அபாயாக்களும் உரிமைகளும் யதார்த்தங்களும்

(Gopikrishna Kanagalingam)
திருகோணமலையிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில், ஆசிரியர்கள் அபாயா எனப்படும், இஸ்லாமிய உடையை அணிவது தொடர்பில், அண்மைக்காலத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது. இது, சமூக வலைத்தளங்களில் அதிகப்படியான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சமூக வலைத்தளங்களுக்கே உரித்தான பாணியில், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், ஒரு கட்டத்தில் இனவெறுப்பு ரீதியிலும், மற்றைய தரப்பின் கருத்துகளைச் செவிமடுக்காமல் போவதிலும் காணப்படுகிறது. துருவப்பட்டுப் போயுள்ள நாட்டில், சமூக வலைத்தளங்கள் தான், உச்சநிலைத் துருவப்படுத்தப்பட்ட இடங்களாக இருக்கின்றன. எனவே, தமது பகுதி நபர்களின் அங்கிகாரத்தையும் “விருப்பு”களையும் பெறுவதற்காக, கடும்போக்குக் கருத்துகள் பகிரப்படுவதைக் காணக்கூடியாக இருக்கிறது.
ஒருபக்கமாக, “தமிழ்ப் பாடசாலையென்றால், அதன் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, சேலை தான் அணிய வேண்டும்” என்று ஒரு பகுதி சொல்கிறது. மறுபக்கமாக, “அபாயா என்பது எமது கலாசாரம். அதை அணிந்து தான் தீர வேண்டும்” என்று, மறுபகுதி சொல்கிறது. இவற்றுக்கிடையில் சிக்கி, யதார்த்தமும் மிதவாதமும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் பெரும்பான்மையான பாடசாலைகளில், ஆசிரியைகள் சேலையையும், ஆண் ஆசிரியர்கள் மேலைத்தேய உடையும் அணிவது தான் வழக்கமானது. ஆனால், முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள ஆசிரியைகள், அபாயா அல்லது ஹிஜாப் அணிவதொன்றும் புதிதானதும் கிடையாது.

இப்போது எழுந்திருக்கும் பிரச்சினையெல்லாம், முஸ்லிம் பாடசாலை என்று அறியப்படாத தமிழ்மொழி மூலமான பாடசாலையில், ஆசிரியையொருவர் அபாயா அணிவதற்கு முயன்றாரெனவும், அம்முயற்சி தடுக்கப்பட்டதெனவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.

அவ்வாசிரியை அபாயா அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போர், இப்பாடசாலைகளிலுள்ள முஸ்லிம் ஆசிரியைகள், இதற்கு முன்னர் அபாயா அணிவதில்லை என்று குறிப்பிடுகின்றனர். ஆகவே, புதிய பழக்கமொன்றை உட்புகுத்துவதற்கு இவ்வாசிரியை முயல்கிறார் என்பது, அவர்களது குற்றச்சாட்டாக இருக்கிறது.

இது தொடர்பாக ஆராய்ந்த போது, முஸ்லிம் ஆசிரியைகளில் பெரும்பாலானோர், சேலை அணிந்து, மேலதிகமாக தலையை மூடியும் இருப்பது தான் வழக்கமென்பதை அறிய முடிந்தது. எனவே, “இதுவரையில் இல்லாத வழக்கம்” என்பதை, ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ஆனால், இதுவரையில் இல்லாத வழக்கம் என்பது, அபாயாவை ஒருவர் அணிவதற்கான உரிமையைத் தடுப்பதற்கு வலிதான காரணமா என்று கேட்டால், இல்லை என்பது தான் பதிலாக இருக்கிறது. இதற்கு முதல் அவ்வாறான பழக்கம் இல்லையென்பதற்காக, ஏனைய பாடசாலைகளில் ஆசிரியைகள் அணிவதற்கு அனுமதிக்கப்பட்ட ஓர் ஆடையை அணிவதற்கு, பெண்ணொருவருக்கு உரிமை மறுக்கப்படுதல் என்பது, ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று கிடையாது. ஆகவே, அக்காரணத்தை, வலிதானதொரு காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறான “நொண்டிச் சாட்டுகள்” குறித்த விமர்சனங்களை முன்வைக்கும் போது, அபாயாவை ஆதரிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக, சமூக ஊடக வலையமைப்புகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இது தான், இருப்பதில் முக்கியமான ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது.

