அன்புள்ள மகளுக்கு உனது அம்மா எழுதும் கடிதம்…

நீ மூத்த மகளாகப் பிறந்த போது உனது தந்தையும் நானும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனாலும் நமது உறவுகளும், சுற்றமும் மூத்த பிள்ளை பெண்ணா என்ற கேள்வியோடு முகம் சுழித்தது. நான் கண்ணீர் விட்டழுதேன். ஆனால் உன் அப்பாவோ எனக்கு லஷ்மி பிறந்திருக்கிறாள் என்று உன்னை உச்சி மோர்ந்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

இப்படித் தான் உன்னை வளர்க்க ஆரம்பித்தது முதல் நாங்கள் அனுபவிக்கும் துயரங்கள். பிடித்த ஆடையை அணிந்து அழகு பார்த்தால் இது என்ன பெண் பிள்ளைக்கு இப்படி ஆடைகள் என்ற கேள்வியோடு நாலு விவாதங்கள். உன் தந்தையோ இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை.ஆனால் நானும் ஒரு சாதாரண பெண் தானே.இப்படியான கருத்துக்களால் நான் துவண்டு போவதுண்டு. என்ன செய்வது என் பெற்றோர் உன் தந்தையைப் போல துணிந்தவர்கள் இல்லை. அதனால் தான் நானும் என்னைப் போன்ற பல பெண்களும் இந்த ஆணாதிக்க மற்றும் சமூக கட்டுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனாலும் ஆயிரம் காரணங்கள் அவர்களை எதிர்க்க இருந்தாலும் நீயும் கொஞ்சம் உன் நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும். காதல் தப்பில்லை மகளே. நீ தேர்ந்தெடுப்பவன் அதற்கு தகுதியானவன் இல்லையென்றால் அந்தக் காதல் தப்பாகி விடும். நண்பர்களோடு சேர்ந்து பழகுவதும் நல்ல விஷயம் தான்.ஆனால் நீ நம்பிப் பழகும் நண்பர்களும், நண்பிகளும் தவறெனில் உன் வாழ்க்கையே தவறாகி விடும்.

இந்த உலகில் காதலால் கவரப்படாதவர் எவரும் இல்லை. அதே போல காதலை ஆதரிக்கும் பெற்றோர்களும் நம் மத்தியில் இல்லை.சிலர் மட்டும் தான் காதலைத் தவறாக எண்ணாமல் பிள்ளைகளின் காதலை ஏற்றுக் கொண்டு நடத்துகிறார்கள்.அப்படியான இடங்களில் காதல் தவறாவதில்லை. பெற்றோர்களாகிய எங்களது தவறுகளால் தான் பிள்ளைகள் நீங்கள் சீரழிந்து போகக் காரணமாகிறது. காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள பழகி விட்டால் பிள்ளைகள் நீங்கள் தவறான இடங்களில் சென்று சந்திக்க நினைக்க மாட்டீர்கள்.

இதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் எங்கள் ஆணவம் தடுத்து விடுகிறது.பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் தண்டித்து விடுகிறோம். இது தான் நீங்கள் தப்பானவர்களிடம் போய் சேர்ந்து சீரழியக் காரணங்களாகிறது. பார்த்தாயா ஆண்களைப் பெற்ற அம்மாக்கள் கல் நெஞ்சத்தோடு எங்கள் பிள்ளைகள் தவறு செய்யவில்லை என்று சண்டை பிடிக்கிறார்கள். பல பெண்களைச் சீரழித்தவன் தன் மகன் என்ற போதிலும் அவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் நியாயம் பேசுகிறார்கள். இன்று சீரழிந்து போனது உங்கள் வாழ்க்கை மகளே..

வன்புணர்வு செய்தவனை விட நீங்கள் ஏன் அவர்களைத் தேடிப் போனீர்கள் என்றும் பெற்றோரின் வளர்ப்பு சரியில்லை என்றும், காமம் முத்திப் போய் படுக்கப் போனவர்கள் என்றும் எங்களைத் தானம்மா இந்த சமூகமும் திட்டித் தீர்க்கிறது.விரல்களை நீட்டி சுட்டிக் காட்டுகிறது.

