அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: தோற்றது யார்?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

தேர்தல், ஜனநாயகத்தின் பிரதான அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. இதுவரை தேர்தல் எதுவும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியிருக்கின்றதா என்ற வினாவுக்குச் சாதகமான பதிலை யாரும் தரக் காணோம். ஜனநாயக நோக்கிலே தேர்தல்கள் மெச்சப்படுகின்றன. ஆனால், தேர்தல்கள் ஜனநாயகமாக நடக்கின்றனவா? அவை ஜனநாயகத்தைப் பெற்றுத் தருகின்றனவா? என்பன ஜயத்துக்குரியவை. இருந்தும் தேர்தல்கள் திருவிழாக்கள் போல ஒரு புனிதத்தைப் பெற்றுவிட்டன. அதன் முக்கியம், அதன் உள்ளடக்கத்திலின்றி அதன் தோற்றப் பொலிவிலேயே உள்ளது. இல்லாவிடின் சினிமா நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஊர்ச் சண்டியர்களும் தேர்தலில் வென்று பிரமுகராக முடியுமா? இவை தேர்தல்கள் பற்றிய இன்னொரு பார்வைக்கான தேவையை உணர்த்துகின்றன.

இக்கட்டுரையை நீங்கள் காணும் போது, அடுத்த நான்கு ஆண்டுகட்கு அமெரிக்காவை ஆள்வது யார் என்பது ஏறத்தாழ முடிவாகிருக்கும். வென்றவர் யார், தோற்றவர் யார் என்பதும் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆய்வுகளும் கருத்துக்களும் ஊடகங்களை நிரப்பும். ஆனால், இத்தேர்தல் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திய கவனிப்பும் அரட்டைகளும் பேசாத, மெய்யாகச் சொன்னால் மறைத்த, சில விடயங்களை இத்தேர்தலின் பின்னணியில் சொல்ல வேண்டும்.

அமெரிக்க ஜனநாயகம் பற்றிக் கட்டியுள்ள பிம்பம், அதைக் கேள்வி கடந்த புனித நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஆனால், அவ்உருவாக்கம் இயல்பாக நிகழவில்லை. திட்டமிட்டு உருவாக்கிக் காலங்காலமாய்த் தக்கவைத்துப் பொய் மேற் பொய் தடவி வளர்த்தெடுத்ததாகும். அமெரிக்காவில் 1920களின் போக்கிலேயே பெண்களுக்கு வாக்குரிமை முழுமைபெற்றது. 1960 கள் வரை பெரும்பாலான கறுப்பின அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. மார்டின் லூதர் கிங், மல்கம் எக்ஸ் போன்றோரின் இடையறாத போராட்டமே அவர்களுக்குத் தேர்தல்களில் வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கியது. இருந்தும் கறுப்பினத்தவர்களின் முழுமையான தேர்தல் பங்குபற்றலைப் பல இடங்களில் வெள்ளையர் பெரும்பான்மை விரும்பவில்லை. இன்னமும் பல ஆயிரம் கறுப்பினத்தவர்களின் வாக்குரிமை நடைமுறையில் சவாலுக்குட்படுகிறது.