அபாயாவையும் அதன் அரசியலையும் எதிர்த்துக் கொண்டே, அபாயா அணிவதற்கான உரிமைக்காகக் குரல்கொடுப்பதென்பது, சாத்தியமான ஒன்று தான். அபாயாவை முற்றுமுழுதாக எதிர்த்துக் கொண்டே, அதை அணிவதற்கான உரிமைக்கு முற்றுமுழுதான ஆதரவை வழங்கலாம் என்பதை, எம்மில் பலர் புரிந்துகொள்வதில்லை.

வோல்ட்டையர் கூறியதாகப் பரவலாகக் கூறப்படும், ஆனால் எவெலின் பீட்ரிஸ் ஹோல் எழுதினாரென ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும், “நீங்கள் சொல்வதை நான் நிராகரிக்கிறேன். ஆனால், அதைச் சொல்வதற்கான உங்கள் உரிமைக்காக, என்னுடைய மரணம் வரை போராடுவேன்” என்ற கருத்தைத் தான் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒருவரால் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்து அல்லது பண்பாட்டைக் கூட, சொல்வதற்கோ அல்லது பின்பற்றுவதற்கோ உரிய உரிமையை நியாயப்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு செய்வது தான், உண்மையான ஜனநாயகப் பண்பாகும்.

அபாயா என்பது ஆணாதிக்கத்தின் அடையாளம் என்று சொல்லிக் கொண்டே, அதை அணிய வேண்டாம் என்ற முடிவை நாங்களே எடுப்போம் என்பது, ஆபத்தான, இரட்டை நிலைப்பாடு. அபாயாவை, பெண்களிடத்தில் திணிக்கும் பண்பாட்டுக்கும், அணிய வேண்டாம் எனத் திணிக்கும் பண்பாட்டுக்கும் இடையில், பெரிதளவுக்கு வித்தியாசங்கள் இல்லை என்பதைத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

முன்வைக்கப்படுகின்ற இன்னொரு விமர்சனமாக, அபாயா என்பது, இலங்கைப் பண்பாட்டில், இதற்கு முன்னைய காலங்களில் பெரிதளவுக்கு இல்லாத ஒன்று எனவும், அண்மைக்காலமாகத் தான் பரப்பப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது என்பதுவும் காணப்படுகிறது. இது, ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்துத் தான்.

சவூதி அரேபியா பின்பற்றும் இஸ்லாத்தின் வடிவத்தை, உலகம் முழுவதும் பரப்புவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்பது, சர்வதேச ரீதியில் முன்வைக்கப்படுகின்ற ஒரு விமர்சனமாக இருக்கிறது. வஹாபிஸம் என்று சொல்லப்படுகின்ற இவ்வகை, இஸ்லாத்தின் கடும்போக்கு வடிவமாகக் கருதப்படுகிறது. இதில் தான், அபாயா அணிவதென்பது கட்டாயமானதாகக் கருதப்படுகிறது.

ஓரளவுக்குத் தாராளவாத அல்லது முற்போக்குவாத மக்களைக் கொண்டிருந்த இலங்கையின் முஸ்லிம் சமூகம், இஸ்லாத்தின் கடும்போக்கு வடிவத்தின் சில வடிவங்களைப் பின்பற்றுவதென்பது, நிச்சயமாகவே ஆரோக்கியமான ஒரு விடயம் கிடையாது. ஈரானில் இடம்பெற்ற “இஸ்லாமியப் புரட்சி”யின் பின்பும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கத்தின் பின்பும், அங்கிருந்த மக்களின், குறிப்பாக பெண்களின் நடை, உடை, பாவனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை, தெளிவாகவே பார்க்கக்கூடியதாக இருக்கிறது. எனவே, இலங்கையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் இம்மாற்றம் குறித்த கலந்துரையாடல்கள் அவசியமானவை.

ஆனால் முஸ்லிம்களல்லாதோர், இது தொடர்பான முடிவுகளை எடுத்தலென்பது, ஆரோக்கியமானது கிடையாது. இது தொடர்பான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதும், கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதும் தான், இதில் செய்யக்கூடிய ஒரு விடயமாக இருக்கிறது. மாறாக, இவ்விடயம் தொடர்பான முடிவொன்றை எடுத்து, அதைத் திணிப்பதென்பது, எந்த வகையிலும் சரியான ஒன்று கிடையாது.