நாங்களும் காதலித்திருக்கிறோம்.உன் தந்தை என்னைக் காதலித்துத் தான் திருமணம் முடித்தவர். பொய்யாக மற்றவர்களைப் போல எங்களாலும் காதலித்தது தவறு என்று உன்னைக் கட்டி வைத்து அடிக்க முடியவில்லை. நீ செய்தது தவறு என்று இந்த உலகமே விரல்களை நீட்டினாலும் என்னால் உன்னைக் குறை கூற முடியவில்லை மகளே.காதலையும், காமத்தையும் பிரித்துப் பார்க்கும் பக்குவத்தில் நான் வளர்க்கப்பட்டேன்.ஆனால் இன்று உன்னை நான் நல்ல பெண்ணாக வளர்த்திருந்தாலும் உன் கையில் நான் வாங்கித் தந்த பொருள் உன்னைத் தவறு இழைக்கத் தூண்டும் என்பதை ஏன் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போனது.

இன்று அடுத்தவரைச் சீரழிக்க என்று ஆயிரம் வழிவகைகள். இதில் இணையங்களைப் பற்றிக் கூறவே வேண்டாம். பெண்கள் எல்லோரும் ஆபாசமாக படங்களை போடுவதும், சிகரெட் பிடிப்பதும், மது, போதைப் பொருட்களை பாவிப்பது என்றும் தவறான வீடியோ காட்சிகள்.இவைகளை எல்லாம் நாங்கள் அறியாமல் வளர்ந்தாலும் இன்று அப்படியில்லை. அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் அசிங்கங்களை வீடுகளுக்குள் கொண்டு வந்து விட்டோம்.

மகளே இவையெல்லாம் தாண்டித் தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஆகவே உனது முகநூலில் தேவையற்ற நட்புக்களோடு உறவாட நினைக்காதே.எப்படியான பசப்பு வார்த்தைகளுக்கும் மயங்கி விடாதே. கண்ட இடங்களில் கண்டதையும் வாங்கிக் குடிக்கவோ, உண்ணவோ வேண்டாம். உனது நண்பியின் நண்பரோடு பேச்சுக்களை வளர்க்காதே. உன் தோழிகளின் நடத்தைகள் தவறாகத் தெரிந்தால் அந்த நட்பில் இருந்து நீங்கி விடு.

Dub mas, TikTok போன்ற வீடியோக்களில் படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்யாதே. பொது இடங்களில் குளிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உன் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து ரசித்து உன் நண்பர்களிடம் காட்டி மகிழாதே. ஆடைகள் தவறில்லை.இருந்தாலும் பொது இடங்களில் அனைவரையும் உறுத்தும் விதத்தில் ஆடைகளை அணியாதே..

என்னடா அம்மா அதிகமாக அறிவுரை சொல்கிறார் என்று கோபப்படாதே.உன் வாழ்க்கையைப் பற்றிய அக்கறை எனக்குத் தான் அதிகம் மகளே.

கடைசியாக ஒன்று தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்.அத்தோடு நீச்சலையும் கற்றுக் கொள்ள வேண்டும். இவையெல்லாவற்றையும் விட உன்னைப் பாதுக்காக்க நீதான் தயாராக வேண்டும்..

மகளே நீ எனக்கு மட்டுமல்ல.இந்த தேசத்துக்கே சொத்து..

இப்படிக்கு
என்றும் பாசமுள்ள
உனது அம்மா…

பின் குறிப்பு.
உன்னை அம்மணமாக்கி இந்த உலகம் இழிவு செய்தாலும் கலங்காதே.துணிந்து நில். எதிர்த்து போராடு.நிர்வாணம் ஒன்றும் அசிங்கமல்ல.உன்னைச் சீரழித்தவனை விட.. தயவுசெய்து தற்கொலைக்கு முயலாதே மகளே. உலகம் மிகவும் பெரியது.நீ வாழ ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

பெண்களே உங்களை என் மகளாக எண்ணி எழுதிய மடல்.எனக்கு பெண் குழந்தை இல்லை.ஆனாலும் பெண் குழந்தைகளை மிகவும் பிடிக்கும்.