அமெரிக்க தேர்தல் முடிவும் காலப் பயணமும்……! ட்றம் இன் வெற்றியும் எதிரொலிக்கும் ஏமாற்றங்களும்….!!

(சாகரன்)

அமெரிக்க தேர்தல் முடிவும் காலப் பயணமும்……! ட்றம் இன் வெற்றியும் எதிரொலிக்கும் ஏமாற்றங்களும்….!!
(விஞ்ஞானத்துடனான அமெரிக்க தேர்தல் பார்வை சலிப்பூட்டினால் மன்னிக்கவும்)

காலப் பயணம் (Time travel) கால இயந்திரம் (Time machine) என்பன தற்போது நடைமுறையில் உள்ள மூன்று பரிமாணத்தில் (முப்பரிமாணம்) இருந்து நான்காவது பரிமாணம் என்ற மாற்றத்தின் அடிப்படையில் உருவான விஞ்ஞான நம்பிக்கைகள் ஆகும். இதில் நீளம்(L), அகலம்(W), உயரம்(H) என்ற முப்பரிமாணத்திற்கு அப்பால் நான்காவது பரிமாணமாக நேரம்(T) (time) இணைக்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானம் நம்புகின்றது. எமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் ஏனைய சூரியகக் குடும்பங்களுக்கு செல்லும் போது இந்த நான்காவது பரிமாணத்திற்கு உண்மையான அர்த்தம் உண்டு, ஏன் தேவையும் உண்டு என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த விஞ்ஞான நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்காலத்தில், நாம் எமது கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் என் முன்னிலையில் உண்மையாக கொண்டு வர முடியும் என நம்புகின்றனர். தமிழ் நடிகர் சூரியா நடித்து வெளியான ’24’ திரைப்படத்தில் இந்த விஞ்ஞான நம்பிக்கை மூலக்கதையாக கையாளப்பட்டது. ஆங்கிலத்தில் 2014 வெளிவந்த ‘Interstellar’ என்ற ஆங்கிலத் திரைப்படம் இந்த விஞ்ஞான நம்பிக்கையை மூலக்கதையாக கொண்டு உருவானதாகும். இதற்கான விஞ்ஞான அடிப்படை காலப்பயணம் (disambiguation) என்றும் இதனை நாம் கொண்டு வருவதற்கு தேவையான இயந்திரத்தை கால இயந்திரம் என்றும் அழைக்கின்றனர்.

இதன் அடிப்படையில் கடந்த காலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்து உலகின் மிகவும் கொடூரமான சிலரை அவர்களின் சிறு பிராயத்திலேயே இல்லாமல் செய்திருந்தால் உலகிற்கு ஏற்பட்ட அழிவுகளைத் தவிர்த்திருக்க முடியும் என்று நம்புகின்றனர். இதில் முதன்மை பெறுபவர் ஜேர்மனியின் நாஜித் தலைவர் ஹிட்லர் ஆவார். இவர் செய்த மனிதப் படுகொலையும், உலகம் முழுவதையும் தன்னாட்சிக்குள் கொண்டுவருவதற்கான பேராசையும், யூத இனத்தவரை பெரிய அறைகளுக்குள் பூட்டி நஞ்சுவாயுவைச் செலுத்தி கொன்றது இன்று வரை வெறுக்கப்படும் ஒன்றாக உலக மக்களால் பார்க்கப்படுகின்றது.

இந்த வரிசையில் அமெரிக்க தேர்தல் முடிவுகளின் பின்பு டொலாட் ட்றம் ஐ ஊடகங்கள் சில இணைத்துப் பேசுவது இவரின் தேர்வில் உலக மக்களும், அமெரிக்க மக்களும் எவ்வளவு திருப்த்தியின்மையுடன் இருக்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. உலக நாடுகள் இவரின் வெற்றிக்கு இராஜதந்திர உறவு அடிப்படையில் மரியாதைக்காக வாழ்த்துக்கள் தெரிவித்தாலும் அந் நாட்டுப் பத்திரிகைகள் தமது ஏமாற்றங்களையும், எதிர்காலம் பற்றி அஞ்ச உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றன.

ரஷ்ய தலைவர் பூட்டின் வரவேற்று இருப்பதாக வெளியிட்ட செய்தியில் ஒரு மோசமான அமெரிக்க ஜனாதிபதி முகம் மூலம் அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் உலக மக்களிடம் அம்பலப்பட்டுப் போகும் வாய்பை பெற்றிருக்கின்றது என்ற செய்தி தொக்கு நிற்பதை அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சமாதான முகத்துடனான கனவான் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் அமெரிக்கா அம்பலப்பட்டு போகும் வேகத்தை விட இதற்கு எதிர் மறையான ஒருவரின் தெரிவு தமது வேலைகளை இலகுவாக்கும் என்று ரஷ்யா நம்புகின்றது. இப்படித்தான் ரஷ்யாவின் வரவேற்பை பார்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

(இன்று காலையில் CBC செய்தி சேவையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் Time Travel: A History என்ற புத்தகத்தின் ஆசிரியர் James Gleick இன் பேட்டி இக்கட்டுரையை எழுத என்னைத் தூண்டியது)