இம்முறை அமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்கக்கூடியோரில் ஆறு மில்லியன் அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. எளிதாகச் சொல்லின், 40 பேரில் ஒருவருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் குற்றம் நிறுவப்பட்டு, தண்டனை பெற்றோருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. கறுப்பின அமெரிக்கர்கள் தண்டிக்கப்படுவது அதிகம்; 13 கறுப்பினத்தவர்களில் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டிக்கப்படுகிறார். கறுப்பினத்தவர்கள், ஸ்பானியர்கள், ஆசியாவைச் சேர்ந்தவர்கள் மீதான நிறத்துவேஷம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதை இது சுட்டுகிறது. உலகின் மொத்த சனத்தொகையில் ஐந்து சதவீதத்தை மட்டுமே அமெரிக்கா கொண்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில் சிறையில் இருப்போரில் 25 சதவீதமான பேர் அமெரிக்கச் சிறைகளில் இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை நீண்ட போராட்டங்களின் விளைவாகும். 1776 ஆம் ஆண்டு அமெரிக்கா தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்தபோது 21 வயதுக்கு மேற்பட்ட சொத்துடைய வெள்ளையின புரட்டஸ்தாந்து மத ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. 1787 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியல் யாப்பு வரையப்பட்டபோது, வாக்குரிமைத் தகுதி பற்றிப் பொது உடன்பாட்டை எட்ட இயலவில்லை. இதனால் அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலமும் தனக்கேற்றபடி வாக்களிப்பு உரிமை பற்றித் தீர்மானிக்கலாம் என ஏற்கப்பட்டது. இதன்கீழ் கறுப்பின அடிமைகள் பலர் வாழ்ந்த தென் மாநிலங்களில் வெள்ளையின காணிச்சொந்தக்கார ஆண்களுக்கே வாக்குரிமை இருந்தது. 1790 இல் நிறைவேறிய அமெரிக்கக் குடியுரிமைச் சட்டப்படி, சுதந்திரமான வந்தேறுகுடிகளுக்கு (அதாவது அடிமையல்லாத வெள்ளையருக்கு) குடியுரிமை உறுதியானது. 1828 இல் வாக்குரிமைக்கு மத அடிப்படை விலக்கப்பட்டது. இதனால் மத அடிப்படையிலான பாகுபாடு நீங்கினும், 1876 இல் அமெரிக்காவின் தொல்குடியினருக்கு குடியுரிமை வழங்கவியலாது என நீதிமன்றம் தீர்த்தது. 1920 ஆம் ஆண்டிலேயே பெண்களுக்கு முழுமையாக வாக்குரிமை வழங்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டுதான் குறைந்தபட்ச வாக்களிப்பு வயது 21 இலிருந்து 18 ஆகக் குறைந்தது. இவ்வாறு அமெரிக்க ஜனநாயகம் நெடுங்காலமாக மட்டுப்பட்டே இருந்துள்ளது.

இம்முறை தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளின்டன், டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் சாதாரண அமெரிக்க பொதுமக்களின் பிரதிநிதிகளல்ல. இருவரும் அமெரிக்காவின் உயர் அடுக்குகளின் வெவ்வேறு சிந்தனைக்கூடங்களின் பிரதிநிதிகளாவர். கொள்கையில் இருவருக்கும் வேறுபாடுகள் குறைவு. தேர்தல்களில் போட்டியிடுவோர் முதலாக வெற்றி பெறுவோர் வரை அனைத்தையும் நிதிமூலதன உடைமையாளர்களான பல்தேசியக் கம்பெனிகளும் அமெரிக்க உயரடுக்குகளுமே தீர்மானிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஹிலரி கிளின்டன், அவரது தேர்தல் பிரசாரச் செயலாளரான ஜோன் பொடொஸ்டா ஆகியோரின் மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் அண்மையில் வெளியிட்டது. இவை இத்தேர்தலில் அமெரிக்க உயரடுக்களின் விருப்பத்தைக் கோடுகாட்டியதோடு அமெரிக்க அரசியலில் அவர்களின் செல்வாக்கையும் காட்டியது.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒபாமாவின் மின்னஞ்சல் ஒன்று 2008 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிகழ ஒரு மாதம் முன் அமெரிக்காவின் அதிபெரிய வங்கிக் குழுமமான ‘சிட்டிக்ருப்’ (Citigroup) ஒபாமா ஜனாதிபதியானதும் நியமிக்க வேண்டிய அமைச்சரவைப் பெயர்ப் பட்டியலை அனுப்பியிருந்தது. இம் மின்னஞ்சலை அப்போது ஒபாமாவின் பிரசாரச் செயலாளராக இருந்த ஜோன் பொடொஸ்டா ‘சிட்டிக்ருப்பின் கோரிக்கை’ எனக் குறித்து ஒபாமாவுக்கு அனுப்பினார். 2009 ஜனவரியில் பதவியேற்ற ஒபாமாவின் அமைச்சரவை ‘சிட்டிக்ருப்’ அனுப்பிய பட்டியலை ஒத்திருந்தமை தற்செயலல்ல.

இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் 2000 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தல் வெற்றியாளரை வெறும் 500 வாக்குகள் தீர்மானித்தன. புளோரிடா மாநில முடிவுகள் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது. அம்மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான போது குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் புஷ், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரை விட 537 வாக்குகள் அதிகம் பெற்று வென்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்குகளை மீள எண்ணுமாறு அல் கோர் கேட்டபோது புளோரிடா மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஜோர்ஜ் புஷ்ஷின் சகோதரர் ஜெப் புஷ் மறுக்கவே, அதற்கெதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றின் உதவியை அல் கோர் நாடினார். 5-4 என்ற பிரிந்த தீர்ப்பில் மீள எண்ண அனுமதிக்கக் கூடாது என முடிவாகியது. இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், புஷ்ஷுக்கு ஆதரவாகத் தீர்ப்பெழுதிய ஐந்து நீதிபதிகளும் புஷ்ஷின் தந்தையார் ஜனாதிபதியாக இருந்தபோது உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டோராவர். அவ்வாறே, அல் கோருக்கு ஆதரவான நால்வரும் பில் கிளின்டனின் உபஜனாதிபதியாக அல் கோர் இருந்தபோது கிளின்டன் நியமித்தவர்கள். மொத்தத்தில் அரசியல் காரணிகளே அமெரிக்க ஜனாதிபதியைத் தீர்மானிக்கிக்கின்றன அன்றி மக்களின் வாக்குகள் அல்ல.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஒரு புறம் அமோகமாக நடந்தாலும் அதே அமெரிக்காவில் அதிகம் தெரியாத இருண்ட மறுபாதி ஒன்றுண்டு. 2015 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடின்றி வீதிகளில் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஒரு வருடத்துக்கும் மேலாக வீதிகளில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் எந்த அடிப்படை வசதியையும் வழங்குவதில்லை. வீதிவாசிகளில் பெரும்பாலானோர் பட்டினியால் வாடுகிறார்கள். தினமும் குப்பை வாளிகளைக் கிளறுவதே இவர்களது பிரதான பணியாகும். நடுத்தெருவில் விடப்பட்ட இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் ஒருபுறம் வேலையின்மை, இன்னொருபுறம் சமூகநல உதவிகள் கிடையாமை என உயிர் வாழ்கிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்காக ஹிலரி கிளின்டன் திரட்டிய தொகை கிட்டத்தட்ட 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். டொனால்ட் ட்ரம்ப் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திரட்டியுள்ளார். அமெரிக்காவில் நிலவும் ஏற்றதாழ்வுக்கு இதிலும் சிறந்த உதாரணத்தைத் தேடல் அரிது.

இதைவிட விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஹிலரி கிளின்டனின் மின்னஞ்சல் தகவல்கள் அரசியல் தரகு எவ்வாறெல்லாம் நடைபெறுகிறது எனவும் போர்கள் யாருக்காக நடக்கின்றன எனவும் அயலுறவுக் கொள்கைகள் எவரின் நலன்களைப் பிரதிபலிக்கின்றன எனவும் விளக்கமாக எடுத்துரைக்கின்றன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனை ஐந்து நிமிடங்கள் சந்திப்பதற்கு கட்டார் பிரதிநிதியொருவர் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறார். மொராக்கோவில் ஓர் இராப்போசன விருந்தில் பங்குபெற ஹிலரி கிளின்டனுக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றன. இவ்வளவு தொகைப் பணம் ஏன், எதற்காக வழங்கப்பட்டது? அதற்கான பிரதியுபகாரம் என்ன? இவை சிந்தனைக்குரிய கேள்விகள்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதி இழிவான தேர்தல் பிரசாரமாக இம்முறை நடந்த பிரசாரம் கருதப்படுகிறது. சாரமற்ற குற்றச்சாட்டுகளும் பதில் குற்றச்சாட்டுகளும் நிறைந்ததாகவே பிரசாரம் இருந்தது. கிளின்டன் பரம்பரையின் இன்னொரு வழித்தோன்றலாகவும் பல்தேசியக் கம்பெனிகள், சர்வதேச ஆயுத நிறுவனங்கள், வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், ஊடகங்கள், உளவுத்துறை ஆகியவற்றின் விருப்புக்குரிய தெரிவான ஹிலரி கிளின்டனுக்கும் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி நட்சத்திரமும் ஊகவணிக கட்டட விற்பனைத் துறைகளின் முக்கிய புள்ளியுமான டொனால்ட் ட்ரம்புக்கும் இடையிலான தெரிவு ஒருபோதும் சாதாரண மக்களின் நலன்கள் சார்ந்திருக்கவில்லை; இருக்க நியாயமுமில்லை.

எட்டு ஆண்டுகளுக்கு முன் பராக் ஒபாமா ஜனாதிபதியான போது, அதையொட்டி எழுந்த நம்பிக்கைகளை இங்கு நினைவுகூரலாம். வெள்ளை இனவெறியை மீறி அவர் வென்றார் என்ற செய்தி விதைத்த நம்பிக்கைகளுக்கு என்ன நடந்தது என்பதை மீட்டுப்பார்த்தல் தகும்.

ஒருபுறம் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடக்கையில் மறுபுறம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் நடக்கின்றன. பிலடெல்பியா மாகாணத்தில் 5,000 போக்குவரத்துப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அமெரிக்காவின் ஆறாவது பெரிய போக்குவரத்து சேவை இவ் வேலை நிறுத்தத்தால் ஸ்தம்பித்துள்ளதுடன் 1.5 மில்லியன் பயணிகளின் போக்குவரத்து முற்றாகத் தடைபட்டுள்ளது. அதைவிடப் பல்வேறு பல்தேசியக் கம்பெனி ஊழியர்களும் அரசாங்க ஊழியர்களும் எனப் பலரும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.

அமெரிக்க ஜனநாயகம் பாரிய நெருக்கடியில் உள்ளது. ஹிலரி கிளின்டனும் டொனால்ட் ட்ரம்பும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தெரிவானமை அந்நெருக்கடியின் ஒரு துணைவிளைவே. அமெரிக்க ஜனநாயகத்தை இயக்கும் அதிகார வர்க்கம் வேண்டுவது தம் சார்பில் ஆள ஒரு பொம்மை. அப்பொம்மை எந்த முகமூடியையும் சூட வல்லது.

அமெரிக்கா பற்றிக் கட்டமைந்துள்ள விம்பம் அதன் மென்மையானதொரு நிழல் மட்டுமே. அதன் நிஜம் பல கோரமான பக்கங்களை உடையது. ஊடக ஒளியில் புதிய அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்கும் போது நம்பிக்கையின் ஒளிவீச்சுக்கள் பற்றிய வெற்றுப் புகழுரைகள் ஊடகவெளியை நிரப்பும். அதன் மூலம் அமெரிக்கா என்ற உலகப் பொலிஸ்காரன் மீது புதிய நம்பிக்கை தோற்றுவிக்கப்படும். உண்மையில் தோற்றோரான மக்கள் எந்த ஊடகக் கண்களுக்கும் படாமல் கரைந்து போவார்கள்.

அமெரிக்காவின் சுதந்திரச் சிலையை இன்னொருமுறை உற்று நோக்கின் அமெரிக்கர்கள் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்தைப் பற்றி சுதந்திர தேவதை என்ன நினைக்கிறார் என ஒருவேளை விளங்க இயலலாம்.