக்கிறது. இந்நிகழ்வு மூன்று அடிப்படையான விடயங்களை நோக்கிக் கவனங்குவிய வைக்கிறது.

முதலாவது, உலக வரலாற்றில் இவ்வாறதொரு முக்கிய நிகழ்வு ஊடகங்களினால் கவனிப்புக்குள்ளாகவில்லை. இந்த நாசகாரச் செயல் கண்டு, யாரும் சீற்றங் கொள்ளவில்லை. இது ஒரு முக்கிய சம்பவமாகவே கருத்திற் கொள்ளப்படாமல் பொதுப்புத்தி மனோநிலையில் இன்னொரு நிகழ்வுபோல கடந்துபோகும் வண்ணம் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள், மனித உரிமைப் போராளிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்பவர்கள் வரை அனைவரதும் கள்ள மௌனம் வலுவான செய்தியொன்றைச் சொல்கிறது.

இரண்டாவது, 9/11 தாக்குதல்களைத் தொடர்ந்த அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான போரின் போதோ அல்லது ஈராக் மீதான போரின் போதோ பயன்படுத்தப்படாத இக்குண்டானது, இப்போது ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் சிலநூறு ஜ.எஸ்.ஜ.எஸ் ஆயுததாரிகளைக் கொல்வதற்காக ஏன் வீசப்பட்டது. இதன் முக்கியத்துவம் என்ன.

மூன்றாவது உலகெங்கும் மனித உரிமைகள் பற்றியும் அதன் பாதுகாப்பின் அவசியம் பற்றியும் பாடமெடுக்கும் அதைக் காக்கப் படையெடுக்கும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், இச்செயலை ஒரு மனித உரிமை நடவடிக்கையாகக் காண்கிறார்களா. இது எவ்வகையான மனிதாபிமான நடவடிக்கையாகக் கொள்ளப்படுகிறது.

இக்குண்டு வீசப்பட்டமையும் அதைத் தொடர்ந்த ஊடகங்கள் காட்டிய மௌனமும் அச்சமும் கலக்கமும் தருவனவாய் உள்ளன. இச்செயலைக் கண்டிக்க எவரும் முன்வரவில்லை. அமெரிக்காவின் முற்போக்கு முகமூடியை அணிந்து கொண்ட பேர்ணி சாண்டர்ஸ் முதல் முற்போக்கான சாய்வுள்ளவையாகக் காட்டிக் கொள்ளும் ஊடகவியலாளர்கள் வரை எவரும், இக்குண்டுகள் வீசப்பட்டமை தொடர்பில் வாய் திறக்கவில்லை. பயங்கரவாத்துக்கெதிரான இன்னொரு வெற்றிகரமான நடவடிக்கை என்றவிதமாக, இச்செயலை சில ஊடகங்கள் பாராட்டின. இவ்வாறதொரு கொடிய செயற்பாட்டை வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றுபோலக் கருதி அப்பால் நகரும் செயலானது, நாம் வாழும் உலகில் அநியாயங்களுக்கான அமைதியான ஒப்புதலாகவன்றி வேறெதுவாகவும் பார்க்கப்பட இயலாதது.

மிகுந்த அச்சந்தருவது யாதெனில், இத்தாக்குதலின் விளைவால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்றுவரை அறியத்தரப்படவில்லை. இதன் சேத விவரங்களை எந்தவோர் ஊடகமும் சொல்லவில்லை. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரிடம் சேத விவரங்களைக் கேட்கும் திராணி எந்தவோர் ஊடகவியலாளருக்கும் இல்லை. இன்னொரு வகையில் ‘பயங்கரவாதத்துக்கெதிரான போரில்’ அவை தேவையற்றவை என கருதியிருக்கலாம், அல்லது இதை கூட்டுத்சேதத்தின் (collateral damage) கணக்கில் சேர்த்திடலாம் என முடிவுசெய்திருக்கலாம். இவ்வாறுதான் பாரிய குற்றங்கள் யார் கண்ணுக்கும் படாமல் கடந்து போகின்றன.

எந்தவொரு மிகப்பெரிய போரும் நடைபெறாத நிலையில், கிழக்கு ஆப்கானில் ஒளிந்திருக்கின்ற சிறிய ஆயுதங்களை மட்டும் கொண்டுள்ள வலிமையற்ற சிலநூறு ஆயுததாரிகளைக் கொல்வதற்காக இவ்வாறாதொரு பேரழிவு ஆயுதத்தை பயன்படுத்தியமைக்கான அறிவுரீதியானதும் தர்க்கரீதியானதுமான நியாயம் எதுவும் இருக்க முடியாது. இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டைப் பயன்படுத்துவதற்கான எதுவிதமான நியாயமோ தேவையோ இருக்கவில்லை என்பதை இங்கு நினைவூட்டல் தகும்.