உலகின் பல்வேறு சமுதாயங்களின் பண்பாட்டு மாற்றங்கள் தொடர்பான விடயங்களை ஆராயும் போது, முடிவாகக் கிடைக்கின்ற ஒரே ஒரு விடயம் தான் இருக்கிறது: மாற்றங்கள், உள்ளிருந்து ஏற்பட வேண்டும்; மாறாக, வெளியிலிருந்து திணிக்கப்படும் மாற்றங்கள், ஆரோக்கியமானவையாக அமைவது கிடையாது.

மறுபக்கமாக, அபாயாவை நியாயப்படுத்தும் சந்தர்ப்பங்களையும் காணக்கூடியதாக இருந்தது. “பெண்கள், விரும்பித் தான் அணிகிறார்கள்” என்பது, பொதுவான கருத்தாக இருந்தது. இவ்வாறான நியாயப்படுத்தல்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் முன்வைக்கப்படுகின்றவையாகத் தான் இருக்கின்றன.

ஆனால், உலகம் முழுவதிலும் இடம்பெறும் விடயங்களை ஆராய்வோருக்கு, இக்கருத்தின் உண்மையற்ற தன்மையை இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். “அபாயா/ஹிஜாப் அணிய மறுத்த பெண்ணை, வெட்டி/அடித்துக் கொன்றார் தந்தை/சகோதரன்” போன்ற வகையறாச் செய்திகளை, கிட்டத்தட்ட தினசரி பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னரும் கூட, இளம் பெண்ணொருவரின் தலையை மூடும் துணி, அவரது தலையை முழுமையாக மூடியிருக்கவில்லை எனத் தெரிவித்து, ஈரானின் “நன்னெறிப் பொலிஸ்” பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரிகள், அப்பெண்ணைத் தாக்கும் காணொளி வெளியாகியிருந்தது. இது, ஈரானிலும் உலகிலும், பெண்களின் ஆடைத்தெரிவு தொடர்பான கலந்துரையாடல்களை, மீளவும் ஆரம்பித்திருக்கிறது.

எனவே, “அனைத்துப் பெண்களும், அபாயாவை விரும்பித் தான் அணிகிறார்கள்” என்பது, அப்பட்டமான பொய்யாகும். ஒரு குறிப்பிட்ட பிரிவினர், விரும்பி அணிவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால் மறுபக்கமாக, இன்னொரு தரப்பினர், நேரடியான அச்சுறுத்தல்கள் காரணமாக அணிகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதேபோல், “அபாயா அணியாவிட்டால், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவோம்” என்ற அச்சத்தின் காரணமாக, அபாயா அணிவோரும் இருக்கின்றனர்.
இந்த மூன்று பிரிவினரில், விரும்பி அணியும் பிரிவினர், அபாயாவை அணிவதற்கான உரிமைக்காகப் போராடும் அதேவேளையில், அடுத்த இரு பிரிவினரும், தாங்கள் விரும்பும் ஆடையை அணிவதற்கான உரிமையை அடைவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்காகப் போராட வேண்டிய பொறுப்பு, அனைவருக்கும் இருக்கிறது.

அபாயாவை எதிர்ப்பதில் மாத்திரம் ஈடுபடுவதோ அல்லது அபாயாவை ஆதரிப்பதில் ஈடுபடுவதோ, எந்தவிதத்திலும் நேர்மையான செயற்பாடாக இருக்காது என்பதை, இவை தொடர்பான விவாதங்களில் பங்குபற்றுவோர் புரிந்துகொள்வது, இது தொடர்பான விவாதத்தை, ஆரோக்கியமாகவும் முன்னேற்றத்தை நோக்கியதாகவும் கொண்டுசெல்வதற்கு வசதியாக இருக்கும். மாறாக, வெறுமனே விருப்புகளையும் வெறுப்புகளையும் முன்கொண்டு செல்வதற்காக இவ்விவாதத்தை நடத்துவதை விட, அதை நடத்தாமலிருப்பதே, அபாயா அணியும் பெண்களுக்குச் செய்கின்ற உதவியாக இருக்கும் என்பதைத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.