அசோகமித்திரன்: ஓய்வில்லா எழுத்தியக்கம்

தமிழின் மாபெரும் எழுத்தாளர்களுள் ஒருவரான அசோகமித்திரன் கடந்த 23-03-2017 அன்று காலமானார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்புலகில் தீவிரமாக இயங்கிவந்தவர் அசோகமித்திரன். இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஒன்பது நாவல்கள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என விரியும் படைப்புலகம் அவருடையது. 1960-களில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அவர், தன் இறுதி மூச்சுவரையிலும் எழுத்தாளராகவே வாழ்ந்தார். எண்பது வயதுக்குப் பிறகும் அவரது எழுத்து வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. நம் ‘தி இந்து’ நாளிதழிலும் சமீபத்தில் அவர் எழுதிய ‘மவுனத்தின் புன்னகை’ தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

1931-ல் செகந்தராபாதில் பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் தியாகராஜன். இந்திய வரலாற்றின் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் தனது இளமைப் பருவத்தைக் கழித்தவர் அவர். இந்திய சுதந்திரத்துக்குப் பின் ஹைதராபாத் மாகாணத்தை இந்தியாவுடன் இணைப்பதற்காக நடந்த போரின் அவலங்களைக் கண்முன் கண்டவர் அவர். தந்தையின் மரணத்துக்குப் பின் மதராஸுக்கு வந்த அவர் ‘ஜெமினி’ ஸ்டூடியோவின் கதை இலாக்காவில் சேர்ந்தார். பத்துக்கும் மேற்பட்ட வருடங்களை அங்கு கழித்தார்.

தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்த அசோகமித்திரன், 1950-களின் தொடக்கத்திலிருந்து இரு மொழிகளிலும் கதைகள் எழுத ஆரம்பித்தார். அவரது நீண்ட எழுத்துப் பயணத்தில் அவர் உருவாக்கிய படைப்புகள் பலவும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் செழுமையான பகுதிகளாயின. தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் அசோகமித்திரன், உண்மையில் உலக அரங்கில் வைத்துப் பேசப்படுவதற்குத் தகுதியானவர்.

அவரது எழுத்துக்களைக் குறித்துச் சொல்லும்போது ‘ஏமாற்றும் எளிமை’ என்று சொல்வது கிட்டத்தட்ட ஒரு தேய்வழக்கு போல் ஆகிவிட்டது என்றாலும் அதுதான் உண்மை. அவர் சொல்லும் கதைகள் அப்படிப்பட்ட நடையால்தான் மகத்துவம் பெற்றன என்பதை மறுக்க முடியாது. ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த நடுத்தர, ஏழை வர்க்கத்தினரின் துயரங்களையும் வாழ்க்கைப் பாடுகளையும் சொல்லும் கதைகள் என்று அவரது கதைகளின் உலகத்தைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. அது பகுதியளவே உண்மை.

அவரது ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ நாவலில் ஹைதராபாத் நிஜாமின் கீழ் இருந்த இஸ்லாமிய மக்களின் துயரங்களையும் பதிவுசெய்திருப்பார். இரு தரப்புத் துயரங்களும் மதங்களின் எல்லைகளை அழித்து மானுடப் பேரழிவாக உருவெடுத்திருப்பதை அந்த நாவல் மூலம் ஆழமாகச் சொல்லியிருப்பார். ‘புலிக்கலைஞன்’ முதலான சிறுகதைகளிலும், ‘கரைந்த நிழல்கள்’ போன்ற நாவல்களிலும் திரைப்படத் துறையில் உதிரித் தொழிலாளர்களாக இருப்பவர்களின் உலகத்தை ‘புண் உமிழ் குருதி’ போல் திறந்து காட்டியிருப்பார். கணிசமான கதைகளின் பின்புலமும் சூழலும் நடுத்தர வர்க்கத்தினுடையனவாக இருந்தாலும் அவை யாவற்றையும் மானுட வாழ்வின் பொதுத் துயரமாக மாற்றுவது அசோகமித்திரனின் எழுத்து வல்லமை.

வாழ்தலின் துயரங்களை, அவமானங்களை, கொடுமைகளை எழுதினாலும் ஆசிரியரின் குரலோ நெகிழ்ச்சியோ பரிதாபமோ அவரது கதைகளில் அநேகமாக வெளிப்படுவதில்லை. கதைமாந்தர்களின் வாழ்க்கையிலும் மனதிலும் சிசிடிவி கேமரா பொருத்தியதுபோல்தான் இருக்கும் அவரது கதைகள். அது ஆசிரியர் பொருத்திய சிசிடிவி கேமரா போலில்லாமல் கதாபாத்திரமே தனக்கென்று பொருத்திக்கொண்டு, அதில் பதிவான காட்சிகளைப் பிற்பாடு ஓட்டிப்பார்த்துச் சலித்துக்கொள்வதுபோல்தான் இருக்கும் அவரது கதைகள். நித்திய வாழ்வின் அபத்தங்களில், மூடத்தனங்களில் உழலும் மனிதர்கள் மீதான தடையற்ற கரிசனத்தை வெளிப்படுத்துபவை அவரின் கதைகள். அசோகமித்திரனின் இந்த கரிசனம் அவரது எழுத்துக்களில் வெளிப்படையாகத் தோற்றம் கொள்ளும் கரிசனம் அல்ல. படிப்பவர்களின் மனதிலிருந்து அசோகமித்திரன் வெளிப்படச் செய்யும் கரிசனம். அதுதான் அவரை மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவராகக் கொண்டாடுவதற்கான காரணமாகிறது.

தமிழ் எழுத்தாளர்களில் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் அசோகமித்திரன். எனினும் அவரது படைப்பு உயரத்துக்கு உரிய அங்கீகாரம் தமிழக அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் கிடைக்கவில்லை. சாகித்திய அகாடமி போன்ற விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவரது உயரம் அவற்றையெல்லாம் தாண்டியது. ஒரு சமூகம் தனது மகத்தான எழுத்தாளரைக் கொண்டாடுவதே எல்லா விருதுகளையும்விட மேன்மையானது. அந்த விருதைத்தான் அசோகமித்திரனுக்கு நாம் வழங்கத் தவறிவிட்டோம்.

நம் காலத்தின் மாபெரும் எழுத்தாளரான அசோகமித்திரனை ‘தி இந்து’ நாளிதழ் தனது நடுப்பக்கங்களில் இங்கே பெருமையுடன் நினைவு கூர்கிறது!

(The Hindu)