இக்குண்டு பயன்படுத்தப்பட்டதன் ஊடு, சில முக்கிய செய்திகளை அமெரிக்கா சொல்ல விளைகிறது. குறிப்பாக, புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் உலகை எவ்வாறு அச்சுறுத்தலின் ஊடு கட்டுப்படுத்த விளைகிறது என்பதன் குறிகாட்டியாக இதை கொள்ளவியலும். அமெரிக்க இராணுவம், தன் நலன்களின் பேரில் செய்யத் துணிந்தவற்றுக்கு எந்த தடைகளும் இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச சட்டங்கள், மனித உரிமைகள், மனிதாபிமான சட்டங்கள் என எதுவுமே அமெரிக்க செய்ய நினைப்பவற்றுக்குத் தடையல்ல என்பதை இது மீண்டுமொருமுறை நிறுவியுள்ளது. இன்னொரு வகையில் இதை உலகுக்கு எடுத்துக் காட்டுவது தான் இந்த தாக்குதலின் பிரதான நோக்கமாகவும் இருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இக்குண்டைப் பயன்படுத்திய காலப்பகுதி மிக முக்கியமானது. வடகொரியா மீதான நேரடியான அமெரிக்க மிரட்டல்களின் பின்னணியில், கொரிய தீபகற்பம் தொடங்கி சிரியா மற்றும் கிழக்கு ஐரோப்பா வரையிலும் பதற்றங்கள் பெருகிச் செல்லும் நிலையில் இக்குண்டு வீசப்பட்டிருப்பானது ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்கு சவால் விடத் துணிகின்ற எந்தவொரு நாட்டின் மீதும் அமெரிக்கா கட்டவிழ்த்து விடத்தக்க வன்முறையின் மட்டத்துக்கு எந்த வரம்புமில்லை என்ற எச்சரிக்கையை விடுப்பதையே இது குறித்து நிற்கிறது.

2001ஆம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, அங்கே தலிபான் அரசாங்கத்தைக் கவிழ்த்து, தனது சொந்த கைப்பாவை ஆட்சியை அமர்த்தியது முதலாய், கடந்த 15 ஆண்டுகளாக குருதிதோய்ந்த ஆக்கிரமிப்பினைத் தொடர்கிறது. தரவுகளின் படி 2001 முதலாக ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 200,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று மதிப்பிடுகிறது. இலட்சக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள், மில்லியன் கணக்கானோர் அகதிகளாகி இருக்கின்றனர். மத்திய ஆசியாவின் எரிசக்தி வளம் செறிந்த பிராந்தியத்தின் மீது தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டும் தளமாகவே ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. 9/11 தாக்குதல் தலையிடுவதற்கான நல்லதொரு சாட்டாகியது.

முடிவற்றுத் தொடரும் ஆப்கானிஸ்தானின் யுத்தத்துக்கும் அரசியல் குழப்பநிலைக்கும் தீர்வு காணும் வகையில் போரிடுகின்ற உள்நாட்டுத் தரப்புகளிடையே அமைதித் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடாகியிருந்த நிலையில், இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இப்பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு முதல்நாள் இத்தாக்குதலை அமெரிக்கா நடாத்தியது. இந்தியா, ஈரான் உள்ளிட ஒன்பது பிற நாடுகளும் பங்கேற்க உடன்பட்ட நிலையில், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளக் தலிபான்கள் விருப்பம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அமெரிக்கா பங்கேற்க மறுத்ததோடு, தலிபான்களுக்கு ரஷ்யா ஆதரவளிப்பதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்க இராணுவத் தளபதிகள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இவை அமைதியான சுதந்திரமான ஆப்கானிஸ்தான் ஒன்றை உருவாக்க யார் விரும்பவில்லை என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது.

இக்குண்டைப் பிரயோகிக்கும் முடிவை தானே எடுத்ததாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தளபதி சுட்டிக் காட்டுகிறார். இம்முடிவு குறித்து தன்னிடம் கருத்துக் கேட்கப்படவில்லை என்றும் இராணுவரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை தான் இராணுவத்திடமே விட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொல்கிறார். இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இராணுவத்தின் வகிபாகத்தை தெளிவுற விளக்குகிறது. இதை ‘சரியான பாதைக்கு அமெரிக்க ஜனாதிபதி திரும்புகிறார்’ என்றவகையில் அமெரிக்கப் பத்திரிகைகள் போர்முரசை அறைகின்றன.

அமெரிக்காவின் இச்செயலானது, மனித உரிமைகள் பற்றிய அறஞ்சார்ந்த வினாக்களை எழுப்புகிறது. சிரியாவில் ஆதாரமற்ற இராசயன வாயுத்தாக்குதல்களைக் காரணங்காட்டி, சிரியா மீது வான்தாக்குதல்களை நிகழ்த்திய அமெரிக்கா மறுபுறம் மனிதகுலத்துக்கெதிரான குற்றங்களை ஆப்கானில் நிகழ்த்துகிறது. இது மனித உரிமைக் காவலர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இது குறித்துக் கண்டனமெதையும் தெரிவிக்கவில்லை. இவை மனித உரிமைகளின் இரட்டை முகத்தை காட்டுவதோடு மனித உரிமை என்பதன் உண்மை முகத்தைத் தோலுரிக்கின்றன.

இவையனைத்தும் நாம் இப்போது மூன்றாம் உலக யுத்தத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா என்ற ஜயத்தை எம்முள் எழுப்புகின்றன. என்றாவது ஒருநாள் உலக வரலாறு எழுதப்படும்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டே மூன்றாம் உலகப் போரின் தொடக்கப்புள்ளி என எழுதப்படலாம். நாம் அறியாமலேயே மூன்றாம் உலகப் போருக்குள் வாழ்ந்து மடிந்துவிடவும் இயலுமாகலாம். உலகம் அத்திசை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது.