அப்பாத்துரை விநாயகமூர்த்தியை மண்டையில் போட முயன்ற சிவராம்… இப்படிதான் கூட்டமைப்பிற்குள் வந்தது தமிழ் காங்கிரஸ்!!

2000 இற்கு பின்னர் தமிழ் ஜனநாயக கட்சிகளை ஓரணியில் திரட்ட புலிகள் விரும்பினார்கள். கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் இதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டு வந்தார். 2000ம் ஆண்டிலேயே ஆரம்பித்த பேச்சு. ஆரம்ப கட்ட பேச்சுக்களின்போது, இந்த உருவாக்கத்தின் பின்னணியில் புலிகள் இருக்கிறார்கள் என்பதை இயக்கங்கள், கட்சிகளிடம் சொல்லவில்லை. எல்லா கட்சிகளும் ஓரணியில் திரண்டு தமிழ் தேசியத்தை வலியுறுத்துவது தமிழர்களின் நலனுக்கு நல்லது என்ற ரீதியில் பேச்சை நகர்த்தினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே புலிகள் விவகாரத்தில் “சூடு“ கண்ட பூனைகள். அவர்கள் தரப்பில் பெரிய மறுப்புக்கள் இல்லை. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுரேஷ் அணி) அமைப்புக்களும் அதேநிலைதான். 2000ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளிற்கும் சொல்லும்படியான பெறுபேறு கிடைக்கவில்லை. புளொட் மட்டும் தயங்கியது. சிவராம் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர். புளொட் அமைப்பை கூட்டுக்குள் இணைப்பதற்காக, இந்த அமைப்பின் தலைமையை நீங்கள் எடுக்கலாம் என்றும் பேரம் பேசினார். எனினும், அவர்கள் தயங்கினார்கள். அவர்களுடன் தமிழ் காங்கிரசும் தயங்கியது.

அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் புளொட்டிற்கும் இருந்த நெருக்கம் காரணமாக சிவராம் பற்றிய ஒரு தகவல் இருதரப்பிற்கும் தெரிந்திருந்தது.

1996 இல் உலகளவில் இணையத்தளங்கள் பரவலடைந்து கொண்டிருந்தது. அப்பொழுது புளொட் அமைப்பு ஒரு இணையத்தளம் தொடங்க விரும்பியது. சிவராமை கொண்டு அதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்காக புளொட் அமைப்பு 1997 இல் மூன்று இலட்சம் ரூபா பணத்தை சிவராமிடம் கொடுத்திருந்தது. இதன்மூலம் உருவாக்கப்பட்டதே தமிழ் நெற் இணையத்தளம்.

உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைத்து, தமிழ்தேசிய கருத்துருவாக்கத்தை பலப்படுத்துவதே இணையத்தின் குறிக்கோள் என அதன் ஆரம்ப செயற்பாட்டாளர்கள் விளக்கமளித்தார்கள். எந்த கட்டத்திலும் அதை கட்சிகள் சார்ந்த தளமாக்குவதில்லை என்ற உடன்பாடு எட்டப்பட்டு, அது முழுவதும் சிவராமின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. எனினும் மூன்று வருடத்தில் அது புலிகளின் தளம் என்ற பரவலான அடையாளம் ஏற்பட்டது. அதுதவிர, புளொட்டிற்கு பொறுப்பு சொல்வதிலிருந்தும் விடுபட்டு விட்டார். 2000 இன் ஆரம்பத்தில் இது தொடர்பான முரண்பாடொன்று இருதரப்பிற்கிடையிலும் ஏற்பட்டது.

இந்த அனுபவத்தின் அடிப்படையில், கூட்டணி பேச்சில் இருந்து புளொட் ஒதுங்கியிருந்தது. குமார் பொன்னம்பலத்தின் மரணத்தின் பின்னர் தமிழ் காங்கிரசின் தலைமைப் பொறுப்பேற்ற அப்பாத்துரை விநாயகமூர்த்தியும் பேச்சில் அவதானமாக இருந்தார்.

இதற்குள் 2001 பாராளுமன்ற தேர்தல் நெருங்கியிருந்தது. இதற்குள் பேச்சுவர்த்தைகள் கணிசமாக முன்னகர்ந்து விட்டன. விடுதலைப்புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென இறுதி நிபந்தனையை சிவராம் வெளிப்படுத்தினார். தமிழ் விடுதலை கூட்டணி, தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகள் அதை ஏற்றுக்கொண்டன. ஆனால் ஒரு சிக்கல் ஏற்பட்டது. விரைவில் நெருங்கி வந்த 5வது பாராளுமன்ற தேர்தலை எந்த சின்னத்தில் எதிர்கொள்வதென்ற குழப்பம்.

தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் சின்னமாக்கலாம் என்ற அபிப்பிராயம் மற்றைய கட்சிகளால் ஏற்கப்பட்டது. ஆனால், காலம்காலமாக உதயசூரியன் சின்னத்திற்கு எதிராக அரசியல் செய்து பழக்கப்பட்ட தமிழ் காங்கிரசிற்கு அது உடன்பாடாக இல்லை. இது தொடர்பாக விநாயகமூர்த்தி பகிரங்க அறிக்கைகளும் விட்டிருந்தார்.

கொழும்பில் உதயசூரியன் சின்னத்திலும், யாழ்ப்பாணத்தில் சைக்கிள் சின்னத்திலும் போட்டியிடலாம் என்ற யோசனையை அவர் வைத்தார். இதை பகிரங்கமாக ஊடகங்களிலும் சொன்னார்.

2001 பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் முடிவதற்கு சில நாட்களே இருந்தன. சின்னம் தொடர்பான முடிவு எடுக்கப்படாமல் இழுபறியில் இருந்தது. உள்சுற்று பேச்சுக்களில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதற்குள் விநாயகமூர்த்தி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். சைக்கிள் சின்னத்தை விட்டுக்கொடுப்பதென்ற பேச்சிற்கே இடமில்லை, வேறு சின்னத்தில் போட்டியிடுவதென்றால் கூட்டமைப்பில் இணையப் போவதில்லை என அறிவித்தார். அப்பொழுது கூட்டணி பேச்சுக்களில் தமிழ்காங்கிரசின் நிலைப்பாடு சிக்கலை ஏற்படுத்தியது.

ஓரிரு நாட்களில் வேட்புமனு தாக்கலிற்கான காலஅவகாசம் முடியவிருந்ததால் சிவராம் ஒரு வேலை செய்தார். ரெலோ அலுவலகத்திற்கு பேச்சுக்கு சென்ற சிவராம் அங்கிருந்து விநாயகமூர்த்திக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார். வழக்கமாக விநாயகமூர்த்தியுடன் மரியாதையாக பேசும் சிவராம் அன்று ஏக வசனத்தில் பேசியிருக்கிறார். தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை புலிகள்தான் செய்கிறார்கள். அனைத்து கட்சிகளும் ஒன்றாக இருக்க வேண்டுமென அவர்கள் சொல்கிறார்கள். சின்னம் போன்ற சில்லறை பிரச்சனைகளை கிளப்பிக் கொண்டிருந்தால் மண்டையில் போடப்படுவீர்கள் என சொல்லியுள்ளார்கள். சிவராம் நீண்டநேரம் ஏக வசனத்தில் பேசியதன் சுருக்கம் இதுதான். உடனடியாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் இணைய தமிழ் காங்கிரஸ் சம்மதித்தது.

இந்த சம்பவம் இறக்கும்வரை விநாயகமூர்த்தியின் மனதில் வடுவாக இருந்தது. புளொட் கட்சியாக பதிவு செய்யப்பட்டபோது முதலாவது செயலாளர் சிவராம். கட்சியின் சட்டத்தரணி விநாயகமூர்த்தி. புளொட் உருவாக்கிய தன்னார்வ அமைப்பான TRRF அமைப்பில் ஒன்றாக செயற்பட்டனர் இருவரும். இப்படி நன்கு அறிமுகமான சிவராம் தன்னை மரியாதையின்றி பேசியது, சுடப்போவதாக கூறியது அவரால் மறக்க முடியாமல் இருந்தது.

சிவராம் சுடப்பட்டு இறந்த தகவல் அறிந்ததும், அப்பாத்துரை தனக்கு மிக நெருக்கமானவர்களை தொலைபேசியில் அழைத்து இதை பேசினார். அப்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை- “என்னை கொல்லுவன் என்டவன். இப்ப எப்பிடி ஆகியிருக்கிறான் பாருங்கோ“.

(Page Tamil)